உலகில் 2 கோடிக்கு மேற்பட்டோர் கட்டாயத் திருமண உறவில் உள்ளனர்: ஐ.நா தகவல்

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
1 min read

நியூயார்க்:உலகில் 2 கோடிக்கும் மேற்பட்டோர் கட்டாயத் திருமண உறவில் இருக்கிறார்கள் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2030-ஆம் ஆண்டிற்குள் அனைத்து வகையிலான நவீன அடிமைத்தனத்தையும் ஒழிக்க ஐக்கிய நாடுகள் சபை இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த நிலையில், 2016 முதல் 2021 வரை கட்டாய வேலை (கொத்தடிமை முறை) மற்றும் கட்டாயத் திருமணத்தில் சிக்கியவர்களின் (விருப்பம் இல்லாதவர்களுடன் திருமணம் செய்து கொள்வது, விருப்பம் இல்லாமல் திருமண உறவில் நீடிப்பது) எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

இது குறித்து ஐக்கிய நாடுகளின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வாக் ஃப்ரீ ஃபவுண்டேஷனுடன் இணைந்து ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு அமைப்பு நடத்திய ஆய்வில், 2021-ஆம் ஆண்டு இறுதி வரை 2.8 கோடி பேர் கட்டாயத் தொழிலாளார்களாக ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். 2.2 கோடி பேர் கட்டாயத் திருமண உறவில் இருந்து கொண்டிருக்கிறார்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் பார்த்தால் உலக மக்கள் தொகையில் 150 பேரில் ஒருவர் நவீன அடிமைத்தனத்தில் இருக்கிறார் என்று தெரியவந்துள்ளது. தொழிலாளர்களின் நிலையை கரோனா காலம் மோசமாக்கியுள்ளது. 5-ல் ஒரு குழந்தை, குழந்தைத் தொழிலாளராக கட்டாயப்படுத்தப்படுகிறது.

நவீன அடிமைத்தனம் என்பது உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் உள்ளது. கட்டாயத் தொழிலாளர், கட்டாயத் திருமணங்கள் உயர் - நடுத்தர வருமானம் உடைய நாடுகளிலும் இருக்கின்றன. மேலும், பெண்கள் கட்டாயத் திருமணத்தில் இருப்பது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தலைவர் கை ரைடர் கூறும்போடு, “அடிமைத்தனத்தின் நிலைமை மேம்படவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. இம்மாதிரியான மனித உரிமை மீறலை நியாயப்படுத்த முடியாது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in