

இளைஞர்கள் அதிகம் உள்ள நாடாக இந்தியா உள்ளது. ஆனால், இந்தியாவில் இளைஞர்களும் அதிக அளவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இது தொடர்பாக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் சர்க்கரை நோய் துறை தலைவர் டாக்டர் வெங்கோ ஜெயபிரசாத் கூறியதாவது: பல்வேறு வகையான உணவு வகைகள் இளைஞர்களுக்கு தற்போது எளிதில் கிடைக்கின்றன. ஆன்லைனில் ஆர்டர் செய்தால், உணவு வீடு தேடி வருகிறது. குழந்தைகளுக்கு எந்தவகை உணவுகளை அளிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்படுவதில்லை. குழந்தைகளே ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிட பெற்றோர் அனுமதிக்கின்றனர். அவர்கள் நினைத்ததை வாங்கி உட்கொள்கின்றனர்.
நீண்டகால அடிப்படையில் இந்தப் பழக்கம் குழந்தைகளின் உடலுக்கு கேடு விளைவிக்கும். பள்ளி அளவிலேயே சரியான உணவுப்பழக்கத்தை கற்றுத்தர வேண்டும். அப்போதுதான் எதிர்கால பாதிப்புகளை தவிர்க்க முடியும். மேற்கத்திய நாடுகளில் சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் நபர்களைவிடவும், 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்தியர்கள் சர்க்கரைநோயால் பாதிக்கப்படுகின்றனர். இது ஒரு தனிபர் சார்ந்த பிரச்சினை மட்டுமே இல்லை. இந்திய பொருளாதாரத்திலும் அது தாக்கத்தை ஏற்படுத்தும். கரோனாவைவிட அதிக விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, எந்த வகை உணவை தினமும் உட்கொள்கிறோம் என்பதில் கவனம் தேவை. இளைஞர்கள் தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம்.
அறிகுறிகள் என்ன?: திடீரென உடல் எடை அதிகரித்து, குறைதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், உடல்சோர்வு, நாக்கு வறண்டுபோதல், தேவைக்கு அதிகமாக சாப்பிடுவது போன்றவை நோயின் அறிகுறிகள் ஆகும். ஆனால், சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் 70 சதவீத இளைஞர்களுக்கு அறிகுறிகளே இல்லாமல் பாதிப்பு இருக்கிறது. அதுபோன்ற நபர்களை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிப்பது அவசியம். உடல்பருமான உள்ளவர்கள், உடலுழைப்பு ஏதும் இல்லாமல் இருப்பவர்கள் இந்நோய்க்கு இலக்காக உள்ளனர்.
'ரிவர்சல் டயபடீஸ்' என்பதை பல இடங்களில் தற்போது விளம்பரப்படுத்தி வருகின்றனர். உணவு, வாழ்க்கை முறை மாற்றம், மருந்து, மாத்திரைகள் மூலம் சர்க்கரை நோய் இல்லாமல் ஆக்குவோம் என கூறுகின்றனர். இந்தமுறையில் 5 ஆண்டுகள் வரை சர்க்கரை நோய் வர வாய்ப்புகள் இல்லை. ஆனால், 5 ஆண்டுகள் கழித்து மீண்டும் சர்க்கரை நோய் வர வாய்ப்புள்ளது. இந்த முறையில் உடலுழைப்புக்கு தேவையான கலோரிகளை விடவும் குறைவான கலோரி உள்ள உணவுகளை பரிந்துரைக்கின்றனர்.
இதனால், நீரிழப்பு, சிறுநீரக பாதிப்பு போன்றவை ஏற்படலாம். இன்டர்நேஷனல் டையபடிக் ஃபோரம், டபிள்யுஎச்ஓ ஆகியவை இந்த முறையை பரிந்துரைக்கவில்லை. இந்த முறையை பின்பற்றும்போது சிலர் திடீரென ஏற்கெனவே எடுத்துவந்த மருந்து, மாத்திரைகள் நிறுத்திவிடுகின்றனர். அதனாலும் பாதிப்பு ஏற்படுகிறது.
மாறுபடும் உணவுமுறைகள்: ஒவ்வொருவரின் ஜீரண சக்தியின் அளவும் வேறுபடும். எனவே, சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவோர் தங்கள் உடலுக்கு ஏற்ற உணவு வகைகளை மருத்துவரின் பரிந்துரைப்படி உட்கொள்ள வேண்டும். பேலியோ டயட், வேகன் டயட் என பல்வேறு உணவுமுறைகள் உள்ளன. ஆனால், பொத்தாம் பொதுவான ஒரு உணவுமுறையை சர்க்கரை நோயாளிகள் பின்பற்றக்கூடாது. பேலியோ டயட் என்பது சிறுநீரக நோயாளிகள் போன்றோருக்கு ஆபத்தானது. ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு சிலவகையான வேகன் டயட் ஆபத்தானது.
ஒவ்வொரு உணவுமுறையிலும் அதன் விளைவுகள், பக்கவிளைவுகளை அறிந்து, ஆராய்ந்து, கவனமாக பின்பற்ற வேண்டும். முன்பெல்லாம் மருத்துவர் ஒரு குறிப்பிட்ட மருந்துகளை அளித்துவிடுவார். அதற்கேற்ப நோயாளிகள் உணவை மாற்றிக்கொள்ள வேண்டிய நிலை இருந்தது. தற்போது அப்படி இல்லை. பல புதிய மாத்திரைகள் வந்துவிட்டதால், நோயாளியின் உணவு, வாழ்க்கை முறைக்கு ஏற்ப மாத்திரைகளை பரிந்துரைக்க முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இன்று - உலக சர்க்கரை நோய் தினம்