Last Updated : 09 Oct, 2022 01:32 PM

1  

Published : 09 Oct 2022 01:32 PM
Last Updated : 09 Oct 2022 01:32 PM

‘அன்புள்ள...’ - இதயத்தின் அடியாழம் நனைத்த மந்திரச்சொல்லும் 10 தகவல்களும் @ World Post Day

இந்தியாவில் செல்போன் சேவையோ இணையமோ சென்று சேர்ந்திருக்காத ஏதாவது ஒரு குக்கிராமம், மலைகிராமத்தற்கு செல்லும்போதோ, அல்லது நகரத்து தெருக்களில் நடந்து செல்லும்போது அரையாள் உயரத்திற்கு நெற்றியிலிருந்து நீண்ட ஒற்றை இமைக்கு கீழ் வாய் பிளந்திருக்கும் ஒரு சிவப்புநிறப் பெட்டியை பார்த்திருக்க முடியும். நெற்றிப்பொட்டில் இந்தியா போஸ்ட் என எழுதியிருக்கும் அந்தப் பெட்டிக்கு பெயர் தபால் பெட்டி. மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து வெளிறி நிற்கும் அந்த தபால் பெட்டிகளின் நிறத்தை போலவே அதன் வரலாறும் மிக நீண்டது…

நினைத்தால் கணநேரத்தில் மனதின் சலனத்தை, சஞ்சலத்தை சுக துக்கங்களை ஸ்டேட்டஸ்களாக, எஸ்எஸ்எம்-களாக காற்றில் கலந்துவிடும் இன்றைய தலைமுறைக்கு கடிதங்கள் கடத்திய காதலும் வாழ்க்கையையும் புரிந்து கொள்வது கொஞ்சம் கடினமே. பாலைவனதேசத்தில் சமையல்காரனாய் இருந்த கணவனுக்கு வீட்டு பசு மாடு கன்று போட்ட செய்தியை மனைவி சொல்வதும், “வீட்டு தலைப்பிள்ள கன்னு போட்டிருக்கா... லட்சுமி வந்திருக்கா” என்ற மனைவியின் வரிகளில் பாலைவன மணல் பரப்பில் பசுமாட்டின் சீம்பால் மணத்தை நுகர்ந்து பார்த்ததையும் கடிதங்கள் மட்டுமே சாத்தியப்படுத்தின.

சாப்பிட்டயா… அப்புறம்… சொல்லு… என அன்பை வார்த்தைகளில் பரிமாறும் ஜாலம் கடிதங்களுக்கு வாய்க்கவே இல்லை. நகர்மயமாதலால் கிராமத்தில் இருந்து பட்டணங்களுக்கு குடிபெயர்ந்து போன மகன் அனுப்பும் பணத்திற்காக காத்திருக்கும் வயது முதிர்ந்த பெற்றோர்களும்… காக்கி உடையில் ஆபத்பாந்தவனாய் வரும் தபால்காரர்கள் கொண்டுவந்து கொடுக்கும் மணியார்டர்களை பெற்றுக் கொண்டு, பதிலுக்கு நீலநிற இன்லேண்ட் லட்டரில் “அன்புள்ள மகனுக்கு அம்மா அப்பாவின் அநேக ஆசிர்வாதங்கள்... நாங்கள் நலம் அங்கு நீ.. மருமகள்.. பேரப்பிள்ளைகள் நலமா? பணம் கிடைத்தது பெற்றுக்கொண்டேன்.

இந்தக் கடித்துடன் நம்மூர் அம்மன்கோயில் திருநீரும் சேர்த்து அனுப்பி உள்ளேன் வெளியே செல்லும் போது பூசிக்கொள்ளுங்கள் அம்மன் துணையிருப்பாள். பொழுதுக்கு சாப்பிடுங்கள். உங்கள் சுகம் குறித்து அடிக்கடி எழுதுங்கள்… ஆசிர்வாதங்களுடன்… அம்மா” என்ற வார்த்தைகளை மட்டும் இல்லாமல் ஆசீர்வாதங்களையும் சுமந்து சென்ற அந்தக் கடிதங்கள் சாமனியர்களின் காவியங்கள்.

அன்று பிள்ளைகளின் மணியார்டர்களை கொண்டுவந்த அஞ்சலகங்கள் இன்றும் முதியோர் உதவித்தொகை, ஓய்வுதியங்களைப் பெற்றுத்தரும் சேவகனாக முதியவர்களுக்கு திகழ்கிறது. “அன்புள்ள…” எனத் தொடங்கும் கடித வரிகள். இது வெறும் வார்த்தை மட்டும் இல்லை… பல தலைமுறைகளின் இதங்களை அடியாழத்திலிருந்து நனைத்து, இணைத்த மந்திரச்சொல்.

• ஒரு குறிப்பிட்ட செய்தியை, பொருளை முடிய உரையில் இட்டு எடுத்துச் செல்வதற்கு அஞ்சல் என்று பெயர். உலக அஞ்சல் தினம் அக்டோபர் 9-ல் உலக அளவில் கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 1874-ல் சுவிட்சர்லாந்திலுள்ள பேர்ன் நகரில், அக்டோபர் 9-ம் தேதி சர்வதேச அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்ட தினமே உலக அஞ்சல் தினமாகக் கொள்ளப்படுகிறது. மொத்தம் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

• ஆதி காலத்தில் செய்தி பரிமாற்றம் புகை சமிக்ஞை, கூக்குரல் ஒலி, புறா தூது, அஞ்சல் ஓட்டம் வழியாக நடைபெற்றது. நாளடைவில் அஞ்சல், குதிரை வண்டி, ரயில் வண்டி, பேருந்து, விமானம், கப்பல் ஊடாக நடைபெற்று வந்தது. இன்று குறுஞ்செய்தி, மின்னஞ்சல், தொலை-நகல் என பரிணாமம் அடைந்துள்ளது.

• ஆரம்பத்தில் தபால்களை சேமிக்க தபால் பெட்டி பயன்படுத்தப்படவில்லை. 1653-ஆம் ஆண்டு லாங்குவிலே மாகாண மின்ஷ்டர் பாகுட் என்ற தபால் அதிபரின் மனைவியின் யோசனையின் பேரில்தான் தபால் பெட்டி அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தபால் பெட்டிக்கு மாதிரி வடிவத்தை சார்லஸ் ரீவ்ஸ் என்பவர் அமைத்துக் கொடுத்தார். மக்களின் பார்வையை உடனடியாக ஈர்க்க வேண்டும் என்பதற்காக சிவப்பு வண்ணத்தில் தபால் பெட்டிகள் வைக்கப்பட்டன.

• இந்தியாவில் ரயில் சேவையைப் போல தபால் சேவையும் பிரிட்டிஷாரால் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. 1766-ம் ஆண்டு ராபர்ட் கிளைவ் முதலில் சென்னையில் தபால் சேவையை அறிமுகம் செய்து தொடங்கி வைத்தார். அப்போது கம்பெனி தபால்களோடு அதிகாரிகள் தங்களது சொந்த தபால்களையும் அனுப்ப அனுமதிக்கப்பட்டது. தொடர்ந்து 1786-ம் ஆண்டு சென்னையில் முதன் முதலாக பொது தபால் சேவை மையம் தொடங்கப்பட்டது.

• உலகிலேயே அதிக தபால் நிலையங்களை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. தற்போது நாடு முழுவதும் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 333 தபால் நிலையங்கள் செயல்படுகின்றன. இதில் 89 சதவீதம் கிராமங்களில் உள்ளன. இந்தியா முழுவதும் 23 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 5 லட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் இத்துறையில் பணிபுரிகின்றனர்

• இந்திய அஞ்சல் துறை பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அதில் ஒன்று தான் ‘My Stamp’. நம் புகைப்படங்களையே நாம் அஞ்சல் தலைகளாக பெற முடியும். இதற்கு கட்டணம் ரூ.300. இதற்காக முறையாக தபால் துறையில் விண்ணப்பித்து ரூ.300-க்கு கட்டணம் செலுத்தி நமது புகைப்படத்துடன் 12 தபால் தலைகளைத் பெறலாம். இவை அனைத்து வயதினருக்கும் பொருந்தும். நாம் இதை பிறகுக்குப் பரிசாகவும் அளிக்கலாம்.

• இந்தியத் அஞ்சல் துறையின் அஞ்சல் சேவைகள் ஆறு வகையாகப் பிரிக்கப்பட்டு ஆறு வகை தபால் பெட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. ராஜதானிப் பிரிவு மஞ்சள் நிற தபால் பெட்டி. பச்சைப் பிரிவு - தபால் பெட்டி பச்சை நிறத்தில் இருக்கும். பெருநகரப் பிரிவு - நீல நிற தபால் பெட்டி. வணிகப் பிரிவு - பதிவு அஞ்சல் முதலான பல பிரிவுகளில் இந்த அஞ்சல்கள் மொத்தமாக தபால் நிலையங்களில் பெறப்படும். பருவ இதழ்கள் பிரிவு - ஒவ்வொரு இதழுக்கும் குறிப்பிட்ட நாட்கள் ஒதுக்கப்பட்டு அந்த நாட்களில் மட்டும் பத்திரிகை அஞ்சல்கள் பெறப்படுகின்றன. மொத்த அஞ்சல் பிரிவு - பெரும் வணிகர்களிடமிருந்து பெறப்படும் அதிகமான அஞ்சல்கள் அஞ்சல் பெட்டிக்கோ அல்லது அஞ்சலகத்திற்கோ செல்லாமல் அஞ்சல் பையில் இடப்பட்டு அஞ்சல் பிரிப்பகத்திற்கு நேரடியாக எடுத்துச் செல்லப்படும்.

• அஞ்சல்கள் வேகமாகவும் குழப்பமின்றிப் பிரிக்கப்பட்டு குறிப்பிட்ட பகுதிக்கு அனுப்புவதற்கு வசதியாக அஞ்சல் குறியீட்டு எண்கள் பயன்படுத்தப்படுகின்றன. 1972ல் கொண்டு வரப்பட்ட இந்தக் குறியீட்டு எண் திட்டத்தில் 6 இலக்கங்கள் இருக்கும். முதல் இலக்கம் அதன் மண்டலத்தைக் குறிக்கும். இரண்டாவது இலக்கம் துணை மண்டலத்தைக் குறிக்கும். மூன்றாவது இலக்கம் அந்த அஞ்சல் பிரிப்பக மாவட்டத்தைக் குறிக்கும். கடைசி மூன்று இலக்கங்கள் அந்த அஞ்சல் வட்டத்தின் அஞ்சல் நிலையத்தைக் குறிக்கும்.

• பொதுவாக அனைத்து அஞ்சல் நிலையங்களும் அஞ்சல்தலைகள் விற்பனை, அஞ்சல் அட்டை மற்றும் கடித உறைகள் விற்பனை, பதிவு அஞ்சல்கள் அனுப்புதல், அஞ்சல் மூலம் பணம் அனுப்புதல், அஞ்சல் மூலம் பொருட்கள் அனுப்புதல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அஞ்சல் சேவை போன்ற சேவைகளில் ஈடுபடுகின்றன.

• இந்தியாவில் அஞ்சல் அலுவலகங்கள் தபால் அனுப்பும் சேவைகளில் மட்டுமல்லாமல் பொது சேமநல நிதி, தேசிய சேமிப்புப் பத்திரம், வங்கி சேமிப்புக் கணக்கு, மாத வருவாய்த் திட்டம், வைப்புத் தொகைத் திட்டங்கள், பாஸ்போர்ட் விண்ணப்பம், தங்கப் பத்திரம், காப்பீட்டுத் திட்டச் சேவை, உள்ளுர் கேபிள் உரிமம்,கிசான் விகாஸ் பத்திரம் போன்ற பிற வசதிகளையும் பொதுமக்களுக்குத் தருகின்றன.

பல்வேறு விமர்சங்கள் இருந்தும் அவற்றைக் கடந்து கால ஓட்டத்திற்கு ஏற்ப இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் தபால் சேவை இன்றளவும் கோலோச்சிக் கொண்டிருக்கிறது.

அக்டோபர் 9: உலக அஞ்சல் தினம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x