

அன்றாட வாழ்க்கைக்கு நம்பிக்கை அவசியமானது .. தற்கொலை தூண்டுதலுக்கு எதிரான முக்கிய ஆயுதமும் அதுவே...
- உளவியல் அறிஞரான கார்ல் மெனிங்கர்
ஒவ்வொரு 40 நொடிகளுக்கு உலகில் ஒரு தற்கொலை நடக்கிறது என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. உலகளவில் தற்கொலைகள் அதிகரிப்பதன் தீவிரத்தை உணர்ந்து அதனை பொது சுகாதார பிரச்சனையாகவே உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது.
2021 ஆண்டிற்கான இந்தியாவில் விபத்து மரணங்கள் மற்றும் தற்கொலைகள் அறிக்கை படி, இந்தியாவில் மொத்தம் 1,64,033 தற்கொலைகள் பதிவாகியுள்ளன. அதில் மகாராஷ்டிராவில் அதிக எண்ணிக்கையிலான தற்கொலைகள் பதிவாகியுள்ளன. மகாராஷ்டிரத்தை அடுத்து , தமிழ்நாடு மற்றும் மத்தியப் பிரதேசம் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன.
இந்தியாவில் தினக்கூலிகள்தான் அதிக அளவில் தற்கொலையில் ஈடுபடுகிறார்கள் என்றும், இவர்களுக்கு அடுத்து மாணவர்கள் அதிகளவில் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
தேர்வில் தோல்வி, குடும்பப் பிரச்சனை, நாள்பட்ட நோய் பாதிப்பு, போதை பொருட்களுக்கு அடிமையாதல்,கை கூடா காதல், மன அழுத்தம், தனிமை, வன்முறை, மனநோய், எதிர்கால பயம், வயயோதிகம் என தற்கொலை உணர்வுக்கான காரணம் ஏராளம்.
கண முடிவல்ல: தற்கொலை என்பது பெரும்பாலும் கணத்தில் எடுக்கும் முடிவாக இருப்பதில்லை. அது ஒரு சங்கிலி பிணைப்பு, எதோ ஒரு கட்டத்தில் வாழ்வின் மீதான நம்பிக்கை முற்றிலுமாக விடுபடும் பட்சத்தில் இறுதி தப்பித்தலாக தற்கொலை நினைத்து கொள்வதால் அதனை தேர்வு செய்கிறார்கள். அந்த தருணங்களில் அவர்களுக்கு போதிய ஆதரவுகளும், நம்பிக்கைகளும் கிடைக்கும் பட்சத்தில் நிச்சயம் அவர்களால தற்கொலை மன நிலையை கடக்க முடியும்.
சமூகப் பார்வை எப்படி உள்ளது? தற்கொலை செய்து கொள்பவர்களை கோழைகள், வாழ்வினை துணிவாக எதிர்கொள்ள முடியாதவர்கள், அவர்கள் வாழ்வதைவிட இறப்பதே மேல் என அறச்சீற்றம் கொள்ளும் சமூகமாக நமது சமூகம் இன்றளவு இருக்கிறது. உங்களுக்கு சாதகமான வாழ்வினை வாழ்ந்து கொண்டு, அடுத்தவர்களையும் இங்கு பார்’ இப்படித்தான் வாழ வேண்டும்’ என்று கட்டளையிடுவதில் அன்புக்கும், பரிவுக்கும் நிச்சயம் இடம் இருக்காது.
ஜப்பான், கொரிய நாடுகளில் தற்கொலை செய்துகொள்பவர்கள் அதிகம், அங்கு தற்கொலை அதிகரித்து வரும் அதே நேரத்தில் அது சார்ந்த விழிப்புணர்வுகளும் அதிகரித்து வருகின்றன. நாட்டின் வளர்ச்சித் திட்டங்களில் கவனம் செல்வதுபோல் தற்கொலை தடுப்பு திட்டங்களுக்கும் அந்நாடுகளின் அரசுக்கள் முக்கியத்துவம் அளிக்கின்றன. அமெரிக்காவில் பதின் பருவத்தினரிடம் ஏற்படும் தற்கொலை மனநிலையை நீக்க அங்கு வாரம் வாரம் பள்ளிகளில் உளவியல் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. இவ்வாறு உலகளவில் தற்கொலை விழிப்புணர்வுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் இங்கு நாம் சமூகமாக இத்தகைய முயற்சிகளை எடுக்கத் தவறிக் கொண்டிருக்கிறோம். இருப்பினும் கடந்த சில ஆண்டுகளில் தற்கொலை குறித்த விழிப்புணர்வுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடைபெறுவது சற்று ஆறுதல் அளிக்கக் கூடியதாக் இருக்கிறது
ஊடகங்களுக்கு பொறுப்பு தேவை: தற்கொலை செய்திகளை பரப்பரப்பு செய்திகளாக அணுகாமல் அதனை கூடுதல் பொறுப்புணர்வுடன் அணுக வேண்டிய தேவையும், கடமையும் ஊடகங்களுக்கு உள்ளது. முற்றிலும் கைவிடப்பட்ட நிலையில் ஒருவர் எடுக்கும் துயர முடிவுகளை உங்களது டிஆர்பிக்காக பயன்படுத்தக் கூடாது என்ற அறவுணர்வு ஊடகங்களுக்கு அவசியம்.
எல்லாவற்றைவிட உங்களுடைய பரப்பரப்பான தற்கொலை செய்தி, எங்கோ ஒரு பகுதியில் பதற்ற உணர்வுடன் இருக்கும் ஒருவரை தற்கொலைக்கு தூண்டும் என்ற அடிப்படை மனிதாபிமானம் ஊடகங்களுக்கு தேவை.
உடனடி தேவை என்ன? குடும்பத்தினரோ, நண்பர்களோ, காதலனோ, காதலியோ மனஅழுத்த நெருக்கடியில் சிக்கியுள்ளபோது அவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தேவையான உளவியல் ஆறுதல்களையும், நம்பிக்கைகளையும் அளிப்பது அவசியம். முதலில் தற்கொலை எண்ணம் கொண்டவர்களை மனம்விட்டு பேச அனுமதிக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் பேசும்பட்சத்தில் எதிர்மறையான முன் தீர்மானங்களை நாம் தவிர்ப்பதே அவர்களுக்கு நாம் அளிக்கும் முதல் நம்பிக்கைகயாக இருக்கும். மேலும், அவர்களை பதற்ற உணர்வுக்கோ, தனிமைக்கோ தள்ளாமல் வைத்திருப்பது அவசியம்.
மனநோயின் தீவிரம் அதிகமாக இருக்கும்பட்சத்தில் சிறந்த உளவியல் மருத்துவர்களையும், நிபுணர்களையும் அணுக உதவுவது சிறந்தது.
தற்கொலைகளை வெறும் செய்தியாக கடக்கும் மன நிலையிலிருந்து அகன்று, அவை குறித்தான விவாதங்கள் பரவலாக எழுப்பப்பட வேண்டும். குடும்ப அமைப்பிலும், சமூக அமைப்பிலும் உள்ள கட்டுப்பாடுகள் உடைக்கப்பட்டு தற்கொலைகளும், அவற்றுக்கான காரணங்களும் பேசப்பட வேண்டும். அதற்கான சூழலை சமூகமாக நாம் ஏற்படுத்த வேண்டும். அதற்கான காலக்கட்டமும் இதுவே..
செப்டம்பர் 10 - உலக தற்கொலை தடுப்பு தினம்
தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கையை பெற தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு தொடர்பு கொண்டு பேசலாம். சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்.