21 ஸ்டால், 1.01 லட்சம் பானிபூரி... - ம.பி.யில் பெண் கல்வியை வலியுறுத்தி 1 வயது மகளின் பிறந்தநாளை கொண்டாடிய தந்தை

21 ஸ்டால், 1.01 லட்சம் பானிபூரி... - ம.பி.யில் பெண் கல்வியை வலியுறுத்தி 1 வயது மகளின் பிறந்தநாளை கொண்டாடிய தந்தை
Updated on
1 min read

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் பானிபூரி விற்பனையாளர் ஒருவர் பெண் கல்வியை வலியுறுத்தும் விதமாக, தனது மகளின் 1-வது பிறந்தநாளை, 1 லட்சம் பானிபூரிகளை இலவசமாக கொடுத்து கொண்டாடியுள்ளார்.

போபால் மாவட்டம் கோலார் பகுதியைச் சேர்ந்தவர் ஆஞ்சல் குப்தா. பானிபூரி வியாபாரம் செய்துவரும் இவர், தனது மகள் அனோக்கியின் பிறந்தநாளை புதன்கிழமை கொண்டாடினார். மகளின் பிறந்த நாளை வித்தியாசமாக கொண்ட நினைத்த ஆஞ்சல் குப்தா, தான் வசிக்கும் பகுதியில் உள்ள பாஞ்சரி மைதானத்தில், நீண்ட பந்தல் அமைத்து அதில், 21 பானிபூரி ஸ்டால் அமைத்து, அவைகளில் 1.01 லட்சம் பானிபூரிகளை இலவசமாக வழங்கியுள்ளார். பானிபூரிகள் வழங்கும் போது "பெண்களை பேணுங்கள், அவர்களுக்கு கல்வி கொடுங்கள்" என்ற செய்தியை வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து ஆஞ்சல் கூறும் போது, "பெண் கல்வியை வலியுறுத்துவதே இந்த நிகழ்வின் நோக்கம் என்பதால் நான் இதன் செலவைப் பற்றி கவலைப்படவில்லை" என்றார்.

அனோக்கியின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட உள்ளூர் எம்எல்ஏ ரமேஷ்வர் சர்மா, இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதன்மூலம், ஆஞ்சலின் இந்த வித்தியாசமான முயற்சி மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானின் கவனத்தை ஈர்த்து, அவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மகள் அனோகிகாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

எப்போதும் மகிழ்ச்சியும் பிரகாசமான எதிர்காலமும் நிறைந்திருக்க எனது ஆசிர்வாதங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in