Last Updated : 19 Nov, 2022 05:17 PM

1  

Published : 19 Nov 2022 05:17 PM
Last Updated : 19 Nov 2022 05:17 PM

இரண்டாவது குழந்தை பிறக்கும்போது முதல் குழந்தையை அணுகுவது எப்படி? - ஓர் உளவியல் வழிகாட்டுதல்

பிரதிநிதித்துவப் படம்

ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும் மாபெரும் கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அத்தகைய ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்கு இன்றியமையாத பங்கு நம் குடும்பம்தான். ஆரோக்கியமான சூழலில் வளரும் குழந்தைகள் நம் சமுதாயத்தினை மேலும் வளமாக மாற்றி அமைப்பார்கள் என்பது உறுதி. அந்த வகையில் முதல் குழந்தைக்கும், அடுத்து பிறக்கும் குழந்தைக்குமான உறவு பாலத்தை செப்பனிடுவது என்பது பெரும் உளவியல் சார்ந்த பிரச்சினை. அதனைச் சரியாகக் கையாண்டால் மட்டும்தான் அவர்கள் ஒருவரின் மீது ஒருவர் வெறுப்புக் கொள்ளாமல் அன்பு செய்து வளர ஏதுவாக அமையும். இதுகுறித்து மனநல மற்றும் மகப்பேறு ஆலோசகர் டீனா அபிஷேக் பகிர்ந்தவை:

“பொதுவாக என்னிடம் கேட்கும் கேள்விகளில் இதுவும் ஒன்று... “என்னோட மூத்த பையன் எங்கள் வீட்டுக்கு வருபவர்களிடம் ‘எங்க அம்மா கர்ப்பமாக இருக்கிறார்கள்’ என்று மிக ஆர்வமாக சொல்கிறான். எனக்கு இது பயமாகவும், கவலையாகவும் உள்ளது. எப்படி இரண்டு குழந்தைகளையும் சமாளிக்கப் போகிறேன் என்றே தெரியவில்லை” என்பனவாக இப்படி பல கேள்விகள்.

குழந்தைகள் ஏன் இவ்வளவு ஆர்வமாக இதைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள்? அவற்றை எப்படி மேற்கொள்வது என்பது பற்றி சிக்மண்ட் ஃப்ராயிடு (SIGMUND FREUD) சில கோட்பாடுகளை தனது ஆராய்ச்சிகளின் மூலம் உலகிற்கு நிரூபித்தார். அவர் `மாடர்ன் சைக்காலஜியின் தந்தை` எனவும் அழைக்கப்படுகிறார். அவரது கோட்பாடுகளில் 3 முதல் 5 வயது குழந்தைகள் பாலிக் (PHALLIC) என்ற அவர்களது உலகத்தில் ஆண், பெண் என்ற இருபாலருக்கும் இருக்கும் வேற்றுமையை உணர்வார்கள். அது அவர்களின் கற்பனை வளம் மிகுந்த உலகில் பல கேள்விகளை எழுப்ப ஓர் உந்து சக்தியாகும். இத்தகைய கேள்விகளைக் குழந்தைகள் தொடர ஆரம்பிப்பார்கள். இதற்கு பெற்றோர்களாகிய நாம், நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்வது ஆரோக்கியமான உரையாடலுக்கு வழிவகுக்கும்.

இரண்டாவது குழந்தைக்கு தாயாகும்போது அல்லது எதிர்பாராமல் கருவுற்று இருந்தாலும் 40 வார கால இடைவெளி நமக்கு உள்ளது. அதைப் பயன்படுத்திக் கொள்ளமுடியும். இரண்டாவது குழந்தை வருவதற்கு முன்பே, நீங்கள் உங்கள் முதல் குழந்தையிடம் அவர்கள் தாயின் வயிற்றில் இருந்தபோது எடுத்த ஸ்கேன் படங்களைக் காண்பித்து அல்லது குழந்தையின் கையினை எடுத்து வயிற்றுப் பகுதியின் மீது வைத்து, ‘பாப்பா இங்கதான் வயிற்றுக்குள்ள, ரொம்ப குட்டி பாப்பாவா இருந்தீங்க. அம்மா, அப்பா, தாத்தா எல்லோரும் ரொம்ப ஆசையா நீங்க எப்ப எங்களோட விளையாட வருவீங்கன்னு பார்த்துக்கிட்டே இருந்தோம். ரொம்ப குட்டியா, ரொம்ப ரொம்பச் சின்ன விரல்கள், ரொம்ப மிருதுவான சருமம், குட்டி கண்கள், சின்ன கால் பாதம், சொல்லவே முடியாத அளவுக்கு ஒரு நறுமணமாக அம்மாவோட வயிற்றுக்குள்ளே இருந்து வெளியே வந்தீங்க’ என்று நீங்க சொல்லி முடிக்கும்போதே... ‘அம்மா எனக்கும் வயிற்றுக்குள்ள குட்டி பாப்பா வேணும்’னு கேட்பாங்க... அப்ப அவங்ககிட்ட எளிதாக உரையாடலைத் தொடரலாம்.

குழந்தைங்களோட உலகம் மிகவும் அழகானது. அவங்களோட பேசும்போது ரொம்ப அன்பான கண்களோடு, அவங்க கைகளை பிடித்து, உங்கள் உரையாடலை தொடங்குங்கள். நிச்சயமாக அவங்க நீங்க என்ன சொல்றீங்களோ அதை ரொம்பச் சுலபமாகப் புரிந்துகொள்வார்கள். உங்க வீட்டுக்கு இன்னும் ஒரு `குட்டி தேவதை` வரப்போவதை கொண்டாட்டமாக அந்தக் குழந்தைக்கு சொல்லுங்க. அப்பாவும், அம்மாவும் ஒரு சர்ப்ரைஸ் வைத்திருக்கிறோம் என்றுகூட தொடங்கலாம். குழந்தையோடு சின்ன கையெடுத்து உங்க மனைவியோட வயிற்றில் வைத்து அப்புறம் அண்ணா அல்லது அக்கா உங்ககூட நான் விளையாட சீக்கிரமாக வரப் போகிறான்(ள்) என்று சொல்லிப் பாருங்கள் அவ்வளவுதான். மனதிற்குள் பொங்கிவரும் மகிழ்ச்சியை குழந்தையிடம் காணமுடியும். வளரும் குழந்தை சந்தோஷத்தில் துள்ளிக் குதித்து புதிய வரவை எதிர்நோக்க ஆரம்பிக்கும். பிறந்த குழந்தையை அரவணைக்கும் அன்பு, இந்தக் குழந்தைக்கு அதிகமாக உருவாக இது மிக உறுதுணையாக இருக்கும்.

டீனா அபிஷேக்,
மனநல மற்றும் மகப்பேறு ஆலோசகர்

குழந்தை பிறந்த பிறகு: ஒரு பரிசுப் பொருளை உங்கள் முதல் குழந்தைக்கு கொடுத்து, கட்டி அணைத்து அண்ணாவிற்கு வாழ்த்துகள் என்று முத்தமிடுங்கள். தாய்ப்பால் கொடுக்கும்போது அந்த முதல் குழந்தையை வெளியே அனுப்பி கதவை பூட்டவேண்டிய அவசியமில்லை. நீங்கள் தாராளமாக தாய்ப்பால் ஊட்டலாம். அப்போது அவர்கள் கேட்கிற கேள்விகளுக்கு சரியான பதிலை குழந்தையின் புரிதலுக்கு ஏற்றார்போல் சொல்லித் தெரிய வையுங்கள். ஆண் குழந்தையாக இருந்தால் தாய்மையின் மகத்துவத்தையும் பெண்களின் மேல் அதிக மரியாதையும் இது உருவாக்கும். மேலும் இது ஆரோக்கியமான சமுதாயத்திற்கு ஊன்றுகோலாக அமையும்.

குழந்தையைப் பார்க்கச் செல்கின்ற விருந்தினர்கள் சிறிய பரிசுப் பொருளை முதல் குழந்தைக்கும் சேர்த்து வாங்கிச் செல்லுங்கள். குறிப்பாக பெரிய குழந்தையிடம், ‘நீ பெரியவன்தானே அவள் சிறிய குழந்தை... நீதான் விட்டுக் கொடுக்க வேண்டும்’ என்று கூறும்போது, ஒரு வெறுப்பு மனப்பான்மை உருவாகிவிடும். 20 வயது ஆனாலும் 30 வயது ஆனாலும் அம்மா அப்பாவிற்கு என்றும் குழந்தையாக இருக்கவே நம் மனம் ஏங்குகிறது. அப்படியிருக்க 5 வயது குழந்தையிடம் பெரியவன் என்று சொல்லி, நாம் அவனை அடக்கி வைக்கக்கூடாது.

இன்னும் பல வீடுகளில் முதல் குழந்தை, இரண்டாவது குழந்தையை கிள்ளி விடுவது என பல விஷயங்களை அரங்கேற்றுவது வழக்கம். அவர்கள் பஞ்சாயத்தைத் தீர்த்து வைப்பதற்குள் நமக்கு தலையே கிறுகிறுத்துப் போய்விடும். எப்படி இதை சரி செய்வது…

கர்ப்பக் காலத்தில் இருந்தே எல்லாவற்றையும் பொறுமையாக பேசத் தொடங்க வேண்டும். உதாரணத்திற்கு, முதல் குழந்தை மூன்றிலிருந்து ஐந்து வயது அல்லது அதைவிட சிறிய குழந்தை என்றே வைத்துக் கொள்வோம். ஒரு குழந்தையின் உலகத்தில் மிக முக்கியமான ஓர் அங்கம் தாயாவாள். அவளை யாரும் பங்கு போட்டுக் கொள்ள விரும்பாத இந்த சின்ன இதயம், தான் மட்டுமே உலகமாக நினைக்கும் தாய்க்கு, மற்றுமொரு உயிரும் சொந்தம் என்பதை நினைவில்கூட அனுமதிக்காது.

இதனை மாற்றுவதற்கு, தந்தையின் பங்கு ஆகச் சிறந்தது. எனக்கு மட்டுமே சொந்தமான தாயின் மடி தற்போது புதிய வரவான குழந்தைக்கு, அதிக நேரம் உரித்தாகிறது. சரி தூங்கும்போது அம்மாவின் மூச்சுக் காற்றில் வரும் வாசனையில் தூங்கலாம் என்றால் அதற்கும் வழியில்லை. அங்கேயும் பெரும்பான்மையைப் புதுவரவு குழந்தைப் பிடித்துக்கொள்வதால் கோபத்தை வெளிக்காட்டும் இந்த சிறிய உள்ளம். ஆனால், நாம் அவ்வளவு அழுத்தத்தையும், என்ன உனக்கு சொன்னா புரியாதா? அவனுக்கு எதுவும் தெரியாது என்று இந்த குழந்தையின் மீது கோபப்படுவதை தவிர்க்க வேண்டும்.

இரண்டாவது குழந்தைப் பிறக்கும்வரை செல்லப் பிள்ளையாக இருந்த குழந்தை, இப்போது எப்படி இதனைக் கையாள்வது என்று அறியாது முழிக்கும். வீட்டுக்கு வரும் மாமா வந்தவுடன் என்னடா என கேட்டுவிட்டு தன்னைக் கண்டுகொள்ளாமல், நேராக உள்ளேப் போய், தன் தங்கச்சிப் பாப்பாவை தூக்கி கொஞ்சுவதைப் பார்க்கும் இந்த முதல் குழந்தையின் கண்கள் குளமாக இதனை யாரிடம் சொல்வது என்று அறியாது நிற்கும் அந்த முதல் குழந்தை. குழந்தையால் இந்த திடீர் மாற்றத்தை உடனே சரியாக புரிந்து கொள்ள இயலாது. மாறாக, இந்த புதிய வரவினால்தான் எல்லோரும் தன்னை வெறுக்க ஆரம்பித்து விட்டார்கள் என்று நினைத்து தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ளும் அந்த சிறு இதயம்.

இதில் தந்தையின் பங்கு மிக அவசியமான ஒன்று. பெரும்பான்மையான குடும்பங்களில் பிள்ளைப் பேறு காலத்தில் பெண்கள் தாய் வீட்டில் இந்த நேரங்களைச் செலவழிப்பது வழக்கம். இதனால் இதில் தந்தையின் பங்கு பெருமளவில் இருப்பதில்லை. எனக்கு இங்கு வேலை இருக்கிறது நீயே பார்த்துக்கொள் என்று கூறுபவர்களும் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். இத்தகைய நிலையில் இந்த சிறு இதயத்திற்கு அதிக அன்பும் அரவணைப்பும் கிடைக்கும்போது, புதியவர் மீது கண்டிப்பாக வெறுப்பும் கோபமும் வருவது என்பது சாத்தியமில்லை. அம்மாவின் அன்பிற்காக ஏங்குவதால் தினமும் நேரம் இருக்கும்போதெல்லாம் அன்பு நிறைந்த பார்வையும், மென்மையான தொடுதலும் கைகளைக் கோர்த்து நீ தான் என் உலகம்… அம்மா உனக்காகவே உயிர் வாழ்கிறேன்… நீ தான் எனக்கு எல்லாமே என்று இறுக்கி அணைத்து முத்தம் இட்டால் நிச்சயமாக அவர்கள் மகிழ்ச்சியாக புதிய வரவை ஏற்றுக் கொள்வார்கள்.”

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x