Published : 15 Sep 2022 10:42 AM
Last Updated : 15 Sep 2022 10:42 AM

பொறியாளர் தினம் | எந்திர லோகத்து படைப்பாளிகளின் சிறப்புகள்

விஸ்வேஸ்வரய்யா

பேரண்டத்தை வடிவமைத்தது இயற்கை எனும் மகா சக்தியோ அல்லது கடவுளாகவோ கூட இருக்கலாம். ஆனால் இன்றைய நவநாகரிக உலகத்தை கட்டமைத்ததில் பொறியாளர்களின் பங்கு பெரிதினும் பெரிது. அவர்களது பேர் உழைப்புக்கு கிடைத்த பலன் தான் இன்று சாமானிய மக்களின் உள்ளங்கையில் உலகம் அடங்கி உள்ளது.

செவ்வாய் கிரகத்துக்கு சுற்றுலா செல்ல என்பதில் தொடங்கி சாத்தியமில்லாதவற்றை அறிவியல் துணை கொண்டு சாத்தியமாக்கும் வல்லமையை கொண்டவர்கள் பொறியாளர்கள் தான். ஒரு மலையை சல்லிசல்லியாக உடைத்து மண்ணாக மாற்றுவது. அந்த மண்ணை கொண்டு மாபெரும் கட்டிடங்களை எழுப்புவது. பழைய ஃபேண்டஸி திரைப்படங்களில் வருவது போல தொழில்நுட்பத்தின் துணையோடு கண்டம் விட்டு கண்டம் உள்ள நட்புகளையும், உறவுகளையும் நேருக்கு நேர் அளவளாவ செய்வது என அனைத்திற்கும் பொறியாளர்கள் தான் காரணம்.

உலக அளவில் பொறியாளர் தினம் ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. நம் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ம் தேதி அன்று பொறியாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா மாதிரியான வளர்ந்து வரும் நாடுகளில் பெரும்பாலான வளரும் தலைமுறையினர் கற்க விரும்பும் பிரதான சாய்ஸ்களில் தொழில்முறை கல்வியான பொறியியல் படிப்புக்கு அதிக டிமாண்ட் உள்ளது. இன்று உலகை ஆளும் தொழில்நுட்பத்தின் துணைகொண்டு ஆட்கொண்டுள்ள டெக் சாம்ராட்களின் தலைமை பொறுப்புகளை கவனித்து வருவது இந்தியாவில் பொறியியல் கல்வி பயின்ற இந்திய பொறியாளர்கள் தான் என்பது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை.

பொறியாளர் தினம்?- இந்தியாவின் முதல் கட்டிட பொறியாளர் என போற்றப்படும் மோக்சகுண்டம் விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதியை சிறப்பிக்கும் வகையில் இந்தியாவில் இந்த நாள் பொறியாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவர் இந்திய பொறியியலின் தந்தை என அறியப்படுகிறார். காவிரி ஆற்றின் குறுக்கே கிருஷ்ணராஜ சாகர் அணையை காட்டினார். அப்போதைய ஆசியாவில் அது மிகப்பெரிய அணையாக அமைந்தது. கிட்டத்தட்ட லிங்கா படத்தில் வருவதை போல அணை கட்டும் பணியின் போது பல்வேறு சவால்களை அவர் எதிர்கொண்டுள்ளார். டாடா ஸ்டீல் குழுமத்தின் இயக்குனர் குழுவிலும் பணியாற்றியுள்ளார். இவருக்கு பாரத ரத்னா விருதும் வழங்கப்பட்டுள்ளது. சர் எம்.வி என அழைக்கப்பட்டுள்ளார். 1968 முதல் அவரது பிறந்தநாளை இந்திய நாடு பொறியாளர் தினமாக கொண்டாடி வருகிறது.

இலங்கை, தென்னாப்பிரிக்கா மற்றும் தான்சானியா போன்ற நாடுகளிலும் இன்றைய நாள் பொறியாளர் தினமாக கொண்டாடும் வழக்கத்தை கொண்டுள்ளது.

உலகம் அறிந்த பிரபல இந்திய பொறியாளர்கள்: இன்றைய நவீன உலக செயல்பாட்டுக்கு காரணகர்த்தாவாக விளங்குவது பொறியாளர்கள் தான். அவர்களது இன்ஸ்ட்ரூமென்டல் டிசைன்ஸ் மற்றும் கட்டமைப்புகளை அதனை நமக்கு மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துகிறது. இந்த பொறியாளர் தினத்தில் உலகம் அறிந்த பிரபல இந்திய பொறியாளர்களை நினைவு கொள்வதும் அவசியம். ஏ.பி.ஜே. அப்துல் கலாம், ஈ.ஸ்ரீதரன், நாராயண மூர்த்தி, சுந்தர் பிச்சை, சத்யா நாதெள்ளா, வர்கீஸ் குரியன் மற்றும் சத்யநாராயண் கங்காராம் பிட்ரோடா போன்ற பொறியாளர்கள் உள்ளனர்.

பொறியியல் துறையின் டைம்லைன் மைல்கற்கள்:

1698: பிரிட்டிஷ் பொறியாளர் தாமஸ் சேவரி நீராவி இயந்திரத்தை வடிவமைத்தார்.
1873: பெல்ஜிய பொறியாளர் ஜெனோப் கிராம் ‘மின் மோட்டாரை வடிவமைத்தார்.
1880: ரசாயன பொறியியல் வளர்ச்சி பெற தொடங்கியது.

இந்தியாவில் பொறியியல் கல்வி பயின்ற, பயிலும் இளைஞர்களின் எதிர்காலம், வேலைவாய்ப்பு போன்றவை குறித்து பல்வேறு விதமான எதிர்மறையான கருத்துகள் நிலவுகின்றன. எந்த பணியாக இருந்தாலும் அதை பிடித்து செய்தால் அதில் சக்ஸஸ் நிச்சயம். அந்த வெற்றி மந்திரத்தை நம்பி இளைஞர்கள் பொறியியல் கல்வியை தெரிவு செய்துள்ளனர். நிச்சயம் அவர்களுக்கு வெற்றி வசமாகும் என நம்புவோம்.

செப்டம்பர் 15.. பொறியாளர் தினம்

அனைத்து பொறியாளர்களுக்கும் பொறியாளர் தின வாழ்த்துகள்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x