வீடு போன்றதே நாடும்: சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுடன் 7 நாட்கள்!

வீடு போன்றதே நாடும்: சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுடன் 7 நாட்கள்!

Published on

ஒரு நகரத்தின் அழகு, அந்த நகரம் எந்த அளவுக்கு தூய்மையாக உள்ளது என்பதை வைத்துதான் அளவிடப்படும் என்றால் அது மிகையல்ல. சென்னையை சிங்கார சென்னையாக மாற்ற அரசு எத்தனை திட்டங்களை செயல்படுத்தினாலும், ஒரு நாள் தூய்மை பணிகள் நடைபெறவில்லை என்றால் நிலைமை மிகவும் மோசமான நிலைக்கு சென்றுவிடும்.

சமீபத்தில் வெளியான நெஞ்சுக்கு நீதி படத்தில் தூய்மை பணியாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் எந்த நிலை ஏற்படும் என்பதை காட்சிப்படுத்தி இருப்பார்கள். இப்படி ஒரு சிறு கிராமம் முதல் பெரிய நகரம் வரையில் அங்கு வசிக்கும் மக்களின் சுகாதாரத்தை பாதுகாப்பதில் தூய்மை பணியாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. ஆனால், பல நேரங்களில் அந்த தூய்மை பணியாளர்களும் நம்மை போன்ற மனிதர்கள்தான் என்பதை நம்மில் பலர் மறந்து விடுகிறோம்.

426 சதுர கி.மீ கொண்ட சென்னை மாநகராட்சியில் மொத்தம் 15 மண்டலங்களும், 200 வார்டுகளும் உள்ளது. 78 லட்சம் மக்கள் வாழும் சென்னை மாநகராட்சியில் மொத்தம் 17 லட்சம் குடியிருப்புகளில் இருந்து குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. மொத்தம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் சென்னையில் தூய்மை பணியில் ஈடுபடுகின்றனர். சென்னை மாநகராட்சியில் இரண்டு நேரங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் இரவு 11 மணிக்கு தொடங்கி அதிகாலை 4 மணி நகரின் முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் தூய்மைப்படுத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து காலையில் வீடு வீடாக சென்று குப்பை சேகரிப்படும்.

சென்னையில் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என்று தரம் பிரித்து வழங்க வேண்டும், சாலைகளில் குப்பைகளை கொட்டக் கூடாது என்று பல முறை மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிட்டும் பலர் சாலைகளின்தான் குப்பைகளை கொட்டுகின்றனர். குறிப்பாக, முக்கிய சாலைகள் தொடங்கி ஒவ்வொரு தெருவிலும் குப்பை தொட்டிகள் இருந்தாலும் அதில் குப்பைகளை போடுவதற்கு பலருக்கு மனம் வருவது இல்லை.

ஆனால் மறு நாள் காலையில் அந்த சாலையில் தூய்மை பணிகளை மேற்கொள்ளாமல் இருந்தால் நாம் மனதிற்குள் திட்டுவது அந்த தூய்மை பணியாளர்களைதான். நாம் தினசரி அதிகாலை தூய்மையான சாலைகளில் பயணிக்க இவர்கள் இரவு முழுவதும் கண் விழித்து தூய்மைப் பணிகளை மேற்கொள்கின்றனர். அப்படி சென்னையில் இரவு நேரங்களில் தூய்மைப் பணி மேற்கொள்ளும் தூய்மை பணியாளர்களின் தினசரி பணிகளை அவர்களுடன் தொடர்ந்து ஒரு வாரம் பயணித்து பதிவு செய்துள்ளது இந்து தமிழ் திசை குழு.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in