

காசா: காசாவின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ளது நுஸ்ஸீரத் அகதிகள் முகாம், இங்குள்ள சிறுவர், சிறுமியர் அவர்களது மத கோட்பாடுகளுக்கு மாற்றாக சாலைகளில் பிரேக் டான்ஸ் - ராக் டான்ஸ் - ஹிப் ஹாப் நடனங்களை ஆடிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.
பாலஸ்தீன் - இஸ்ரேல் இடையே நிலவும் பிரச்சினை காரணமாக காசா பகுதிகளில் முகாம்களில் தங்கியுள்ள மக்களின் வாழ்வாதாரம் மோசமான சூழலைச் சந்தித்திருக்கிறது. இதனை பல நேரங்களில் ஐக்கிய நாடுகளின் சபையும், உலக நாடுகளுக்கு சுட்டிக் காட்டியிருக்கின்றன. இந்த நிலையில், சமீபத்தில் வெளியான யூனிசெஃபின் அறிக்கையில், காசாவில் சுமார் 5 லட்சம் சிறுவர், சிறுமியர் உளவியல் பாதிப்புகளுக்கு உள்ளாகி இருப்பதாக கூறப்பட்டிருந்தது. இதனை பிரதிபலிக்கும் காட்சிகளை காசாவின் முகாம்களில் காணலாம். இந்தச் சூழலில் முகாம்களில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு சிறிய வெளிச்சமாக மாறியிருக்கிறார் காசாவைச் சேர்ந்த அகமது அல் கராய்ஸ்.
அகமது ஐரோப்பாவில் பிரேக் டான்ஸ்களை ஏழாண்டு படித்திருக்கிறார். இந்த நிலையில்தான் காசால் உள்ள சிறுவர்களை உளவியல் பிரச்சினைகளிலிருந்து மீட்டெடுக்க பிரேக் டான்ஸ்களை பயிற்று வருகிறார் அகமது. இதில் கூடுதல் சிறப்பு, அங்குள்ள பெண் குழந்தைகளுக்கும் நடனங்களை இவர் பயிற்றுவிக்கிறார்.
முதலில் அகமது இந்த நடனத்தை பயிற்றுவிக்க முயற்சித்தபோது அனைவரும் விமர்சித்துள்ளனர். ஆனால், இந்த நடனத்தால் அன்றாட பிரச்சினைகள் எவ்வாறு நீங்குகிறது என்பதை அங்குள்ளவர்களுக்கு உணர்ந்த பிறகுதான் இந்த நடனத்தை கற்பிக்க அகமது அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
இதுகுறித்து அகமது கூறும்போது, “இந்த நடனங்கள் சிறுவர்களிடமிருந்து அச்சத்தையும், பதற்றத்தையும் நீக்குகிறது. சில குழந்தைகள் என்னிடம் வந்து, அவர்கள் சோர்வாக இருப்பதாகவும் போதுமான ஓய்வு இல்லை, ஆழ்ந்த தூக்கம் இல்லை என்று கூறுவார்கள். சிலர் தங்களைத் தாங்களே தண்டித்து கொள்வதாகவும், சிலர் பொது சமூகத்திடம் கலக்க தயங்குவதாகவும் தெரிவிப்பார்கள்” என்றார்.
11 வயதான ஜனா அல் ஷாபி பேசும்போது, “நாங்கள் அச்சம் கொண்டிருக்கிறோம். ட்ரோன்கள், ஏவுகணை சத்தங்களை கேட்டு நாங்கள் பயம் கொண்டுள்ளோம். இதனால் நாங்கள் வீட்டிலே இருக்கிறோம். ஆனால், பிரேக் டான்ஸ் போன்றவை எங்கள் மனதை மாற்றுகிறது” என்றார்.
உலகம் முழுவதும் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுருப்பவர்களுக்கு சிறந்த சிகிச்சையாக நடனம் மாறியிருக்கிறது. அந்த வகையில் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட குழந்தைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் அகமது போன்றோர் செயல்படுவது பாராட்டுக்குரியது.
பிரேக் டான்ஸ்கள் 1970-களில் நியூயார்க்கில் பிளாக் மற்றும் லத்தீன் நடனக் கலைஞர்களிடையே தோன்றியதாக பொதுவாக நம்பப்படுகிறது.