

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா நகரில் விமரிசையாக துர்கா பூஜை கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. அதனை முன்னிட்டு நகரில் பந்தல் அமைத்து, துர்கா சிலைகள் வைத்து வழிபாடு நடந்து வருகிறது. இந்நிலையில், அப்படி அமைக்கப்பட்டுள்ள பந்தல்களில் பாலியல் தொழிலாளர்களின் வாழ்வை பிரதிபலிக்கும் வகையில் ஒரு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இதில் இடம்பெற்றுள்ள சிலிகான் துர்கா சிலையும் கவனம் ஈர்த்து வருகிறது.
கொல்கத்தா நகரில் வெவ்வேறு வகையிலான கருப்பொருளில் துர்கா பூஜை கொண்டாட்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றுதான் இது. இந்தப் பந்தலில் வைக்கப்பட்டுள்ள துர்கா தேவி சிலை வழக்கத்திற்கு மாறாக உள்ளது. இந்த வகையிலான தேவி சிலை வடிவமைப்பது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பந்தலில் இடம்பெற்றுள்ள துர்கா தேவி, கையில் ஒரு குழந்தையை அரவணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக துர்கா தேவி சிலைகள் திரிசூலம் ஏந்தியபடி வடிவமைக்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. துர்கா தேவியின் கூந்தல் காற்றில் பறக்கும் வகையில் உள்ளது. சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தால் ஆன பெங்காலி புடவையை அணிந்துள்ளார். அவருக்கு பின்பக்கம் விநாயகர், லட்சுமி மற்றும் சரஸ்வதி ஆகியோர் உள்ளனர். இந்த சிலை பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கையின் மற்றொரு பக்கத்தை சுட்டிக்காட்டும் வகையில் உள்ளது. குறிப்பாக அவர்களது தாய் உள்ளம் இங்கு சிலை மூலம் பிரதிபலிக்கிறது.
“வித்தியாசமான தீமில் பந்தல் அமைக்க வேண்டும் என முடிவு செய்தோம். ஆறு மாதத்திற்கு முன்பே சிலிகான் சிலை வைக்க திட்டமிட்டோம். அது சமூகத்திற்கும் பயன் அளிக்கும் வகையில் அமைய வேண்டும் என விரும்பினோம். பாலியல் தொழிலாளர்களின் பறிக்கப்பட்ட வாழ்க்கையை சுட்டிக் காட்டி உள்ளோம். இந்திய சட்டப்படி அவர்களுக்கு நிறைய உரிமைகள் உள்ளன. இருந்தாலும் இந்தச் சமூகம் அவர்களை ஏளனம் செய்கிறது” என வருந்துகிறார் இந்தப் பந்தலின் ஒருங்கிணைப்பாளர் அஞ்சன் பால். கொல்கத்தாவின் பராநகர் நவ்பரா தாதாபாய் சங்க துர்கா பூஜை குழு இந்த சிலையை தங்களது குழுவின் பந்தலில் வைத்துள்ளது.