

மாரடைப்புக்கான அறிகுறிகள் முதல் இதய பாதுகாப்பு வழிமுறைகள் வரை முழுமையாகவும் தெளிவாகவும் வழிகாட்டுகிறார் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி இதயவியல் துறை பேராசிரியர் மற்றும் இதயவியல் துறை தலைவருமான டாக்டர் ஜே.எம். ரவிச்சந்திரன் எட்வின்...
“உலகம் முழுவதும் `நம்பர் 1 கில்லர்` என்கிற வகையில் இதய நோய்தான் முதலிடத்தில் இருக்கிறது. பொதுவாக ஹார்ட் அட்டாக்கிற்கு சில முக்கிய காரணிகள் காரணங்களாக பார்க்கப்படுகிறது. அதில் முதலாவதாக புகைப்பிடித்தல், டயாபட்டீஸ், அதிக சுகர், ரத்த உயர் அழுத்தம், அதிகம் கொலஸ்ட்ரால், மன அழுத்தம், ஒரே இடத்தில் நீண்ட நேரம் இருப்பது, உடல் உழைப்பு இல்லாதது போன்றவை முதன்மையான காரணங்களாகும்.
இன்று நம் எல்லோரிடமும் உள்ள ஒரு முக்கிய பிரச்சினையாக நான் இதனைப் பார்க்கிறேன். அதாவது ஒவ்வொருவருக்கும் தங்களுடைய உடல் எடை, சுகர் அளவு, பிபி அளவு என்ன என்பது தெரிந்திருக்க வேண்டும். உங்கள் குடும்பத்தில் இந்த வியாதி யாருக்கும் இருக்கிறதா என்று கேட்டால் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். அந்தவயைிலான விழிப்புணர்வு ஒவ்வொருவருக்கும் வேண்டும்.
மாரடைப்புக்கான அறிகுறிகள்:
யார் யார் எல்லாம் கவனமாக இருக்க வேண்டும்?
சைலன்ட் ஹார்ட் அட்டாக்: தற்போது நிறைய பேருக்கு சைலன்ட் ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது. சைலன்ட் ஹார்ட் அட்டாக் என்பது ஏற்படுவதே தெரியாது. அது எப்படி வெளிப்படும் என்றால் சர்க்கரை நோயாளிகளுக்கு சில நேரங்களில் கால் உணர்வற்று மதமதப்பாகிவிடும். அதேபோல இருதய நோயாளிகளுக்கு இருதயத்தை சுற்றியுள்ள நரம்புகள் மதமதப்பாகி அது வலியை உணரும் சக்தியற்று இருக்கும். அந்த நேரத்தில் வலியானது இடது கை, தாடை, மூச்சு திணறல், நெஞ்சு, முதுகு போன்ற பகுதிகளிலும் மற்றும் வாய்வு பிடிப்பு போலவும் வெளிப்படும். இதனை மிகவும் கடினமான அறிகுறிகள் என்கிறோம்.
இந்த அறிகுறிகளுடன் ஏற்படும் வலியை ஹார்ட் அட்டாக் என்று அறியாமல் நிறைய பேர் கைவைத்தியங்களைச் செய்து கொள்கின்றனர். ஒன்றே ஒன்றுதான். இதய வலி வந்தால், நாம் உணர்ந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. இதில் எந்தவித தாமதமும் கூடாது. ஏன் என்றால் ஹார்ட் அட்டாக் ஏற்பட்ட முதல் 1 மணி நேரம் உயிரைக் காப்பாற்றக் கூடிய அனைத்து சாத்தியங்களும் உள்ளது. இந்த நேரத்தினை மருத்துவ உலகத்தில் `கோல்டன் ஹவர்ஸ்` என்கிறோம். அதனை தவற விடுவதாலேயே இன்று சைலன்ட் ஹார்ட் அட்டாக் நிறைய பேரின் உயிருக்கு ஆபத்தாகி இருக்கிறது.
லோடிங் டோஸ்: லோடிங் டோஸ் பற்றி எல்லோரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதாவது, Tab. Aspirin 300mg, Tab. Clopidogrel 300mg,Tab. Atrovastatin 80mg,Tab. Sorbitrate 5mg ஆகிய எமர்ஜென்சி மருந்துகளை இருதய நோயாளிகள், கொழுப்பு சத்து அதிகம் இருப்பவர்கள் எப்போதும் வைத்துக் கொள்வது நல்லது. இந்த மாத்திரைகளை ஹார்ட் அட்டாக் ஏற்படும் நேரத்தில் அல்லது இதய வலி நேரத்தில் உடனே சாப்பிடுவது நல்லது. முதல்கட்ட உதவியாக இது இருக்கும். அதன் பிறகு மருத்துவமனை சென்று மருத்துவரைச் சந்திப்பது நல்லது.
தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத் திணறல்: தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத் திணறல் இன்று அதிகரித்திருக்கிறது. இதயத்தை சரியாகப் பேணாமல் இருப்பவர்களுக்கு பொதுவாக தூக்கத்தில் மூச்சுத் திணறல் ஏற்படும். இது எப்படி என்றால் தூக்கத்தின்போது ஒரு வகையிலான திரவம் நுரையீரலுக்குள் சென்று விடும். அப்போது அவர்களால் தூங்க முடியாது. எழுந்து உட்கார்ந்து விடுவார்கள். இப்படியானவர்களுக்கு ஹார்ட் அட்டாக் 10 நாட்களுக்கு முன்பே வந்திருந்திருக்கும். அது தெரியாமல் நடமாடிக் கொண்டிருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் கட்டாயம் எக்கோ கார்டியோகிராம் பார்த்துக் கொள்வது நல்லது.
இதயத்தின் பாதுகாப்பு வழிகள்: மன அழுத்தத்தை தள்ளி வையுங்கள். கோபத்தை விட்டுவிடுங்கள். சந்தோஷமாக இருங்கள். அதுபோக நமக்கான ரிஸ்க் ஃபேக்டர் என்ன என்பதை ஒவ்வொருவரும் கண்டறிய வேண்டும். அதாவது சுகர், இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் கட்டுக்குள் இருக்கிறதா என்பன போன்ற அடிப்படை டெஸ்ட்களை எடுத்து தெரிந்துகொண்டால் போதும். அதன்பிறகு என்னென்ன பிரச்சினைகள் இருக்கிறது என தெரிவதால் முதலில் அதனை கட்டுக்குள் கொண்டு வந்தாலே இதய நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
பெண்களுக்கு 30 முதல் 35 வயதிற்குள் ஹார்ட் அட்டாக் வருகிறது. முன்பு அவர்களுக்கு அப்படி ஏற்பட்டதில்லை. ஏனென்றால் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு இருப்பதால் அவர்களுக்கு அந்த பாதிப்பு ஏற்படாது. ஆனால் இன்று ஆண்களுக்கு இணையாக அவர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.
இடுப்பின் அளவைக் கவனியுங்கள்: பொதுவாக எல்லோரும் வயிற்றின் அளவைக் கவனியுங்கள். தொந்தியை வர விடாதீர்கள். தொந்தி வந்துவிட்டால் போதும் கட்டாயம் சுகர், ப்ரஷர், கொலஸ்ட்ரால், ஹார்ட் அட்டாக் என நான்கு வியாதிகளும் வந்துவிடும்.
எனவே அரிசி சாப்பாடு அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள். நிறைய பச்சைக் காய்கறிகள் சாப்பிடுங்கள். குறைந்தது நாளொன்றுக்கு முக்கால் மணிநேரம் உடற்பயிற்சி அவசியம்” என்கிறார் டாக்டர் ஜே.எம்.ரவிச்சந்திரன் எட்வின்.