

சென்னை: உலக சோரியாசிஸ் தினம், உலக பக்கவாத நோய் (ஸ்ட்ரோக்) தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இதன் ஒரு பகுதியாக நடந்த பேரணியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் மணி, தோல் நோய் மருத்துவ துறை தலைவர் சுசித்ரா, நரம்பியல் துறை தலைவர் சண்முகசுந்தரம் மற்றும் மருத்துவர்கள் பங்கேற்றனர். சோரியாசிஸ், பக்கவாதம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களிடம் வழங்கப்பட்டன.
அப்போது, கண்காணிப்பாளர் மணி கூறியதாவது: ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வரும்தோல் நோயாளிகளில் சராசரியாக4 பேரில் ஒருவருக்கு சோரியாசிஸ் நோய் பாதிப்பு உள்ளது. இந்த நோயால் 15-25 வயதினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சோரியாசிஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் உபகரணங்களை மற்றவர்கள் பயன்படுத்துவதால் இந்நோய் பரவாது. முறைப்படி சிகிச்சை பெற்றால், இந்நோயில் இருந்து குணமடையலாம்.
ரத்தக் கொதிப்பு காரணமாக பக்கவாத நோய் (ஸ்ட்ரோக்) ஏற்படலாம். குறைவான உப்புச் சத்து, கொழுப்புச் சத்துடன் கூடிய சீரான உணவை எடுத்துக் கொண்டால் பக்கவாதம் வராமல் தடுக்கலாம். தினமும் உடற்பயிற்சி, 6-8 மணி நேர தூக்கம் ஆகியவையும் அவசியம். தலைசுற்றல், கை, கால் செயலிழப்பது, கண் இமை மூடாமல் இருப்பது போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.