தேவதை டீச்சரும், அதிசய மாணவரும்... இணை(த)யத்தை கொள்ளை கொள்ளும் ஓவிய வகுப்பு!

பூனைக்கு படம் வரைய சொல்லித் தரும் சுட்டிப் பெண்
பூனைக்கு படம் வரைய சொல்லித் தரும் சுட்டிப் பெண்
Updated on
1 min read

சின்னக் குழந்தைகளுக்கும் செல்லப் பிராணிகளுக்குமான பிணைப்பு என்பது உலகத்தினை அனைத்து இணைகளையும் மீறிய பிரபஞ்ச பேரதிசயம். பெற்றோர், உடன்பிறந்தவர்களை விட செல்லப் பிராணிகளிடம் இரண்டறக் கலந்து விடுவதில் சின்னக் குழந்தைகளுக்கு நிகர் சின்னக் குழந்தைகளே..! அதிலும் கொஞ்சம் சுட்டித்தனம் சேர்ந்துவிட்டால் பார்ப்பவர்களின் இதயங்கள் கொள்ளைப் போவது சர்வ நிச்சயம். இந்த மாதிரியான நம்பமுடியாத சந்தர்ப்பங்களில் அந்த செல்லப் பிராணிகளின் அசாத்திய பொறுமையும், குழந்தைகளிடம் அடிபணியும் பண்பும் வார்த்தைகளுக்குள் அடங்கிவிடாதது.

முரட்டு ஜல்லிக்கட்டுக் காளை அசாதாரணமாக இழுத்துச் செல்லும் குழந்தை, படுபயங்கரமான நாயின் காதுகளை இழுத்து விளையாடும சுட்டி, கன்றுக்குட்டியுடன் சரிமல்லுகட்டும் சிறுவன் என சமூக வலைதளம் தன்னுள் அடைகாக்கும் இத்தகைய வீடியோக்கள் ஏராளம். அந்த வரிசையில் இணைந்திருக்கிறது இந்தச் சுட்டிப் பெண்குழந்தை பூனைக்கு படம் வரையச் சொல்லிக் கொடுக்கும் வீடியோ ஒன்று.

பியூட்டேங்கேபைடன் (Buitengebieden) என்ற ட்விட்டர் முகவரியில் இருந்து இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. இந்தப் பயனர் முகவரியில் இருந்து பறவைகள், விலங்குகளின் வித்தியாசமான வீடியோக்கள் அடிக்கடி பகிரப்படும். இந்த முறை பகிரப்பட்டுள்ள சுட்டிக் குழந்தையின் வீடியோவில், சுட்டிப் பெண்குழந்தை ஒன்று, பூனையின் முகத்தை தன் முகத்துடன் சேர்த்தணைத்துக் கொண்டு, பூனையின் வலது முன்னங்கால் பாதத்தில் நீலநிற கலர் பென்சிலைக் வைத்து, அதை தன் பிஞ்சுக்கரங்களுடன் சேர்த்து பூனைக்கு வண்ணம் தீட்டக் கற்றுக்க கொடுத்துக் கொண்டிருக்கிறாள்.

இதற்கிடையில், அந்த பூனையும் மிகவும் பொறுமையாக தன் தேவதை டீச்சருடன் அமர்ந்து தீட்டப்படும் வண்ணத்தையும் வீடியோ எடுப்பவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த வீடியேவிற்கு கேப்ஷனாக "ஏன்... ஏன் அம்மா இப்படி? - பூனை" என்று எழுதப்பட்டுள்ளது.

12 விநாடிகளே ஓடக்கூடிய சுட்டித்தனமும், கொள்ளை அழகும் கொட்டிக்கிடக்கும் இந்த வீடியோ இணையத்தில் வைரலானதில் ஆச்சரியம் இல்லைதான். இந்த வீடியோவை இதுவரை 10.4 மில்லியனுக்கும் அதிமானோர் பார்த்துள்ளனர். நவ.1-ம் தேதி பகிரப்பட்ட இந்த வீடியோ இதுவரை 20.8 ஆயிரம் பேர் ரீட்வீட் செய்துள்ளனர். 1.63 லட்சம் பேர் இதனை விரும்பியுள்ளனர்.

வீடியோவில் பூனையின் பாவனைகளை பற்றி விளையாட்டாக ஒரு பயனர் கூறுகையில், “நானும் ஒரு நாள் இதே மாதிரி உன்னை உட்கார வைத்து படம் வரைவேன். இந்த பிறவியில் இல்லைனாலும் அடுத்தப் பிறவியிலாவது” என்று பூனை நினைப்பது போல எழுதி உள்ளார்.

மற்றொரு பயனர் "நான் அந்தப் பூனையையே பார்த்துக்கொண்டு இருந்தேன். நான் என் வாழ்நாளில் இதுவரை பார்த்துள்ள பூனைகளில் இதுதான் சிறந்த பூனை. இது மிகவும் அழகானது" என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in