

பெங்களூரு: ஆட்டோவில் பயணித்த பயணி ஒருவர் தனது ஆப்பிள் ஏர்பாடை தவறவிட்டுள்ளார். அதை கவனித்த அந்த ஆட்டோ ஓட்டுநர் சம்பந்தப்பட்ட பயணியிடம் மீண்டும் பத்திரமாக திரும்பக் கொடுத்துள்ளார். அதற்கு தொழில்நுட்பத்தின் துணையை நாடியுள்ளார் அந்த கில்லாடி ஆட்டோக்காரர். அது எப்படி என்பதை பார்ப்போம்.
ஆட்டோக்களில் பயணிக்கும் பயணிகள் தங்கள் உடமைகளை சில நேரங்களில் தவற விடுவது வழக்கம். சமயங்களில் ஆட்டோ ஓட்டுநர்கள் அந்த உடமைகளை பயணிகளிடம் பத்திரமாக ஒப்படைப்பர். சில நேரங்களில் அதற்கு போலீசாரின் உதவியை நாடுபவர்களும் உண்டு.
இந்தச் சூழலில் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் பணியாற்றி வரும் சிடிகா எனும் பெண் தான் பணியாற்றும் நிறுவனத்திற்கு ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது தனது ஆப்பிள் ஏர்பாடை தவறவிட்டுள்ளார். சில நேரத்திற்கு பிறகு அதை கவனித்த ஆட்டோ ஓட்டுநர், அதனை உரிமையாளரிடம் பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் என நினைத்துள்ளார்.
அதன்படி தனக்கு இருக்கும் தொழில்நுட்ப ஞானத்தை பயன்படுத்தி உள்ளார். தனது போனில் அந்த ஏர்பாடை Pair செய்த ஆட்டோ டிரைவர் அதில் வரும் பெயரை குறித்துக் கொண்டுள்ளார். தொடர்ந்து அந்தப் பெயரை தனது போன்பே பரிவர்த்தனையில் இருக்கிறதா என பார்த்துள்ளார். அதில் சிடிகா பெயர் மேட்ச் ஆகியுள்ளது.
அவரை எங்கு டிராப் செய்தோம் என்பதை நினைவுகூர்ந்து அந்த அலுவலகத்தின் காவலாளியிடம் விவரத்தை சொல்லி ஒப்படைத்துள்ளார். பின்னர் அதை பெற்றுக்கொண்ட சிடிகா, இதனை ட்விட்டர் தளத்தில் பகிர்ந்திருந்தார். அந்த ட்வீட் சுமார் 9 ஆயிரம் லைக்குகளை கடந்து சென்றுள்ளது.
‘அந்த ஆட்டோக்காரரின் மனசுதான் சார் கடவுள்’ என ட்விட்டர் பயனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.