

எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத விஷயங்களில் ஒன்று யானை. அதிலும் குட்டி யானை என்றால் கேட்வே வேண்டியதில்லை. கரிய நிறத்தில் சிறிய குன்று ஒன்று அசைந்தபடி வருவது போல வலம் வரும் யானைகள் இயற்கையின் பேரதிசயங்களில் ஒன்று. அதேபோல மற்றொரு அதிசயம் யானைக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு. அது சொல்லில் அடங்காதது. காட்டைப் பகிர்ந்து வாழுந்த காலம் தொட்டு பலநூறு ஆண்டுகளாய் இந்த உறவு தொடர்ந்து வருகிறது. அதனாலேயே, இணையத்தில் பகிரப்படும் யானை குறித்த எந்தப் பதிவும், வீடியோவும் உடனடியாக வைரலாகி விடுகிறது. அப்படி சமீபத்தில் வைரலாகி இருக்கிறது இந்திய வனப்பணி அதிகாரி சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள குட்டி யானை ஒன்றின் வீடியோ.
வீடியோவை பகிர்ந்துள்ள வனப்பணி அதிகாரி, "சகதியில் சிக்கிக் கொண்ட குட்டி யானைக்கு அந்தச் சிறுமி உதவினாள். ஆசீர்வாதத்துடன் அந்த அன்பை யானை ஏற்றுக்கொண்டது" என்று தெரிவித்துள்ளார்.
36 நொடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோவில் கிராமத்து சாலை அருகே உள்ள கரும்புகொல்லைக்கு வந்த குட்டி யானை ஒன்றில் முன்னங்கால் ஒன்று அங்கிருந்த சகதியில் சிக்கி இருக்கிறது. இதனைப் பார்த்த சிறுமி, யானையின் காலை சகதியில் இருந்து எடுத்த உதவி செய்கிறார். மறுபுறம் சிறுமியை எந்த வகையிலும் தொட்டு பயமுறுத்தாத வகையில் அந்த உதவியை யானை குட்டி ஏற்றுக்கொள்கிறது. பலமுறை முயற்திகளுக்கு பிறகு யானையும் சிறுமியைும் வெற்றி பெறுகின்றனர். சகதியில் இருந்து வெளியேறி சாலைக்கு வந்த யானைக் குட்டி கடைசியில் தனது பிஞ்சு துதிக்கையைத் தூக்கி காட்டுகிறது.
அது என்ன சொல்லியிருக்கும்... சிறுமியை வழியனுப்பியிருக்குமா? அல்லது ஆசீர்வதித்திருக்குமா?
இந்த வீடியோ பகிரப்பட்டதிலிருந்து இதுவரை 86,000-க்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர். 6,930 பேர் விரும்பி இருக்கிறார்கள். 781 பேர் ரீஷேர் செய்துள்ளனர்.
ஒரு பயனர், ‘பேரழகு! இந்த பிரபஞ்சம் எல்லாருக்கும் பொதுவானது. நாம் ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். மற்றொரு பயனர், ‘அந்த துணிச்சல் மிக்க பெண்ணிற்கு வாழ்த்துகள், யானையை காப்பாற்றிய அவருக்கு வந்தனங்கள்’ என்று தெரிவித்துள்ளார். மற்றொரு பயனர், ‘அந்த சின்ன யானைக்கு உதவியதற்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.