

பழநி: வெறிநோய் (வெறிநாய் கடிப்பதால் ஏற்படும் நோய் ‘ரேபிஸ்’) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, மக்களை பாதுகாக்க ஆண்டுதோறும் செப்டம்பர் 28-ம் தேதி உலக வெறிநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, 16-வது உலக வெறிநோய் தினமான இன்று ‘ஒன் ஹெல்த்ஜீரோ டெத்’ என்ற கருத்தின் அடிப்படையில், அனைத்து துறைகளும் 2030-ம் ஆண்டுக்குள் நாய்கள் வழியாக பரவும் வெறிநோய் இறப்பை பூஜ்ஜியமாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடைபிடிக்கப்படுகிறது.
உலகில் 150 நாடுகளுக்கு மேல் வெறிநோய் பாதிப்புக்கு ஆளாகி ஆண்டுதோறும் 59 ஆயிரம் பேர் வரை இறக்கின்றனர். இதில் 95 சதவீதம் இறப்பு ஆப்பிரிக்கா, ஆசியாவில் ஏற்படுகிறது. உலகம் முழுவதும் 9 நிமிடத்துக்கு ஒருவர் வெறிநோயால் இறப்பதாக உலக சுகாதார நிறுவன தரவுகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து திண்டுக்கல் கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிமைய உதவிப் பேராசிரியர் ம.சிவக்குமார் கூறியதாவது:
இந்தியாவில் இதுவரை வெறிநோய் பாதிப்பில் இறப்போர் தொடர்பான முழுமையான இறப்பு எண்ணிக்கை கண்டறியப்படவில்லை. இருந்தும் ஆண்டுக்கு 18 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரைஇறக்கலாம் என தரவுகள் தெரிவிக்கின்றன. இதில் 30 முதல் 60 சதவீதம்வரை 15 வயதுக்குள் உள்ள சிறார்கள்தான். மேலும் 97 சதவீத பாதிப்புகள், இறப்புகள் நாய்களால் பரவும்வெறிநோயால் மட்டுமே ஏற்படுகிறது.
உமிழ்நீரில் நச்சுயிரி வெளியேறும்
நோய் அறிகுறி தென்பட்ட 3 நாட்களிலேயே, நாயின் உமிழ்நீர் வழியாக நச்சுயிரி வெளிவரத் தொடங்குகிறது. நோய் பாதித்த நாய், உயிரிழக்கும் வரை உமிழ்நீர் வழியாக ரேபிஸ் நச்சுயிரி வெளியேறும். அறிகுறி தென்பட்ட ஒரு வாரத்தில் நோய் பாதித்த நாய் இறந்துவிடும். மேலும், நோய் பாதித்த மற்ற விலங்குகள் கடிப்பதன் மூலமும் உமிழ்நீர் வழியாக நோய் பரவும்.
உடலில் உள்ள சிராய்ப்புகள், கீறல்கள், காயங்களில் நோய் பாதித்த நாயின் உமிழ்நீர் படுவதன் மூலமும் இந்நோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அதே சமயம் உடலில் சவ்வு படலத்தில் புண்கள் இருக்கும் பட்சத்தில், நோய் பாதிக்கப்பட்ட விலங்கின் உமிழ்நீர் நேரடியாகபடும்போது இந்நோய் பரவுகிறது.
மனிதர்களிடம் நோய்க்கான அறிகுறி தோன்றிவிட்டால் இறப்பு நிச்சயம். நாய் கடித்த இடத்தில் வலி, அரிப்பு காணப்படும். குரல்வளை வலிப்பு ஏற்படுவதால் தண்ணீர் குடிக்க முடியாத நிலை, உணவை விழுங்க முடியாத நிலை, வாந்தி, வலிப்பு ஏற்பட்டு இறுதியில் மரணம் ஏற்படும்.
வெறிநாய் ஆக்ரோஷமாக காணப்படும். கண்ணில் தென்படும் மனிதர்களை கடிக்க தொடங்கும். வளர்த்தவர்கள் அழைக்கும்போது கவனிக்காது. வெறிநாய், ஒளிக்கு பயப்படும் என்பதால் இருள் சூழ்ந்த அல்லது ஒளிபடாத இடத்தில் தனித்து இருக்கும்.
கடிபட்ட இடத்தை கார்போலிக் அமிலம் நிறைந்த சோப்பு போட்டு குழாயில் வழிந்தோடும் நீரை வைத்து 15 நிமிடங்களுக்கு நன்றாக கழுவ வேண்டும். போவிடோன் ஐயோடின் திரவத்தை கடித்த இடத்தில் இட வேண்டும். மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும்.
வெறிநாய் கடித்தால் முதல் நாள் தடுப்பூசிக்கு பின் 3, 7, 14 மற்றும் 28 ஆகிய தேதிகளில் தடுப்பூசி போட வேண்டும். ரேபிஸ் நோய் 100 சதவீதம் தடுப்பூசியால் தடுக்கக் கூடியது. செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதன் மூலம் நாய்கள் வழியாக ரேபிஸ் பரவு வதைத் தடுக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.