

பெங்களூரு: நாட்டிலேயே அதிக போக்குவரத்துநெரிசல் கொண்ட நகரங்களின் பட்டியலில் பெங்களூரு நகரம் எப்போதும் முன்னணியில் இருக்கிறது. அதிலும்கடந்த வாரம் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் சாலைகள் சேதமடைந்து, கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் இரைப்பைகுடல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் கோவிந்த் நந்தகுமாரின் கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டது.
மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கான நேரம் குறிக்கப்பட்டு, நோயாளி காத்துக் கொண்டிருந்ததால் மருத்துவர் கோவிந்த் நந்தகுமார் காரை ஓரமாக நிறுத்திவிட்டு அங்கிருந்து 3 கி.மீ. தூரம் ஓடிச் சென்றுள்ளார்.
சரியான நேரத்தில் மருத்துவமனையை அடைந்து வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடித்து, நோயாளியை அவர் காப்பாற்றியுள்ளார்.
இந்நிலையில் மருத்துவர் கோவிந்த் நந்தகுமார், போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் மருத்துவமனைக்கு வேகமாக ஓடும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. இதனைப் பார்த்த பலரும், அவரை வெகுவாக பாராட்டி பதிவிட்டுள்ளனர்.
இதுகுறித்து மருத்துவர் கோவிந்த்நந்தகுமார் கூறுகையில், ‘‘18 ஆண்டுகளாக மணிப்பால் மருத்துவமனையில் இரைப்பை குடல் அறுவை சிகிச்சைநிபுணராக பணியாற்றி வருகிறேன். நோயாளிகள் எனக்காக காத்திருப்பதைஒருநாளும் விரும்ப மாட்டேன்.
அன்றைய தினம் பெண் நோயாளி ஒருவருக்குஅவசரமாக லேப்ராஸ்கோபிக் பித்தப்பை அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவமனையில் இருந்து அழைத்தனர். சாலையில் மழை நீர் தேங்கி இருந்ததால் சர்ஜாப்பூர் செல்லும் சாலை நெடுகிலும் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.
எனது கார் கன்னிங்ஹாம் சாலையில் மாட்டிக் கொண்டது. சாலையில் வெள்ளம் ஆறு போல ஓடியதால் போக்குவரத்து சீராகும் என்ற நம்பிக்கையை இழந்தேன். அதே நேரத்தில் மருத்துவமனையில் நோயாளியை அறுவை சிகிச்சைக்காக தயார் செய்து வைத்து, எனக்கு அழைப்பு விடுத்தனர். இதனால்காரை அங்கேயே ஓரமாக நிறுத்திவிட்டு, காரில் இருந்து இறங்கி ஓட ஆரம்பித்தேன்.
நான் தினமும் உடற்பயிற்சி செய்வதால் ஓடுவது எளிதாக இருந்தது. வேகமாக ஓடி வந்ததால் குறித்த நேரத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிந்தது. 3 முதல் 5 கிமீ தூரம் வரைஓடி இருப்பேன். 30 நிமிடங்களில் மருத்துவமனையை அடைந்து, அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தேன். நோயாளி முழுவதுமாக குணமாகி வீடு திரும்பியுள்ளார்’’ என்றார்.