தீபாவளியை கொண்டாட உற்சாகத்துடன் தயாராகும் மக்கள்

தீபாவளியை கொண்டாட உற்சாகத்துடன் தயாராகும் மக்கள்
Updated on
2 min read

ஏற்றப்பாதையில் செல்லும் தொழில்கள், தவறாமல் பெய்த பருவமழை என மகிழ்ச்சியான சூழலில், தீபாவளிப் பண்டிகை வருவதால், மக்கள் உற்சாகத்துடன் தீபாவளியைக் கொண்டாடத் தயாராகியுள்ளனர்.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, மக்களின் உடல் நலன் பாதிக்கப்பட்டதுடன், வாழ்வாதாரங்களும் பாதிக்கப்பட்டதால், திருவிழா, பண்டிகை உள்ளிட்டவை கடந்த ஆண்டுகளில் போதிய உற்சாகமின்றி கடந்து சென்றன.

இந்நிலையில், நடப்பாண்டு கரோனா தொற்று அச்சுறுத்தல் காணாமல் போனதுடன் நலிவடைந்திருந்த தொழில்கள் யாவும் ஏற்றத்தை நோக்கிப் பயணிப்பது, தவறாமல் பெய்த பருவமழை போன்றவை, மக்கள் தொலைத்திருந்த மகிழ்ச்சியை மீண்டும் பூக்கச் செய்துள்ளன.

இதனால், திருவிழாக்கள், சுப நிகழ்ச்சிகள், பண்டிகைகள் உள்ளிட்டவற்றை மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடக் கூடிய தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ளன. எனவே, பண்டிகையைக் கொண்டாடத் தேவையான புத்தாடைகள், பட்டாசுகள் மட்டுமின்றி, தீபாவளி சிறப்புத் தள்ளுபடியில் கிடைக்கும் நகைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், செல்போன்கள், வாஷிங் மெஷின்கள் உள்ளிட்டவற்றில், தங்களுக்குத் தேவையானவற்றை வாங்கிச் செல்ல கடை வீதிகளுக்கு மக்கள் படையெடுத்துள்ளனர்.

குறிப்பாக, சேலம் மாநகரில் முதல் அக்ரஹாரம், இரண்டாவது அக்ரஹாரம், பெரிய கடை வீதி, அருணாச்சல ஆசாரி வீதி, சிசி ரோடு, ஓமலூர் ரோடு, ஐந்து ரோடு, புதிய பேருந்து நிலையம் எதிர் சாலை உள்பட நகரின் முக்கிய கடை வீதிகள் யாவும் மக்கள் கூட்டத்தால் திணறி வருகின்றன.

மக்கள், தங்களுக்குத் தேவையான ஆடைகளை தரமாகவும், விலை குறைவாகவும், தள்ளுபடி சலுகையுடனும் கிடைக்கும் கடைகளைத் தேடித்தேடி ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். இனிப்புக் கடைகளிலும் விதவிதமாக இனிப்பு மற்றும் கார வகைகளை இப்போதே வாங்கிச் செல்கின்றனர்.

புத்தாடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்பட தேவையானவற்றை வாங்கிச் செல்ல, சேலத்தின் சுற்று வட்டார கிராமங்கள், சேலத்தை ஒட்டியுள்ள அண்டை மாவட்டப் பகுதிகளில் இருந்தும், மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்வதால், சேலம் மாநகரின் முக்கிய கடை வீதிகள், சாலைகள் யாவும் போக்குவரத்து நெரிசலால் திணறிக் கொண்டிருக்கின்றன.

பண்டிகை கால நெரிசலை மக்கள் ரசித்து அனுபவித்து வரும் நிலையில், மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தவும், கடை வீதிகள், முக்கிய சாலைகள் உள்ளிட்ட இடங்களில், கண்காணிப்பு கோபுரம் அமைத்து, சாலைகளில் ஆங்காங்கே நின்றபடி மாநகர போலீஸார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிரடி சலுகைகளை அறிவித்தபடி அலறிக் கொண்டிருக்கும் ஒலிபெருக்கிகள் கூட, இரைச்சலாக இல்லாமல், மக்களுக்கு இன்னிசையாக இருப்பதால், தீபாவளி கொண்டாட்டம் இப்போதே தொடங்கி நடைபெற்று வருவதாக மக்களிடம் உற்சாகம் தொற்றிக் கொண்டுள்ளது.

சேலம் மட்டுமல்லாது, ஆத்தூர், நரசிங்கபுரம், மேட்டூர், எடப்பாடி, தாரமங்கலம், இடங்கணசாலை உள்பட நகராட்சிகள், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், கெங்கவல்லி, தலைவாசல், சங்ககிரி, ஓமலூர் உள்ளிட்ட வட்டார தலைநகரங்கள், கிராமங்களில் கூட, மின் விளக்குகளால் கடைகள் அலங்கரிக்கப்பட்டு, ஒலிபெருக்கிகளால் விளம்பரங்கள் விவரிக்கப்பட்டு, தீபாவளியை உற்சாகமாக வரவேற்றபடி இருக்கின்றன.

தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட, குழந்தைகள் போல மக்கள் காத்துக் கொண்டிருப்பது, அவர்களது முகங்களில் தீப ஒளி போல பிரகாசிப்பதை காண முடிகிறது. தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in