

கடந்த 5 ஆண்டுகளாக 100-க்கும் மேற்பட்ட அடையாளம் காண முடியாத மற்றும் உரிமை கோராத பிரேதங்களை நல்லடக்கம் செய்து, காவல் துறைக்கு நன் மதிப்பை பெற்றுக் கொடுத்த கோவை பெண்காவலரை நேரில் அழைத்து டிஜிபி பாராட்டினார்.
கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் ஆமினா என்ற பெண் காவலர் பணி புரிந்து வருகிறார்.
இவர், கடந்த 5 ஆண்டுகளாக, அடையாளம் காண முடியாத மற்றும் யாரும் உரிமை கோராத பிரேதங்களை அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் அவர்களின் இறுதி சடங்குகளை செய்து வருகிறார். அதன்படி, இதுவரை 100-க்கும் மேற்பட்ட உடல்களை நல்லடக்கம் செய்துள்ளார்.
காவல் துறையில் பல பணிகளை பார்த்துக்கொண்டும், பல சிரமங்களுக்கு இடையிலும் இவரது சமூகத் தொண்டு மிகவும் பாராட்டத்தக்கதாக இருந்து வருகிறது.
இதையறிந்த தமிழக காவல்துறையின் தலைமை டிஜிபி சைலேந்திரபாபு, சம்பந்தப்பட்ட பெண் காவலர் ஆமினாவை நேற்று டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் அழைத்து பாராட்டினார். தொடர்ந்து பாராட்டுச் சான்றிதழையும் வழங்கினார்.
இதுகுறித்து டிஜிபி சைலேந்திரபாபு கூறும்போது, ‘‘பெண் காவலர் ஆமினாவின் செயல் பொதுமக்களிடையே காவல் துறையின் நன்மதிப்பை உயர்த்தியுள்ளது. எனவே, பெண் காவலரின் சீரிய பணியைப் பாராட்டி அவரை நேரில் அழைத்து பண வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அளித்துள்ளேன்’’ என்றார்.