உடல் பருமன் பிரச்சினையால் இந்தியாவில் ஆண்டுதோறும் ரூ.2.8 லட்சம் கோடி செலவு - பிஎம்ஜே குளோபல் ஹெல்த் தகவல்
புதுடெல்லி: இந்திய மக்கள் தொகையில் 17 சதவீதம் பேர் உடல் பருமன் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.2.8 லட்சம் கோடி வரை செலவிடப்படுகிறது. இது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவீதத்துக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
உடல் பருமன் பிரச்சினைகளின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையிலான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் உடல் பருமன் பிரச்சினையில் 2060-ல் இந்தியாவுக்கு ஏற்படும் இழப்பு ரூ.69 லட்சம் கோடியாக (850 பில்லியன் டாலர்) அதிகரிக்கும்.
இது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதமாக இருக்கும் என பிஎம்ஜே குளோபல் ஹெல்த் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக எடை மற்றும் உடல் பருமன் பிரச்சினைகளால் அதிக பொருளாதார இழப்பை சந்திக்கும் நாடுகளில் உலக அளவில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் 10 டிரில்லியன் டாலர் இழப்புடன் சீனா முதலிடத்திலும், 2.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இழப்புடன் அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளன.
உடல் பருமன் பிரச்சினை மனித உடலில் 28 நோய்கள் உருவாவதற்கு காரணமாகிறது. நீரிழிவு, கல்லீரல் புற்றுநோய், முதுகு தண்டு வலி, கீல்வாதம் உள்ளிட்ட பல நோய்களுக்கு உடல் பருமனே அடிப்படை காரணமாக உள்ளது மருத்துவ ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உடல் பருமன் அதிகரிக்கும் போது கூடுதலாக நோய்களும் பாதிக்கும் என்று கூறுகின்றனர்.
161 நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உடல் பருமனால் ஏற்படும் பொருளாதார இழப்பு 2.19 சதவீதத்திலிருந்து 3.3 சதவீதமாக உயரும் என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
