

கோவை: தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வெட்டுக்கிளிக்கு 'திராவிடாக்ரிஸ் அண்ணாமலைக்கா' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் 28 ஆயிரம் வகையான வெட்டுக்கிளிகள் காணப்படுகின்றன. இதில், இந்தியாவில் இதுவரை 1,708 வகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது மொத்த வகைகளில், சுமார் 9 சதவீதம் ஆகும். இந்நிலையில், கடலூர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பூச்சியியல் துறையில் ஆராய்ச்சி மாணவராக இருந்த சங்கரராமன், கடந்த 2020-ம் ஆண்டு பல்கலைக்கழக வளாகத்தில் புதிதாக வெட்டுக்கிளி ஒன்றை பார்த்துள்ளார்.
அதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள வெட்டுக்கிளி நிபுணரான தனீஷ் பாஸ்கரை தொடர்புகொண்டு, வெட்டுக்கிளியை ஆய்வுக்காக அனுப்பியுள்ளார். இவர்களோடு குரோஷியா நாட்டின் ஜக்ரெப் பல்கலைக்கழக உயிரியல் துறை ஆராய்ச்சி மாணவர் நிகோ காஸ்லோவும் இணைந்து ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் முடிவில், இந்த வெட்டுக்கிளியானது ஏற்கெனவே உலக அளவில் கண்டறியப்பட்ட வெட்டுக்கிளி வகைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்தது தெரியவந்தது. இந்த ஆய்வறிக்கை 'ஜூடேக்சா' எனும் சர்வதேச இதழில் நேற்று பிரசுரிக்கப்பட்டது. இதன்மூலம், இந்தியாவில் கண்டறியப்பட்ட வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கை 1,709-ஆக அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக கேர் எர்த் அறக்கட்டளைச் சேர்ந்த வெட்டுக்கிளி நிபுணரான தனீஷ் பாஸ்கர், கோவை வாணவராயர் வேளாண்மை கல்வி நிறுவன உதவி பேராசிரியரான சங்கரராமன் ஆகியோர் கூறியதாவது: புதிதாக கண்டறியப்பட்ட வெட்டுக்கிளி 3 செ.மீ அளவு கொண்டுள்ளது. இந்தியாவின் தென்பகுதியில், சிதம்பரம் அண்ணாமலை நகரில் இந்த புதிய வெட்டுக்கிளி கண்டறியப்பட்டதால் இதற்கு 'திராவிடாக்ரிஸ் அண்ணாமலைக்கா' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
உணவுச்சங்கிலியில் முக்கிய பங்கு
உணவுச்சங்கிலியில் தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் இடையிலான முக்கிய இணைப்புப் புள்ளியாக வெட்டுக்கிளிகள் உள்ளன. புற்களை உணவாக உட்கொள்ளும் வெட்டுக்கிளிகளை, தவளைகள் உட்கொள்கின்றன. அவற்றை பாம்பு போன்ற ஊர்வன வகைகள் உட்கொள்கின்றன. பாம்புகளை இரைகொல்லி பறவைகள் உட்கொள்கின்றன. இதர பறவைகளுக்கு நேரடி உணவாகவும் வெட்டுக்கிளிகள் உள்ளன. கடந்த 2020-ம் ஆண்டு பாலைவன வெட்டுக்கிளிகள்தான் கூட்டமாக வந்து விவசாயிகளின் பயிர்களுக்கு சேதம் விளைவித்தன.
மற்ற அனைத்து வெட்டுக்கிளிகளும் அதுபோன்று பெரிய அளவில் சேதம் விளைவிப்பவை அல்ல. விலங்குகள், பறவைகள், பட்டாம்பூச்சிகள் போன்று வெட்டுக்கிளிகளும் பல்லுயிர் சூழலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பூச்சிமருந்துகள் போன்றவற்றால் அவற்றின் எண்ணிக்கை குறையும்போது மற்ற உயிரினங்களும் பாதிக்கப்படும். மேலும், எந்தெந்த வகையான வெட்டுக்கிளிகள் இந்தியாவில் உள்ளன என்ற முழுமையான பட்டியல் நம்மிடம் இல்லை. எனவே, இங்குள்ள வகைகளை தெரிந்துகொள்ள இதுபோன்ற ஆய்வுகள் உதவும். இவ்வாறு அவர்கள் கூறினர்.