Last Updated : 27 Aug, 2022 02:09 PM

Published : 27 Aug 2022 02:09 PM
Last Updated : 27 Aug 2022 02:09 PM

“பணம் பசியைத்தான் போக்கும்... துன்ப உணர்ச்சியைப் போக்காது” - பெர்னாட் ஷா 10 மேற்கோள்கள்

ஜார்ஜ் பெர்னாட் ஷா... அயர்லாந்தைச் சேர்ந்த நாடக ஆசிரியரான இவர் 1856-ஆம் ஆண்டு ஜூலை 26-ல் பிறந்து 1950 நவம்பர் 2 வரை 94 ஆண்டுகள் இந்த பூமியில் வாழ்ந்தார். தந்தை அரசாங்க உத்தியோத்தில் இருந்தாலும் அவரின் குடிப்பழக்கம் காரணமாக சிறுவயதில் சராசரியான ஒரு வாழ்க்கையை வாழ முடியாதவராக இருந்தார் பெர்னாட் ஷா. சிறுவயதில் அவரை வெளியே அழைத்துச் சென்று ஊர் சுற்றிக் காண்பிக்க அவர் வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணிடம் சொல்லிருந்தனர் பெற்றோர். அதன்படி அந்தப் பணிப்பெண், அவரை பூங்கா, கால்வாய், செல்வந்தர் வாழும் பகுதிகளுக்கு அழைத்துச் செல்லாமல், தான் இருக்கும் ஏழைகளின் குடியிருப்புப் பகுதிக்கு அழைத்துச் சென்று பொழுதைக் கழித்தார்.

இது வாழ்நாள் முழுவதும் வறுமைக்கு எதிராக பெர்னாட் ஷா இருந்ததற்கும், வறுமையை ஒழிப்பதில் வாழ்நாள் முழுவதும் தொண்டாற்றுவதற்குமான முதல் அனுபவமாக இருந்தகாக பின்னாளில் பெர்னாட் ஷாவே நினைவுகூர்ந்துள்ளார். அதேபோல பெரிய சொற்பொழிவாளராகி மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போது, காரல் மார்க்ஸின் மூலதனத்தை படிக்காதவர்கள், பொருளாதாரம் பற்றி பேசக்கூடாது என கூட்டத்தில் ஒரு தெரிவித்ததைத் தொடர்ந்து, மூலதனத்தை தேடிப் படிக்கத் தொடங்கிய ஷாவின் வாழ்க்கைப் பயணமே அதன் பின்னர் மாற்றம் அடையத் தொடங்கியது.

அதன் பின்னர் ஒரு தீவிர சமூகவாதியாக ஃபேபியன் சொசைட்டிக்காக (Fabian Society) பெர்னாட் ஷா எழுதியும் சொற்பொழிவாற்றியும் வந்தார். ஆணுக்கு சமமான பெண்ணுரிமையைப் பெறுதல், உழைக்கும் வர்க்கத்தினர் சுரண்டப்படுவதை ஒழித்தல், உற்பத்தி நிலங்களின் தனியார் உரிமையை மீட்டல், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பரப்புதல் என சுரண்டலுக்கு எதிராக சொற்பொழிவுகளை நிகழ்த்தும் சொற்பொழிவாளரானார். ஆரம்ப நாட்களில் இசை, இலக்கிய விமர்சனமே அவரது பொருளாதார ரீதியாக வெற்றியைத் தேடித் தந்தன. அவற்றில் தனது திறனைக் கொண்டு மிக நேர்த்தியான பத்திரிகைப் படைப்புகள் பலவற்றை எழுதினார். ஆனாலும் அவரது பிரதான திறமை நாடகமே.

பார்க்கும் அனைத்தையும் நாடகமாகவே பார்க்கும் பெர்னாட் ஷா அவர் 60-க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார். இலக்கியம், இசை விமர்சனம், நாவல், சிறுகதை, நாடகம் என கலையின் அனைத்து வடிவங்களிலும் பங்காற்றியுள்ள பெர்னாட் ஷா புகைப்படக் கலையிலும் ஆர்வம் கொண்டு ஒரு அமெச்சூர் 'போட்டோகிராஃபரா'கவும் விளங்கினார்.

இலக்கியத்திற்காக நோபல் (1925) பரிசும், திரைப்பட பணிக்காக ஆஸ்கர் விருதும் பெற்றிருக்கிறார். இவ்விரண்டு விருதுகளையும் பெற்ற ஒரே கலைஞர் இவர் மட்டுமே. விடாது வறுமை வாட்டிய போதும் துவண்டு விடாமல், தொடர்ந்து போராடி வாழ்க்கையை வெற்றிகரமானதாக மாற்றிக்கொண்ட பெர்னாட் ஷாவின் 10 மேற்கோள்கள் இங்கே…

  • மாற்றம் இல்லாமல் முன்னேற்றம் சாத்தியமற்றது; எண்ணங்களை மாற்றிக்கொள்ள முடியாதவர்களால் வேறு எதையும் மாற்ற முடியாது.
  • மனிதர்களுள் இரு வகையினர் உண்டு. திறமையானவர்கள் ஒருவகை, மற்றவர்கள் திறமையைப் பயன்படுத்தாதவர்கள்.
  • நகைச்சுவை உணர்ச்சி இல்லாதவர்களுக்கு வாழ்க்கை ஒரு பெருஞ்சுமை ஆகிவிடும்.
  • உயிருள்ளவரை உழைத்து வாழ விரும்புகிறேன். உழைக்க உழைக்க எனக்கு உயிர் வாழும் விருப்பம் அதிகமாகிறது.
  • அனுபவம் ஒரு கடுமையான ஆசிரியர், அது வலிகளை தந்த பிறகுதான் பாடத்தை கற்பிக்கிறது.
  • இன்பமும் துன்பமும் பணத்தைச் சார்ந்தவை அல்ல. மனதைச் சார்ந்தவை.
  • பணம் பசியைத்தான் போக்கும். துன்ப உணர்ச்சியைப் போக்காது.
  • எதைச் செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும், எங்கே செய்ய வேண்டும் என அறிந்திருப்பவரே நல்ல தலைவர்.
  • பெண்ணை ஒரு பொருள்போல நடத்துவதால்தான் எல்லா இன்னல்களும் வருகின்றன.
  • செல்வத்தை சம்பாதிக்காமல் அனுபவிக்க உரிமை கிடையாது. அதுபோலவே இன்பத்தையும் உண்டாக்காமல் நுகரமுடியது.


தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x