

தென்மாவட்ட பல்கலை. தொடர்பியல் துறையின் வகுப்பறை அது. ஆய்வு மாணவனாய் இருந்தபோது மலேசியாவில் இருந்து வந்திருந்த ஆசிரியர் ஒருவர் பாடம் தொடர்பியல் கோட்பாடுகளை விளக்கிக் கொண்டிருந்தார். தொடர்பியல் கோட்பாட்டில் மார்க்சிய பார்வைக்கும் ஜெர்மானிய பள்ளியின் பார்வைக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்கிய அந்த வெளிநாட்டு ஆசிரியர், “நான் நடத்தியது உங்களுக்கு புரிந்ததா?” என்று தனது உரையை நிறுத்தினார்.
இரண்டு தத்துவ பார்வைகளை எளிமையாக விளங்கிய பரவசத்தை நாங்கள் அனுபவங்களாக பகிர்ந்து கொண்டோம். அனைவரின் மறுமொழியையும் கேட்ட அந்த மலேசிய ஆசிரியர் தனது வகுப்பை இப்படி நிறைவு செய்தார். “நான் நடத்திய பாடம் உங்களுக்கு ஏதாவது வகையில் உதவியிருந்தால், அல்லாவின் உண்டியலில் நான் எனது குழந்தைகளுக்காக கொஞ்சம் புண்ணியம் சேர்த்திருக்கிறேன் என்று அர்த்தம். நாளை நீங்களும் ஆசிரியர்களாகி பாடம் நடத்தும்போது மாணவர்களை மேல ஏற்றி விட்டு கடவுளின் உண்டியலில் உங்கள் குழந்தைகளுக்கான புண்ணியத்தைச் சேமியுங்கள்” என்றார்.
அவர் நடத்திய பாடத்தைவிட, ஆசிரியர் தொழிலுக்கு அவர் அளித்த விளக்கம் மனதில் நீங்காமல் ஒட்டிக்கொண்டது. “ஒடுக்கப்பட்ட ஒருவரை கல்வியின் மூலம் மட்டுமே முன்னேற்றம் அடையச் செய்ய முடியும். ஆனால், அந்தக் கல்வி யாரிடமிருந்து வரவேண்டும் என்பது மிகவும் முக்கியமானது” என்றார் அண்ணல் அம்பேத்கர். அப்படிபட்ட ஆசிரியர்களாக இருந்தனர் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தொடர்பியல் துறை பேராசிரியர்கள்.
பொதுவாக, ஆசிரியர் தினம் என்றாலே பள்ளி ஆசிரியர்களோடு நின்று விடுகிறோம். ஆனால், பதின்மம் தாண்டிய மாணவர்களைக் கையாளும் பேராசிரியர்களை கணக்கில் எடுத்துக் கொள்வது இல்லை. தொண்ணூறுகளில் தமிழகத்தின் தென்கோடியில் தொடங்கப்பட்ட தொடர்பியல் துறை முதல் 15 ஆண்டுகளில் பத்திரிகைத் துறைக்கும், அடுத்து பல மாணவர்களை ஆசிரியர்களாகவும் வளர்த்தெடுக்க முடிந்ததென்றால், அது அந்தத் துறை ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு.
திறனறிந்து வளர்த்த ஆசிரியர்கள்: பழமையில் ஊறிப்போன நெல்லை போன்ற ஊர்களில் 90-களில் பத்திரிகை துறைக்கான ஒரு படிப்பு என்பதே பெரிய புரட்சியான ஒரு விஷயம்தான் . அதுவும் முதுகலைப் படிப்பு என்றால் சொல்லவேண்டியதே இல்லை. ஆர்வத்திலும், நம்பிக்கையிலும் அங்கு வந்து சேர்ந்த மாணவர்களை களத்திற்கு தயார்செய்த பணியினை எங்கள் துறை பேராசிரியர்கள் செய்தார்கள். பத்திரிகையாளனுக்கு இருக்கவேண்டிய உண்மையையும் சமத்துவத்தையும் துறையில் நடந்த கூட்டங்களின் வழியிலேயே அறியச் செய்தனர். துறையில் நடக்கும் அனைத்துக் கூட்டங்களும் அது சிறப்பு விருந்தினர்களை அழைத்து வந்து நடக்கும் செமினார்களும் கூட தரையில் விரிக்கப்பட்ட பத்தமடை பாயில் வைத்தே நடக்கும்.
தொடர்பியல் துறையில் திரைப்படங்கள் பார்ப்பதும் திரைப்பட விழாக்களுக்குச் செல்வதும் ஓர் அங்கம். அப்படிச் செல்லும்போது திரைப்படங்களை மட்டும் பார்த்து வர செய்யாமல் திரைப்பட விழாக்கள் நடக்கும் ஊரின் சிறப்புகளை அறிந்து வந்து, அது குறித்த கட்டுரைகளை சமர்பிக்கச் செய்வார்கள். அதற்கு மதிப்பெண்கள் வழங்கியதுடன், அந்த அறிக்கைகளின் அடிப்படையில் மாணவர்களின் தனித்திறைமைகளை அறிந்து அதனை தனிப்பட்ட முறையில் வளர்க்க உதவினர்.
நண்பர்களாக விளங்கிய ஆசிரியர்கள்: துறையின் ஆசிரியர்கள் மறக்க முடியாதவர்களாக ரவிந்தரன், நடராஜன், கோவிந்தராஜூ இருந்தனர். மரபுகளின் வேர்களில் இருந்து நவீனத்தை அறியச்செய்ததில் ஜித்தனாய் இருந்தார் ரவீந்திரன். உலகத் திரைப்படங்களை அறியச் செய்யும்போது அதற்கு நிகரான தமிழ் இலக்கியச் சான்றுகளையும் இந்தியத் திரையாக்கங்களையும் சேர்த்தே சொல்லிக் கொடுத்து நமது மரபுகளையும் நெஞ்சில் விதை தூவினார்.
அடுத்து, பேராசிரியரான நடராஜன் தனது அனுபவங்களின் வழியாக படங்களை எளிமையாக கடந்தியவர். மாணவர்களுக்கு ஒரு சிறந்த நண்பனாகவே இருந்தார். தங்கள் துறை மாணவர்கள் நடுத்தர வர்க்கத்தவர்கள் என்பதை அறிந்திருந்த அவர், திரைப்பட விழாக்களுக்குச் செல்லும் நகரங்களைப் பற்றியும் அங்கு மலிவு விலையில் தரமான உணவு கிடைக்கும் இடங்கள் குறித்த அனைத்து விபரங்களையும் சேகரித்துக் கொடுத்து பயணவழிகாட்டியாகவும், ஆபத்துக்குதவும் தோழனாகவும் இருந்தார். கள ஆய்விலும் நிர்வாகத்திலும் தனித்திறமை பெற்றிருந்த கோவிந்தராஜூ நவீன போக்குகளையும் அதற்குண்டான உபகரணங்களையும் மாணவர்களுக்கு அறிய வழிசெய்தார்.
இவர்கள் அனைவிடமும் இருந்த பொதுவான பண்பு, அந்தத் துறையையும், அதன் மாணவர்களையும் அவர்கள் குடும்பமாக பாவித்தனர். பல்வேறு ஊர்களில் இருந்து கீழ்மத்தியதர குடும்பத்திலிருந்து ஊடகத்துறைக்கு பயணிக்க வந்த பல மாணவர்களின் அறிவுப்பசியையும், அன்றாட பசியையும் பல நேரங்களில் இந்தப் பேராசிரியர்கள் அன்பு பூர்த்தி செய்திருக்கின்றன. அதற்கு அப்பட்டமான சாட்சிகள் தமிழ் ஊடகத்திலும், கல்லூரி பல்கலையில் பேராசிரியகர்களாய் இருக்கும் மாணவர்களின் எண்ணிக்கையே.