

மும்பை: மனைவியை இழந்தபிறகு தனியாளாக குழந்தை வளர்த்து வரும் பிரபல வில்லன் நடிகர் ராகுல் தேவ், முதல்முறையாக வேதனை பக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கோலிவுட், பாலிவுட், டோலிவுட் சினிமாவின் மிகவும் பிரபலமான வில்லன்களில் ஒருவர் ராகுல் தேவ். தமிழ் சினிமாவில் விஜயகாந்தின் நரசிம்மா தொடங்கி அஜித்தின் வேதாளம், சரவணனின் லெஜெண்ட் வரை பல படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களில் கொடூரமான வில்லனாக தோன்றிய ராகுல் தேவ்வின் நிஜ வாழ்க்கை அதற்கு நேர்மாறாக உள்ளது. சமீபத்தில் ஒரு நேர்காணலில், தனது மனைவியின் மரணத்திற்குப் பிறகு, குழந்தையை தனியாக வளர்த்து வருவது குறித்து உருக்கமாக பேசியுள்ளார் ராகுல்.
ராகுலின் மனைவி ரினா தேவ் கடந்த 2009ல் புற்றுநோயால் உயிரிழந்தார். இதன்பின் இத்தனை வருடங்களாக தனது மகன் சித்தார்த்தை ஒற்றை ஆளாக வளர்த்து வருகிறார். சிங்கிள் ஃபாதராக குழந்தையை வளர்ந்துவரும் ராகுல் அதில் உள்ள கஷ்டங்கள் குறித்து பேசுகையில், "குழந்தை வளர்ப்பு என்பது எளிதானது அல்ல. குழந்தைகளை வளர்ப்பதில் பெண்கள் பெரும் பங்கு வகிக்கிறார்கள். குழந்தைகளைப் பெண்கள் புரிந்து கொள்ளும் விதமும், குழந்தைகள் மீது அவர்கள் கொண்டுள்ள பொறுமையையும் கடைபிடிக்க நான் முயற்சித்தேன்.
ஆனால், பல சமயங்களில் எனது பொறுமையை இழக்க நேரிட்டது. பெண்கள் குழந்தைகளை பெற்றெடுப்பதால் அவர்களுக்கு குழந்தைகள் மீதான பொறுமை வருகிறது என்றே நினைக்கிறேன். எனது மகனுக்கு நான் அம்மாவாகவும் அப்பாவாகவும் இருக்க முயற்சித்தேன். பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் மீட்டிங்களுக்கு செல்லும்போது பெரும்பாலும் அங்கு தாய்மார்களையே பல முறை பார்த்துள்ளேன். அரிதாகவே, ஆண்கள் வருகின்றனர். இதெல்லாம் மிகவும் வேதனையானது. எனக்கு நடந்த பலவற்றை நினைவில் வைத்துக் கொள்ள விரும்பவில்லை" என்று தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.