

மெல்போர்ன்: பூமியில் சுமார் 20 ஆயிரம் லட்சம் கோடி எறும்புகள் வாழ்கின்றன என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஹாங்காங்கை சேர்ந்த விஞ்ஞானிகள், எறும்புகள் குறித்து பல ஆண்டுகளாக ஆய்வு செய்து விரிவான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதன் சுருக்கம் வருமாறு:
டைனோசர் காலத்தில் இருந்தே பூமியில் எறும்புகள் வாழ்வது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அன்டார்டிகா, கிரீன்லேண்ட், ஐஸ்லாந்து மற்றும் குறிப்பிட்ட சில தீவுகளைத் தவிர்த்து உலகின் அனைத்து பகுதிகளிலும் எறும்புகள் வாழ்கின்றன.
தற்போது உலகம் முழுவதும் 15,700-க்கும் மேற்பட்ட எறும்பு இனங்கள் உள்ளன. பெரும்பாலான எறும்புகள் கருப்பு, அடர் பழுப்பு, சிவப்பு நிறத்தில் காணப்படுகின்றன. பல்வேறு கட்ட ஆய்வுகளின் அடிப்படையில் பூமியில் சுமார் 20 ஆயிரம் லட்சம் கோடிக்கும் அதிகமாக எறும்புகள் வாழ்வதாக கணக்கிட்டு உள்ளோம். பூமியில் வாழும் மொத்த எறும்புகளின் எடை, பறவைகள், பாலூட்டிகளின் எடையை விட அதிகமாகும்.
பூமியில் தற்போது வாழும் மனிதர்களின் எடையில் சுமார் 20 சதவீதம் அளவுக்கு எறும்புகளின் எடை உள்ளது.
உலகின் சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாப்பதில் எறும்புகளின் பங்களிப்பு மிக முக்கியமானது. அவை மண்ணை வளப்படுத்துகின்றன. அதாவது மண்ணில் காற்று உட்புகுவதற்கான பணியை எறும்புகள் மேற்கொள்கின்றன. இதன்மூலம் செடி, மரங்களின் வேர்களுக்கு நீர் மற்றும் ஆக்சிஜன் எளிதாக கொண்டு செல்லப்படுகிறது.
விதைகளை மண்ணுக்கு அடியில் எறும்புகள் எடுத்துச் செல்கின்றன. அங்கு விதைகளின் மேற்புறத்தில் உள்ள 'எலையோசோம்' பகுதியை எறும்புகள் உணவாக உட்கொள்கின்றன. இதன்காரணமாக விதைகளில் இருந்து செடிகள் மிக எளிதாக முளைக்கின்றன.
பூமியில் பூச்சியினங்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதில் எறும்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எறும்புகள் இல்லையென்றால் பூச்சிகளின் இனப்பெருக்கம் அதிகரித்துபெரும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு வழிவகுத்துவிடும்.
பருவநிலை மாற்றத்தால் மனிதர்கள் மட்டுமன்றி, எறும்புகளும் அதிகமாகப் பாதிக்கப்பட்டு உள்ளன. நகரமயமாக்கல், ரசாயனங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால் எறும்புகளின் இனப்பெருக்கம் குறைந்து வருகிறது. உருவத்தில் சிறிதாக இருந்தாலும் உலகின் சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாக்க எறும்புகள் மிக அவசியம். அவற்றை பாதுகாப்பது நமது கடமை. இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.