

சிட்னி: இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் போட்டியை பார்க்க வந்திருந்த ரசிகர் ஒருவர் தனது தோழியின் மனதை கவரும் வகையில் காதலை வெளிப்படுத்தி உள்ளார். அவரது செயல் அந்த இளம் பெண்ணின் உள்ளத்தை கொள்ளைக் கொண்டுள்ளது என்றே தெரிகிறது. அந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்து 179 ரன்களை சேர்த்தது. அந்த இலக்கை தடுமாற்றத்துடன் விரட்டிய நெதர்லாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்தது. அதனால், 56 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. முதல் இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் ரோகித், கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் என மூவரும் அரை சதம் விளாசி இருந்தனர்.
இந்த நிலையில், முதல் இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் பார்வையாளர்களை கவர்ந்திருந்தனர். இரண்டாவது இன்னிங்ஸில் தனது தோழி மட்டுமல்லாது மைதானத்தில் இருந்த பார்வையாளர்கள், போட்டியை டிவி மற்றும் மொபைல் போன் வழியாக பார்த்துக் கொண்டிருந்தவர்களின் இதயங்களை இளைஞர் ஒருவர் வென்றுள்ளார்.
பார்வையாளர் மாடத்தில் இருந்த அவர் தனது தோழியிடம் பரஸ்பரம் தனது காதலை தெரிவித்துள்ளார். அதற்கென ஒரு மோதிரத்தையும் தன் கையோடு அவர் கொண்டு வந்துள்ளார். அதை கொடுத்து தனது காதலை தெரிவித்துள்ளார் அவர். காதலை அவரது தோழி ஏற்க விரல்களில் அந்த மோதிரத்தை மாட்டியும் விட்டுள்ளார். இது நெதர்லாந்து அணி பேட் செய்த போது ஏழாவது ஓவரில் நடந்துள்ளது.
இதே போல கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சிட்னி மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டியில் காதலை இளைஞர் ஒருவர் தெரிவித்திருந்தார். காதல் என்றாலே ஒருவரை ஒருவர் இம்ப்ரஸ் செய்வது அவசியமான ஒன்றாக அமைந்துவிடுகிறது.