

சேலம்: சேலம் மாவட்டத்தில் இந்தியக் கல்கவுதாரி (பெயின்டட் சாண்டுகிரவுஸ்) என்னும் அரிய வகைப் பறவை, கடந்த 80 ஆண்டுகள் கழித்து உலாவி வருவதை பறவையியல் கழகத்தினர் கண்காணிப்பு பணியின் மூலம் கண்டறிந்து வியப்படைந்தனர்.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக பறவையினங்கள் கணக்கெடுப்பு பணியில் பறவையியல் கழகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு அண்டை மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்து பல வகையான பறவையினங்கள் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வந்து செல்கின்றன. சேலம் மூக்கனேரி, மேட்டூர் நீதிபுரம் ஏரி, தலைவாசல் ஏரி உள்ளிட்ட முக்கிய நீர் நிலைகளிலும், சேர்வராயன் மலைத் தொடர்களிலும் காலச்சூழலுக்கு தக்கவாறு அயல் வாழ்விட பறவையினங்கள் புகழிடம் தேடி வந்து செல்வது வழக்கம்.
இவ்வாறு, சேலம் பறவையியல் கழக இயக்குனர் கணேஷ்வர் தலைமையிலான குழுவினர் கடந்த சில மாதங்களாக சேலம் மாவட்டத்தின் பல்வேறு நீர் நிலைகளில் வந்து செல்லும் பறவையினங்களை கணக்கெடுத்து, குறிப்பெடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, இந்தியக் கல்கவுதாரி என்னும் அரிய வகைப் பறவை, 80 ஆண்டுகள் கழித்து சேலத்தில் உலாவி வருவதை கண்டறிந்து வியப்படைந்தனர்.
இதுகுறித்து சேலம் பறவையியல் கழக இயக்குநர் கணேஷ்வர் பேசுகையில், "சேலம் பறவையியல் கழக குழுவினருடன், மேட்டூர் தாலுகாவில் உள்ள நீதிபுரம் ஏரியில் பறவைகளைக் கண்காணித்து, கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தோம். அப்போது, சேலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள நீர் நிலைகளில் இதுவரை பார்த்திராத சந்தன நிறமுடைய நான்கு பறவைகள் உலாவிக் கொண்டிருந்தது. தொலைநோக்கி உதவியுடன் பறவைகளை பார்த்த போது, மிக அரிதாகவே தென்படக்கூடிய, இந்தியக் கல்கவுதாரிகள் இனத்தை சேர்ந்தது அது என்று உறுதி செய்தோம்.
தமிழகத்தில் இரண்டு வகையான கல்கவுதாரிகள் காணப்படுகின்றன. அதில் செவ்வயிற்றுக் கல்கவுதாரி ஆங்காங்கே பரவலாகத் தென்படுகிறது. ஆனால், தற்போது சேலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள, இந்தியக் கல்கவுதாரி மிகவும் அரிதான பறவையினம். இவை வறண்ட திறந்தவெளி நிலங்கள், கற்கள் நிறைந்த புல்வெளிகள் மற்றும் புதர்காடுகளில் வசிக்க கூடியது. கால்நடை மேய்ப்போரும், உள்ளூர் மக்களும் இந்தப் பறவையைப் பார்த்திருக்கும் வாய்ப்புகள் உண்டு. கடந்த 1942-ம் ஆண்டு, ஆப்ரே பக்ஸ்ட்டன் என்ற ஆங்கிலேயர் சேலத்தில் இருந்த போது, இந்தியக் கல்கவுதாரிகளைப் பார்த்ததாக தனது குறிப்புகளில் எழுதியுள்ளார்.
அதன் பிறகு 80 ஆண்டுகள் கழித்து தற்போது தான், சேலத்தில் இவ்வகையான இந்திய கல்கவுதாரி வந்துள்ளதை புகைப்படத்தின் உதவியுடன் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தைத் தவிர இப்பறவை இனங்கள் தமிழகத்தில் உள்ள நீலகிரி, ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களில் மட்டுமே தென்படுகிறது. தற்போது, இங்கு கண்டறியப்பட்டுள்ள இந்திய கல்கவுதாரி பறவையினங்கள், வாழ்வதற்கு ஏற்ற சுற்றுச்சூழலும், இயற்கை எழிலும், பருவகால சூழலை சேலம் மாவட்டம் கொண்டுள்ளதை அறிந்து கொள்ள முடிகிறது. தொடர்ந்து, சேலம் பறவையியல் கழகத்தைச் சேர்ந்த ஆர்வலர்கள் ராகவ், புகைப்படக்கலைஞர் வெங்கட்ராமன் உள்ளிட்ட குழுவினருடன், அரிய வகை பறவையினங்கள் சேலத்தில் உள்ள நீர் நிலைகளில் உலாவுகிறதா என்பது குறித்து கண்காணிப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்" இவ்வாறு கூறினார்.