

சாதிக்கப் பிறந்தவர்கள் சமூக அமைப்பின் மிஸ் தமிழ்நாடு அழகிய ராணிக்கான போட்டி சென்னை, சின்மயா அரங்கில் அண்மையில் நடந்தது.
"வீட்டை விட்டு குடும்பச் சூழ்நிலையால் வெளியேறும் இளம் திருநங்கைகள், திருநம்பிகளின் கல்விக் கனவை பார்ன் டு வின் அமைப்பு நனவாக்க உதவுகிறது. திருநம்பிகளையும் ஆதரித்து அவர்களுக்கான ஆலோசனைகளைக் கூறி, அவர்களுக்கான பணி, அவர்களுக்கான சமூக அங்கீகாரத்தையும் பெற்றுத் தருகிறது சாதிக்கப் பிறந்தவர்கள் கூட்டமைப்பு" என்றார் அமைப்பின் நிறுவனரான ஸ்வேதா.
எளியோரைத் தாழ்த்தி வலியோரை வாழ்த்தும் பொதுப் புத்தி சிந்தனையிலிருந்து விலகி, திருநங்கைகளுக்கு உதவுவதோடு, பொதுச் சமூகத்திலும் எளியோருக்கு தங்களாலான உதவிகளைச் செய்துவரும் பல தன்னார்வலர்களையும் இந்த விழாவில் கவுரவப்படுத்தினர்.
திரைப்பாடல்களைப் பாடுவது, திரைப்பாடல்களுக்கு நடனம் ஆடுவது, பரதநாட்டியம், கிராமியக் கலைகள் என பல கலை வடிவங்களிலும் திருநர்களின் திறமையை வெளிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக இந்த விழா அமைந்தது.
முன்னதாக, நாடாளுமன்ற உறுப்பினர் முகமது அப்துல்லா, அரிமா சங்கத்தைச் சேர்ந்த பாலமுரளி, திருநர் செயற்பாட்டாளர் ஜீவா, திருநர் செயற்பாட்டாளர் சுபிக்ஷா சோனியா ஆகியோர் விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தனர்.
மிஸ் தமிழ்நாடு குயின் அழகிப் போட்டிக்கான பாரம்பரியத்தை பறைசாற்றும் சுற்றில், அவர்களிடையே நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் பெருமிதமான நடை நடந்தது போட்டியில் பங்கெடுத்த திருநங்கைகளுக்கு உற்சாகம் அளித்தது. தானும் தான் சார்ந்திருக்கும் அரசும் முதல்வரும் திருநர் சமூகத்தினரின் நலனில் என்றென்றைக்கும் உறுதுணையாக இருப்போம் என்று அவர் பேசியது நெகிழ்ச்சியாக இருந்தது.
தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் 12 திருநங்கைகள் இறுதிச் சுற்றில் பங்கெடுத்தனர். இவர்களிலிருந்து பல கட்ட போட்டிகளுக்குப் பிறகு, தமிழ்நாடு மிஸ் குயின் அழகியாக நிரஞ்சனா தேர்ந்தெடுக்கப்பட்டார். போட்டியில் இரண்டாவது, மூன்றாவது இடங்களுக்கு முறையே இவான்ஜலினும் அதுல்யாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தமிழ்நாடு மிஸ் குயினாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிரஞ்ஜனாவுக்கு திரைப்பட நடன இயக்குநர் கலாவும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரபாகரனும் கிரீடத்தை அணிவித்தனர்.
இரண்டாவது ஆண்டாக மூத்த திருநங்கையர் மூன்று பேருக்கு மாதாந்திர உதவித் தொகையை வழங்குதல், பத்து திருநர்களுக்கு சிறு தொழில் துவங்குவதற்கான வங்கிக் கடன், திருநருக்கு தனியார் நிறுவனங்களில் பணி போன்றவற்றை வழங்கியது நிகழ்ச்சியின் மைல்கற்களாகத் திகழ்ந்தன.