

30 ஆண்டுகளுக்குப் பின்னர் தனக்குப் பிரியமான ஆசிரியரை விமானத்தில் பார்த்த விமான பணிப்பெண் ஒருவர் நெகிழ்ச்சி பொங்க அவரை ஓடோடிச் சென்று கட்டியணைத்துக் கொண்ட காட்சி வைரலாகியுள்ளது.
இந்த வீடியோ அக்டோபர் 5-ஆம் தேதியன்று கனடாவில் எடுக்கப்பட்டுள்ளது. கனடாவில் அக்டோபர் 5-ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர்கள் கவுரவிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம்தான் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.
விமானத்தில் பயணிகள் நிறைந்துள்ளனர். அப்போது விமான சிப்பந்தி லாரா பேசத் தொடங்குகிறார். "இன்று தேசிய ஆசிரியர்கள் தினம். இன்றைய தினம் நாம் நமக்குப் பிடித்த ஆசிரியர்களை, நம் வாழ்வில் கண்ட ஆசிரியர்களை கவுரவிக்க வேண்டும். இப்போது நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்படப் போகிறேன். 1990-ஆம் ஆண்டு எனக்கு ஆசிரியராக இருந்த மிஸ் ஓ கொன்னலை நான் இந்த விமானத்தில் பார்த்துவிட்டேன். அவரை நான் கடந்த 30 ஆண்டுகளுக்குப் பின்னர் பார்க்கிறேன். அவர் எனக்கு மிகவும் பிரியமான ஆசிரியர். அவரால்தான் நான் ஷேக்ஸ்பியரை நேசித்தேன். அவரால்தான் நான் பியானோ வாசிக்கக் கற்றுக் கொண்டேன். நான் பியானோவில் மாஸ்டர்ஸ் பட்டம் பெற்றுள்ளேன். நன்றி மிஸ் கொன்னல்” என்று சொல்லிவிட்டு அவர் வேகமாக தனது ஆசிரியரை நோக்கி ஓடுகிறார். இருவரும் ஆரத்தழுவிக் கொள்கின்றனர். இந்தக் காட்சியைப் பார்த்து விமானத்தில் இருந்த அனைவருமே நெகிழ்ந்து போய் கரகோஷம் எழுப்புகின்றனர்.
இந்த வீடியோ ட்விட்டரில் வைரலாக நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். அதில் ஒருவர் “அமெரிக்காவில் ஆசிரியர்களை கவுரவிக்கும் நாள் இல்லாதது வெட்கக்கேடானது” எனப் பதிவிட்டுள்ளார். இன்னொருவர், “நம் வாழ்வில் மிஸ் கொன்னல் போன்ற ஆசிரியர் தேவை. என் வாழ்க்கையில் ஒரு ஆசிரியர் இருக்கிறார். அவர் பெயர் புச்சனன்” என அன்புடன் நினைவுகூர்ந்துள்ளார். இன்னும் சிலர் குழந்தையைப் போல் ஆசிரியர் ஓடும் ஓட்டத்தில் வெளிப்படும் அன்பை சுட்டிக் காட்டியுள்ளனர். இவ்வாறாக இணையத்தில் இந்த வீடியோ வைரலாகிக் கொண்டிருக்கிறது.