இதுவும் கடந்து போகும்: புற்றுநோய்க்கு எதிராக போராடி வந்த மகனுக்காக விடுப்பில் சென்ற ட்விட்டர் ஊழியர் பணி நீக்கம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

கலிபோர்னியா: புற்றுநோய்க்கு எதிராக போராடி வந்த தனது மகனுக்கு துணையாக விடுப்பில் சென்ற ஊழியர் பணி நீக்கம் செய்துள்ளது ட்விட்டர் நிறுவனம். அதற்கு அந்த ஊழியர் லிங்க்ட்இன் தளத்தின் வழியே பதிவை பகிர்ந்து ரியாக்ட்டும் செய்துள்ளார்.

அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தினார் உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆன எலான் மஸ்க். அப்போது முதலே அவருக்கே உரிய பாணியில் சில அதிரடி நடைமுறைகளை செயல்படுத்தி வருகிறார் அவர். ஊழியர்களை பணி நீக்கம் செய்வது, ப்ளூ டிக் பயனர்கள் இடத்தில் மாதந்தோறும் அதற்கு சந்தா வசூலிக்கவும் இருப்பதாக மஸ்க் தெரிவித்திருந்தார். இப்போது அது சில சர்வதேச நாடுகளில் நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்நிலையில், இந்தியா உட்பட உலகம் முழுவதும் ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்கள் சிலர் பணி நீக்க நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளனர். இது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்த சூழலில் புற்றுநோய்க்கு எதிராக போராடி வந்த மகனுக்கு துணையாக விடுப்பில் சென்ற ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்த ஊழியர் அட்லாண்டா பகுதியை சேர்ந்தவர் என தெரிகிறது.

“சகாக்களே இங்கு நான் எனது பணியை அனுபவித்து செய்ய காரணமே நீங்கள்தான். புதிய ட்விட்டர் நிர்வாகம் என்னை பணியில் இருந்து நீக்கி உள்ளது. அதுவும் புற்றுநோய்க்கு எதிராக போராடி வரும் எனது மகனுக்கு துணையாக இருக்க எனக்கு விடுப்பு தேவையான நேரத்தில் இது நடந்துள்ளது. வழக்கம் போலவே இதுவும் கடந்து செல்லும் என உறுதியாக நம்புகிறேன். அதை நாம் எல்லோரும் பலமுறை செய்துள்ளோம்.

மீண்டும் சகாக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த வாய்ப்பை எதிர்நோக்கி உள்ளேன். முக்கியமாக வெகுவிரைவில் மருத்துவ காப்பீடும் பெற வேண்டி உள்ளது” என ஹெர்னான் அல்வாரெஸ் லோயிசிகா எனும் அந்த ஊழியர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in