Last Updated : 21 Oct, 2022 09:05 AM

1  

Published : 21 Oct 2022 09:05 AM
Last Updated : 21 Oct 2022 09:05 AM

தீபாவளி பண்டிகைக்காக தேனியில் களைகட்டிய பக்கெட் பிரியாணி முன்பதிவு

தேனியில் தீபாவளிக்காக உணவகங்கள், சமையல் மாஸ்டர்கள், தனி நபர்கள் என பலரும் பக்கெட் பிரியாணிக்கு சலுகைகளை வெளியிட்டுள்ளனர். இதனால், தீபாவளி விருந்துக்கான முன்பதிவுகள் களைகட்டியுள்ளன.

முன்பெல்லாம் தீபாவளி பலகாரம், சிறப்பு உணவுகள் வீடுகளிலேயே தயாரிக்கப்பட்டு உறவுகளுக்கும், விருந்தினர்களுக்கும் பரிமாறப்பட்டு வந்தன. மாறி வரும் சூழ்நிலையால் கடந்த சில ஆண்டுகளாகவே இவற்றை உணவகங்களில் வாங்கும் நிலை அதிகரித்துள்ளது. இதற்காக பல்வேறு உணவகங்களும் தீபாவளிக்காக உணவுகளைத் தயார் செய்து விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன.

தீபாவளி பண்டிகை வரும் திங்களன்று கொண்டாடப்படவிருக்கும் நிலையில், கடந்த சில நாட்களாகவே தேனியில் உள்ள உணவங்கள் தீபாவளிக்கான சலுகை, இலவசம், விலைக் குறைப்பு போன்றவற்றை முன்னிறுத்தி ஆர்டர்களை பெற்று வருகின்றன.

உணவுகளைப் பெற பாத்திரங்களை எடுத்து வர வாடிக்கையாளர்களுக்குச் சிரமமாக இருக்கும் என்பதால் பக்கெட்டில் இவற்றை வழங்கத் திட்டமிட்டுள்ளன. இதன்படி 8 பேர் சாப்பிடக்கூடிய பேமிலி பேக் பக்கெட்டில் மட்டன் பிரியாணி, சிக்கன் சுக்கா, சிக்கன் போன்லெஸ் அல்லது மீன், 8 அவிச்ச முட்டையுடன் ரூ2,399-க்கு வழங்கப்படுகிறது. 4 பேருக்கான ப்ரெண்ட்ஸ் மட்டன் பேக் பக்கெட் ரூ.1,399-க்கும் வழங்கப்படுகிறது. மேலும், மட்டன் சுக்கா ஒரு கிலோ 1,400, ஒரு கிலோ சிக்கன் போன்லெஸ் ரூ.900 என்று சைடிஷ்களும் தனித்தனியாக விற்கப்படுகின்றன. பலரும் குளிர்பானம், முட்டை போன்றவற்றை இலவசமாக வழங்குகின்றனர்.

தீபாவளியை முன்னிட்டு வான்கோழி பிரியாணி விற்பனையும் களைகட்டியுள்ளது. 8 பேர் சாப்பிடக் கூடிய ஒரு கிலோ வான்கோழி பிரியாணி ரூ.2,500 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு உணவகங்களிலும் பிரியாணி விலை சற்று ஏற்ற, இறக்கத்துடனே உள்ளன.

கடந்த சில நாட்களாக ஹோட்டல்களில் வாடிக்கையாளர்களின் வருகையும் அதிகரித்துள்ளதால் வழக்கமான அசைவ வகைகளுடன் வான்கோழி சுக்கா, காடை மசால், இறால் ரோஸ்ட், நெய் மீன் ரோஸ்ட் உள்ளிட்ட பல ரகங்களையும் கூடுதலாகத் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

உணவகங்கள் மட்டுமல்லாது சமையல் மாஸ்டர்கள், தனி நபர்கள் பலரும் இந்த தீபாவளி பிரியாணி விற்பனையில் களம் இறங்கி உள்ளனர். இதனால் தேனியில் தீபாவளி பிரியாணிக்கான முன்பதிவுகள் அதிகரித்துள்ளன.

இது குறித்து உணவக உரிமையாளர் சத்யமூர்த்தி கூறுகையில், தீபாவளி அசைவ உணவு விற்பனையில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அனைத்துப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதால் பக்கெட் பிரியாணி விலையையும் வெகுவாய் உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தீபாவளி கொண்டாட்டத்தில் சமையல் செய்வதிலேயே நேரம் சென்று விடும் என்பதால் பலரும் பக்கெட் பிரியாணியை விரும்புகின்றனர், என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x