வேடிக்கையான தலைகவசங்களுடன் தேர்வு எழுதும் மாணவர்கள்
வேடிக்கையான தலைகவசங்களுடன் தேர்வு எழுதும் மாணவர்கள்

தேர்வில் பார்த்து எழுதுவதைத் தடுக்க நூதன நடவடிக்கை - 'தலைக்கவசத்துடன்' தேர்வெழுதிய மாணவர்கள்

Published on

மாணவர்கள் காப்பி அடிப்படைத் தடுக்க வழக்கமாக மேற்கொள்ளப்படும் முயற்சிகளைத் தாண்டி, வித்தியாசமான ஒரு முயற்சி பிலிப்பைன்ஸ் நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அது என்ன என்பதை தற்போது பார்ப்போம்.

மாணவர்களின் உச்சபட்ச கற்பனைத் திறனை வெளிக்கொண்டு வருவதில் தேர்வு அறைகளுக்கு அசாத்தியமான பங்கு உண்டு. சாதாரண வகுப்பறை தேர்வு தொடங்கி பொதுத்தேர்வு வரை இதற்கு விதிவிலக்கில்லை. நான் ரொம்ப 'ஸ்ட்ரிக்ட்' என்னை மீறி நீங்கள் எப்படி பார்த்து எழுதுகிறீர்கள் என்று பார்த்துவிடுவோம் என தேர்வு அறையில் விரைப்பாக வலம் வரும் ஆசிரியர்களின் கண்களில்கூட மண்ணைத் தூவும் மாணவர்கள் இருக்கிறார்கள். காற்றில் கதை பேசி, கைகளில் அபிநயம் பிடித்தேகூட அவர்கள் சக மாணவர்களின் உதவியைப் பெற்றுவிடுவார்கள். தேர்வு அறை காட்சிகள், ஜனரஞ்சகமாக எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு ஈடாக சுவரஸ்யங்கள் நிறைந்தாகவே இருக்கும். நம்ம நாட்டில்தான் இப்படி என்றில்லை; உலகம் முழுக்கவே இப்படித்தான் இருக்கிறது போலும்.

பிலிப்பைன்ஸ் நாட்டின், பிகோல் பல்கலைகழகத்தின் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த, மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாணவர்கள், பார்த்து எழுதுவதைத் தடுக்க, அந்த துறையின் பேராசிரியை மேரி ஜாய் மாண்டேன் ஓர்டிஸ், ஒரு புது முயற்சியை மேற்கொண்டிருக்கிறார். மாணவர்கள் தலைக்கவசத்துடன் தேர்வு எழுத வேண்டும் என்பதே அந்த முயற்சி. தலைக்கவசத்தை மாணவர்களே தயாரித்து எடுத்துக்கொண்டு வர வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார். இதையடுத்து மாணவர்கள் தங்கள் கற்பனைத் திறனுக்கு ஏற்ப பல்வேறு வகையான தலைக்கவசங்களுடன் தேர்வு எழுத வந்துவிட்டனர்.

அட்டைப் பெட்டி, முட்டை கூடு போன்ற மறுசுழற்சி செய்யப்படும் பொருள்களைப் பயன்படுத்தி விதவிதமான தலைக்கவசங்களை தயாரித்து அதனை அணிந்து கொண்டு அவர்கள் தேர்வு எழுதினர். தலைக்கவசத்துடன் அவர்கள் தேர்வு எழுதியது குறித்த புகைப்படங்களை அந்த பேராசிரியையே சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

இது குறித்து அந்த பேராசிரியை குறிப்பிடும்போது, "வகுப்பறையில் நேர்மையையும் ஒற்றுமையையும் உருவாக்க வேண்டும் என்பதும் அது வேடிக்கையானதாக இருக்க வேண்டும் என்பதுமே எனது நோக்கமாக இருந்தது. எனது இந்த யோசனை நல்ல பலனைத் தந்துள்ளது. காதிதத்தைப் பயன்படுத்தி எளிய வடிவத்தில் தலைக்கவசம் ஒன்றை உருவாக்கி வேண்டும் என்று நான் மாணவர்களிடம் கூறியிருந்தேன். அவர்களில் சிலர், பயன்படுத்தப்படாத பொருள்களைக் கொண்டு கற்பனை திறனுடன் மிக நேர்த்தியான தலைகவசங்களை உருவாக்கி இருந்தனர். மற்றவர்கள் தொப்பி, குல்லா, ஹாலோவின் முகமூடி போன்றவற்றை அணிந்திருந்தனர். கடந்த 2013ம் ஆண்டு தாய்லாந்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கடைப்பிடிக்கப்பட்ட யுக்திதான் எனது இந்த யோசனைக்கு தூண்டுகோலாக இருந்தது. அங்கு தேர்வு எழுதிய மாணவர்கள் சாதாரண தாளை, தங்கள் காதுகளின் இரண்டு பக்கங்களையும் கண்களின் பக்கவாட்டையும் மறைக்கும் வகையில் கவசம் அணிந்து வந்து தேர்வு எழுதினர். அந்த புகைப்படம் அப்போது சமூக வலைதளத்தில் வைரலானது. அதைப் பின்பற்றி நான் கூறியதைக் கேட்டு மாணவர்கள் இம்முறை தங்கள் தேர்வுகளை எழுதினார்கள். இந்த கடுமை காரணமாக மாணவர்கள் இந்த முறை நன்றாக படித்து தேர்வு எழுதினர். குறிப்பாக யாரும் காப்பி அடித்தாக மாட்டவில்லை" என்று தெரிவித்திருந்தார்.

இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானதுடன், செய்தியாகவும் மாறியது. இதையடுத்து, தேர்வில் காப்பி அடிப்பதைத் தடுக்கும் வகையில் பிலிப்பைன்ஸில் உள்ள மற்ற கல்லூரிகளும் இந்த யுக்தியை பின்பற்றித் தொடங்கி இருக்கின்றன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in