

இந்திய தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் வாழ்க்கை அகிம்சையினால் கட்டமைக்கப்பட்டது.
1869 ஆம் ஆண்டு முதல் 1948 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். காந்தி தனது பள்ளிப்படிப்பிற்கு பிறகு பாரிஸ்டர் எனப்படும் வழக்கறிஞர் படிப்பை இங்கிலாந்தில் முடித்தார். தென்னாப்பிரிக்காவில் பணியாற்றியபோது இவருக்கு ஏற்பட்ட இனப்பாகுபாடு மற்றும் நிறவெறி பேதம் போன்ற கசப்பான அனுபவங்களே அவர் மாபெரும் அரசியல் சக்தியாக உருவாகக் காரணமாக அமைந்தது. இதுவே அவரை இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடத் தூண்டியதாகவும் கூறப்படுகிறது.
சத்தியாகிரகம் என்னும் அறவழியில் இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியவர் மகாத்மா. காந்தியின் அகிம்சை வழி இந்தியா மட்டுமல்லா உலக நாடுகளுக்கு பாடமாக அமைந்தது. மார்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா, பாரக் ஒபாமா,ஆங் சான் சூச்சி ஆகிய பல உலகத் தலைவர்கள் காந்தியை தலைவராக ஏற்றுக் கொண்டவர்கள். காந்தியின் அரசியல் தத்துவத்தின் சாரம் என்பது சந்தேகத்துக்கிடமின்றி பிறருக்கான அதிகாரமளிப்பு என்ற கருத்தாக்கம்தான். இதில் பாலினம், இனம், வர்க்கம், மதங்கள் என்ற வேற்றுமை இருந்ததில்லை.
காந்தியின் அகிம்சை முறை நேற்றைக்கு, இன்றைக்கு மட்டுமல்ல எந்தக் காலத்திற்கும் உதவும் என்பதை உணர்த்து கொள்வதற்கான மேற்கோள்கள் சில...
* தங்கம் மற்றும் வெள்ளி செல்வமல்ல, உடல்நலனே உண்மையான செல்வம்.
* உண்மை மற்றும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டது எனது மதம்.
* நேர்மையான கருத்து வேறுபாடு முன்னேற்றத்திற்கான நல்ல அறிகுறி.
* எங்கு அன்பு இருக்கின்றதோ அங்கு வாழ்க்கை இருக்கின்றது.
* மனிதகுலத்தின் வசம் உள்ள மிகப்பெரிய சக்தி அகிம்சை.
* என் வாழ்க்கையே எனது செய்தியாக உள்ளது.
* கோபம் மற்றும் சகிப்பின்மை ஆகியவை சரியான புரிதலின் எதிரிகள் ஆகும்.
* வன்முறையின் மிக மோசமான வடிவம் வறுமை.
* என்னுடைய அனுமதி இல்லாமல் யாரும் என்னை புண்படுத்த முடியாது.
* மனிதநேயம் ஒரு கடல்; கடலின் சில துளிகள் அசுத்தமானால், முழு கடலும் அசுத்தமாவதில்லை.
* மற்றவர்களுக்கு சேவை செய்வதில் உங்களை இழப்பதே, உங்களைக் கண்டறிய சிறந்த வழி.
* ஒரு நாட்டின் கலாசாரம் அந்நாட்டு மக்களின் இதயங்களிலும் ஆன்மாவிலும் வாழ்கிறது.
அக்டோபர் 2 .. காந்தியடிகள் பிறந்ததினம்..