Last Updated : 15 Aug, 2022 01:58 PM

 

Published : 15 Aug 2022 01:58 PM
Last Updated : 15 Aug 2022 01:58 PM

இந்தியா @ 75: ‘சமையல் சுதந்திரம்’ - மகத்தான வளர்ச்சியின் நினைவுப் பார்வை

பத்தாண்டுகளுக்கு முன்புவரை, தமிழர்களின் மரபுவழிச் சமையல் சாதனங்களைக் கொண்டிருந்த சமையலறைகள், அறிவியல், தொழில் நுட்ப வளர்ச்சியினாலும், உலகமயமாதலின் செல்வாக்காலும் வேறு விதமாக இன்று உருமாறியிருக்கின்றன. பழங்காலத்தில் சமையலுக்கான பொருட்களைச் சேமித்து வைக்கும் கொள்கலன்கள், தானியங்களையும், பிற பொருட்களையும் சமையலுக்காகத் தயார்படுத்த உதவும் சாதனங்கள், சமைத்தலின்போது பயன்படும் கருவிகள், பரிமாறுவதற்கான உபகரணங்கள் உட்பட ஏராளமான பொருட்கள் இன்று நவீன வளர்ச்சியால் உருமாறியிருக்கின்றன. அதனால் பலவித சமையல் வேலைகள் எளிதாகி, நேரமும் மிச்சமாகியிருக்கின்றது.

உயிர்வாழ உணவு மிக முக்கியமான ஒன்று. ஆரோக்கிய உணவு என்றாலே நாம் அனைவரின் நினைவுக்கு வருவது, வீட்டில் அம்மா சமைத்துக் கொடுக்கும் உணவுகள் தான். அதற்கு அவர்களுக்கு அனைத்து வசதிகளும் நிறைந்த சமையல்கூடம் தேவை. அதில் சமைப்பதற்கு உண்டான காய்கறிகள் போன்ற பொருட்கள் இருந்தாலும், அதனை சமைப்பதற்கான எரிபொருட்கள் எது, அதனை எப்படி சமைக்கிறார்கள் என்பது மிக முக்கியம்.

அந்தவகையில் 30, 40 வருடங்களுக்கு முந்தையகாலத்தில் சமையல் செய்து சாப்பிடுவது என்பதே பெரும் சவால்தான். அதற்கான ஒரு மெனக்கெடல் பெண்களுக்கு எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். வீட்டில் சமையல் செய்வதற்கு மண் அடுப்புகள் தான் இருக்கும். அந்த அடுப்புகளில் சமைப்பதற்கு விறகு, சீமைக் கருவேல சுள்ளிகள், எறு என்று சொல்லக்கூடிய சாணி தட்டி போன்றவற்றைத் தான் அடுப்பு எரிக்க பயன்படுத்தினார்கள். அதனை சேகரிக்கவே ஒரு வேலைக்கான பிரயத்தனம் செய்ய வேண்டும்.

அதுவும் மழைக்காலங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். நனைந்திருக்கும் விறகுகளை வைத்து சமையல் செய்து முடிப்பதற்குள் மொத்த பொறுமையும் சோலி முடிந்துவிடும். எரியாமல் அடுப்பு புகைந்துகொண்டே இருக்கும். புகையும் அடுப்பில், கண்கள் எரிய, மூக்கில் புகை நுழைய செருமிக்கொண்டே, இரும்பு ஊதுகுழல் வைத்து ஊ... ஊ... என்று ஊதி தீயை மூட்டுவதற்குள் கண்கள் சிவந்து வாய் வலிக்க காளியாக மாறியிருப்பார்கள். அவ்வளவும் நடந்தபின் தான் அன்றைய தினம் சோற்றைத் தட்டில் போட்டு சாப்பிடமுடியும். அந்தநேரத்தில் சமையல் என்பது பெரும் சாகசம் தான். ஆனாலும் நம் பெண்கள் அதற்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல. சாகசங்களை தினம் தினம் நிகழ்த்திக் கொண்டே இருப்பார்கள்.

இது எல்லாம் ஒரு பக்கம் என்றால் அந்த அடுப்பங்கரையைப் பராமரிப்பது அவ்வளவு அழகு, சுவாரஸ்யம்.

சாணப்பூச்சும், அழகிய கோல அடுப்பும்

பெரும்பாலும் வீட்டின் ஓரத்தில் தான் அடுப்பங்கரை அமைந்து இருக்கும். சமையல் செய்து கறுப்படிந்த இரண்டு துளை அடுப்புகளை ஒவ்வொரு வாரமும் அழகாக துடைத்து சுத்தம் செய்வார்கள். கறுப்புக் கறையை துடைத்து சாணம் கரைத்துப் பூசி, அழகாக கோலமாவினால் கம்பிக் கோலம் போட்டு வைத்திருப்பார்கள் பாருங்கள். அதில் அவ்வளவு தெய்வீகம் இருக்கும். மண்வீடுகள் என்பதால்... வீடு முழுவதுமே பசுஞ்சாணத்தைக் நீரில் கரைத்து, தரையை பூசி மெழுயிருப்பார்கள். அந்த சின்னஞ்சிறிய வீடு அவ்வளவு அழகாக பிரகாசமடைந்திருக்கும்.

மரச்சுள்ளிகள் எனும் பசி போக்கிகள்

எரிபொருளுக்காக பெரும்பாலும் மரக்கட்டை, மரத்தூள், மாட்டுச் சாணத்தால் தயாரிக்கப்பட்ட எறுவெட்டி மற்றும் சீமைக் கருவேல மரத்தின்அனைத்துப் பகுதிகளையும் எரிக்கப் பயன்படுத்துவார்கள். அதிகபட்சம் விலையில்லாமல் செலவில்லாமல் சுலபமாக கிடைக்கும் சீமை கருவேல சுள்ளிகளுக்குத்தான் எப்போதும் ஏக கிராக்கி.

முட்கள் நிரம்பி காணப்படும் சீமைக்கருவேல மரத்தின் சுள்ளிகள், கிளைகள் அனைத்தையும் நன்றாகக் காயப்போட்டு, அதனைத் அரிவாளால் ஒரு முழம் அளவு தரித்து அழகாக கட்டு, சேர்த்து நிறைய கட்டுக்களாக எல்லா வீடுகளிலும் சமையலுக்காக அடுக்கி வைத்திருப்பார்கள். அதுபோக இளநியின் தேங்காய் கீற்றுகள் மற்றும் சிரட்டைகளையும் எரிபொருளாகப் பயன்படுத்துவார்கள். கிட்டத்தட்ட எரிபொருள் என்பதற்கு நிறைய மெனக்கெடல் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும்.

அன்றைய காலகட்டத்தில், அன்றாடம் வேலைக்கு சென்று களைத்து ஓய்ந்து வீடு திரும்பும் பெண்கள் கூட, வரும் வழியிலேயே சமையலுக்கான விறகுகளையும், சுள்ளிகளையும் பொறுக்கி எடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்கள். எவ்வளவுதான் பசியில் வீட்டிற்கு வந்தாலும், நினைத்தவுடன் விறகடுப்பில் அத்தனை சுலபமாக உணவு சமைத்துச் சாப்பிடமுடியாது. அடுப்பை பற்றவைத்து, அது அணைந்து எரிந்து அணைந்து ஊதுகுழலால் ஊதி முடித்து சாப்பிடுவதற்குள் பாதி பசி மீதி குடலை தின்றிருக்கும்.

அழும் குழந்தைக்காக அடுப்பினில் அணைந்த தீயை மூட்ட அவசரம் அவசரமாக ஊதுகுழல் கொண்டு அடுப்பிற்குள் ஊதி தீமூட்டும் குழலின் இசை... அத்தனை ரீங்காரமாகவும் பெற்றோரின் முகம் ஏகபரிதவிப்புடனும் இருக்கும் காட்சி தாய்மையை இந்த உலகுக்கு உணர்த்தும் அற்புதம்.

சாணி வறட்டி... எறியும் கலை

விறகுக்கு அடுத்ததாக எரிபொருளுக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டது என்றால் அது, மாட்டுச் சாணம் தான். சாணத்தை சேகரித்து உருண்டையாக உருட்டி (முதல் மரியாதை படத்தில் வடிவுக்கரசி சாணி எரியும் காட்சி) வீட்டுச் சுவர்களில் 10 அடி தொலைவில் இருந்து தூக்கி எரிந்து கொண்டிருப்பார்கள். அவ்வளவும் அதில் போய் ஒட்டி வட்ட வடிவில் அப்பளம் போல் விரியும். அதற்கும் அங்கு விளையாடிக் கொண்டிருக்கும் வாண்டுகள், `அப்பத்தா` நான் எறியறேன் என்று போட்டிப் போட்டு எறிந்துகொண்டிருப்பார்கள்.

இதுபோக அந்த நேரத்தில் `சாண வறட்டி` என்பது ஒரு தொழிலாகவே செய்து வந்தார்கள். சாண வறட்டியை மொத்தமாக விலைக்கு வாங்கி வீடுகளில் சமையலுக்காகச் சேமித்து வைத்திருப்பார்கள்.

கெரசின் என்னும் சீமை எண்ணெய்

அடுத்தக்கட்ட வளர்ச்சி என்று பார்த்தால், மண்ணெண்ணெய் பயன்படுத்தி எரிக்கும் சிறு அடுப்புகள். பெருவாரியான வீடுகளில் அதன்பிறகு சமையல் அதில்தான் நடந்தது. சில வசதி வாய்ப்புள்ள வீடுகளில் மட்டும் மீத்தேன் சேகரிப்பில் வீட்டுத் தோட்டங்களில் ஒரு தொட்டி செய்து எரிவாயுக்களை சேகரித்து பைப் மூலம் பயன்படுத்தி சமையல் செய்து வந்தார்கள்.

கேஸ் என்னும் ஆபத்பாந்தவன்

30 வருடங்களுக்கு முன்புதான் கேஸ் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தி பரவலாக சமையல் சமைக்க ஆரம்பித்தார்கள். அதில் கிடைத்த அந்த வசதிகளே, அனைவரும் சமையல் கூடங்களுக்குமான சுதந்திர காற்றை சுவாசிக்க ஏதுவாக இருந்தது.

அதனால்தான் இன்று அனைவராலும் சமையலைறையில் புகுந்த சில மணி நேரங்களில் சாதத்தை வைத்து சுடச்சுட குழம்பு செய்து உணவை தயாரித்து விட முடிகிறது.

பொதுவாக இட்லி, தோசை போன்றவை அந்தக்காலங்களில் எல்லோர் வீடுகளிலும் எல்லா நேரங்களிலும் செய்வதில்லை. தீபாவளி போன்ற விஷேச நாட்களில் தான் செய்வார்கள். ஏனென்றால் அதில் வேலைகள் அதிகம். மற்றபடி அநேகநேரங்களில் மறுநாட்களில் அரிசி சாதம் மீஞ்ச வைத்து தண்ணீர் ஊற்றி மூடிவைத்து விடுவார்கள். காலையில் அந்த நீராகாரத்துடன் இருக்கும் கஞ்சியை சின்ன வெங்காயத்துடன் பச்சை மிளகாயை கடித்துக் குடித்துவிட்டு வேலைக்குச் சென்றுவிடுவார்கள்.

பொதுவாக இட்லி, தோசை போன்றவை அந்தக்காலங்களில் எல்லோர் வீடுகளிலும் எல்லா நேரங்களிலும் செய்வதில்லை. தீபாவளி போன்ற விஷேச நாட்களில்தான் செய்வார்கள். ஏனென்றால் அதில் வேலைகள் அதிகம்.

உமியுடன் இருக்கும் நெல்லை அரிசியாக உரலில் போட்டு உலக்கையில் குத்திதான் அரிசி பிரித்து, அதற்கடுத்து முழு உளுந்தை கல் திருவையில் போட்டு பாதியாக உடைத்து, ஆட்டுக்கல்லில் நனையவைத்த உளுந்துடன் அரிசியை சேர்த்து மாவட்டினால்தான் மறுநாள் இட்லி நிச்சயம். அதன்பிறகு உரல்களையும் கழுவி எடுத்து வைக்க வேண்டும். அத்தனையும் சுத்தமான உடல் உழைப்பு.

இன்றைய காலங்களில், காலையில் 1 மணி நேரத்தில் 3 பர்னர்கள் கொண்ட கேஸ் அடுப்பில் சமையல் முழுவதையும் முடித்து விடுபவர்கள், அன்றைய காலம் போல விறகடுப்பு புகையில் நிற்பது எல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாதது.

இன்று 3 வேளையும் சுடச்சுட நம்மால் சாப்பிட முடியும். நினைத்த நேரத்தில் கிரைண்டரில் மாவரைத்து, மிக்ஸியில் சட்னி செய்து, இட்லியோ தோசையோ சாப்பிட முடியும். ஒரே விசிலில் குக்கரில் சாதத்தை குழைத்து சாப்பிடவும், மைக்ரோவேவ் ஓவனில் பிரட்டில் மசாலாவைச் சேர்த்து பர்கராக்கி சூடாக சாப்பிடவும் முடியும்.

இதற்கெல்லாம், `சுதந்திரம்` என்ற ஒற்றை வார்த்தைதான் இன்று ஒன்றின் வளர்ச்சியில் ஒன்று என்ற தொடர்பில் மின்சாரம், தண்ணீர் மோட்டர், மிக்ஸி, கிரைண்டர், குக்கர், மைக்ரோவேவ் ஓவன் என நேர்க்கோட்டில் பயணித்து பல வசதிகளை நமக்கு இன்று பெற்றுத் தந்திருக்கிறது.

குறிப்பாக, இந்தியாவின் குக்கிராமங்களுக்கும் கேஸ் அடுப்புகளைக் கொண்டு சேர்த்ததில் அரசுகளின் பங்களிப்பு மகத்தானது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x