பொங்கல் பண்டிகைக்காக தேனி மாவட்டத்தில் கரும்பு விவசாயம் மும்முரம்

பொங்கல் பண்டிகைக்காக தேனி மாவட்டத்தில் கரும்பு விவசாயம் மும்முரம்
Updated on
1 min read

சின்னமனூர்: வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தேனி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கரும்பு விவசாயம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் தை முதல் நாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு உழவுக்கு உறுதுணையாக இருக்கும் மாட்டுக்கு சிறப்புகள் செய்யப்படுவதுடன், போகி உள்ளிட்ட பண்டிகையும் கொண்டாடப்படும். இந்நாட்களில் கரும்புகளின் தேவை அதிகம் இருக்கும். இதற்காக தை மாதம் அறுவடைக்கு வரும்வகையில் கரும்பு கரனைகள் விதைப்பு செய்யப்படுவது வழக்கம்.

இதன்படி தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி, சின்னமனூர், உத்தமபாளையம், கோட்டூர், கூழையனூர், உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு விவசாயம் அதிகளவில் நடைபெற்று வருகிறது. தற்போது சோகைகளுடன் கரும்புகள் தளிர் இளம்பருவத்தில் உள்ளன. கரோனாவினால் இரண்டு ஆண்டுகள் கரும்பு விற்பனை பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு ஓரளவுக்கு விலை கிடைத்தது. இதனால் ஆர்வமுடன் விவசாயிகள் கரும்பு விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து கூழையனூரைச் சேர்ந்த விவசாயி முத்துப்பேச்சி என்பவர் கூறுகையில், ''பத்து மாதம் பிள்ளையைப் போல பாதுகாத்து வளர்த்தால்தான் தை மாதம் உரிய மகசூல் கிடைக்கும். தற்போது 3, 4 மாத பயிராக உள்ளது. தண்ணீர் பாய்ச்சவும், சூரியஒளி உள்ளுக்குள் பரவவும் தற்போது சோகைளை கரும்புடன் கட்டி வைத்துள்ளோம். டிசம்பர் முதல் அறுவடைக்கு வரும். பொங்கலன்று ரேஷன் கடையில் முழுக்கரும்பு வழங்குவதால் தேவை அதிகரித்து உரிய விலை கிடைக்கும்'' என்று நம்பிக்கை உள்ளது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in