Published : 09 Aug 2022 08:17 PM
Last Updated : 09 Aug 2022 08:17 PM

பெற்றோர்களிடம் அதிகரித்துவரும் ‘புகழ்தேடல்’ மனநிலை - ஓர் உளவியல் பார்வை

சென்னை செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் சிறு வயதிலேயே பிரபலமடைந்த இரண்டு பேர் மீது பலருடைய கவனமும் குவிந்திருந்தது. ஒருவர் பியானோ கலைஞர் லிடியன் நாதஸ்வரம், மற்றொருவர் செஸ் வீரர் பிரக்ஞானந்தா.

அதிகரித்துவரும் மோகம்: லட்சத்தில் ஒரு குழந்தை குறிப்பிட்ட துறையில் பரிமளிக்கவோ சாதனை புரியவோ முடியும் என்பது உண்மைதான். அதற்கு அந்தக் குழந்தையின் வாழ்க்கைச் சூழல், எதிர்கொண்ட நெருக்கடிகள், சாதகமான அம்சங்கள் என எத்தனையோ அம்சங்கள் பங்களித்திருக்கும். இதைப் பெற்றோர் உணர்ந்திருக்கிறார்களா என்பது பெரிய கேள்வி.

சமமற்ற போட்டி: குழந்தைகளின் படைப்புகள், திறமைகளை மையமிட்டு செயற்கைப் பூச்சு கொண்ட விழாக்களும், போலிப் பாராட்டுகளும் இன்றைக்கு அதிகரித்து வருகின்றன. குழந்தைகளின் படைப்புகளை ‘ரொமான்டிசைஸ்’ செய்யும் தன்மையும் அதிகரித்திருக்கிறது.

ஏதாவது ஒரு துறையில் தங்கள் குழந்தையை சாதனையாளராக, மேதையாக ஆக்கிவிட வேண்டும் என்கிற பெற்றோரின் இந்தத் தீவிர ஆர்வம் காரணமாகச் சமமற்ற ஒரு போட்டி மற்ற குழந்தைகள் மத்தியில் உருவாக்கப்படுகிறது. இயல்பான வளர்ச்சியைக் கொண்டுள்ள குழந்தைகள், பெரியவர்கள் வரையறுத்து வைத்துள்ள சாதனைகளைப் புரியாத குழந்தைகள் தாழ்வாகப் பார்க்கப்படுகிறார்கள்.

அதிகரிக்கும் மனச்சிக்கல்கள்: தங்கள் வாழ்க்கையின் அன்றாடச் சம்பவங்களைப் படமும் ரீல்ஸும் எடுத்துப்போட்டு பெயர் வாங்குவது அன்றாட நடைமுறையாகிவிட்டது. அதே நச்சுச் சுழலுக்குள் குழந்தைகளையும் இழுத்துவர பெற்றோர் நினைப்பதன் நீட்சிதான் குழந்தை மேதைகள் மீதான ஆர்வமும். தங்கள் குழந்தை இந்தச் சாதனையைப் புரிந்திருக்கிறது, அந்தச் சாதனையைப் புரிந்திருக்கிறது என்று பிரபலப்படுத்திக் குழந்தைகள் வழியாகப் பெற்றோர் சிலர் புகழ்தேடத் தலைப்படுகின்றனர்.

இதனால் குழந்தைகள் இயல்பாக வளர முடியாமல் போகிறது. அந்தந்த வயதில் அதற்குரிய மனநிலையோடு மகிழ்ச்சியாக வாழவும், வாழ்க்கையை அனுபவிக்கவும், தவறுகளைக் திருத்திக்கொண்டு அடுத்த கட்டத்துக்கு நகரவும் முடியாமல் போகிறது. இதன் காரணமாகக் குழந்தை மேதைகள் வளர்ந்த பிறகு பல்வேறு மனச்சிக்கல்கள், மனநலப் பிரச்சினைகளுக்கு ஆளாவதும் பதிவாகியிருக்கிறது. உலகைப் புரிந்துகொள்ளும் பக்குவத்தைப் பெறுவதற்கு முன்பே அவர்களுக்குக் கிடைத்துவிட்ட பிரபலம், பிற்காலத்தில் குறையும்போது / சிக்கலுக்கு உள்ளாகும்போது அவர்களால் அந்த நிலையை எதிர்கொள்ள முடிவதில்லை.

எல்லாரும் சாதனையாளராக முடியுமா? - தற்போது குறிப்பிட்ட ஒரு துறையில் அடித்து விளாசும் ஒரு குழந்தை, இடையிலேயே அந்தத் துறை சார்ந்த தன் ஆர்வத்தை இழப்பதற்கும் வாய்ப்பு உண்டு. அல்லது அந்தக் குழந்தையின் படைப்பாற்றலோ திறமையோ குறிப்பிட்ட துறை சார்ந்து குறையலாம்; மாறுபடலாம். எதிர்காலத்தில் வேறொரு துறையில் அதே குழந்தை பரிமளிக்கலாம்.

எந்தத் துறையாக இருந்தாலும் அதில் ஒரு குழந்தை இயல்பான ஆர்வத்தை வெளிப்படுத்துகிறதா, அந்த ஆர்வம் வளர்கிறதா, அது சார்ந்த கற்றலை முறைப்படுத்தும்போது குழந்தை இயல்பாக அதை உள்வாங்கித் திறன்களை மேம்படுத்திக்கொள்கிறதா, இல்லை குழந்தையின் ஆர்வம் குறைகிறதா என்பதையெல்லாம் பெற்றோர், ஆசிரியர்கள் உன்னிப்பாகக் கவனித்தறிய வேண்டும். இதற்கெல்லாம் மேலாக ஒரு குழந்தைக்கு குறிப்பிட்ட துறை பிடிக்கவில்லை என்றால் விலகிக்கொள்வதை அனுமதிக்க பெற்றோர் தயாராக இருக்க வேண்டும்.

உலகைத் திரும்பிப்பார்க்க வைக்கும் சாதனையைப் புரியாவிட்டால் வாழ்க்கை இல்லை என்பது போன்ற பிரமை உருவாக்கப்பட்டு, பள்ளிக் குழந்தைகள், இளைஞர்கள் மனதில் இயல்பு களவாடப்பட்டு நெருக்கடி திணிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இதுபோன்ற தேவையற்ற நெருக்கடியே மற்றவர்களைப் போலத் தன்னால் உலகின் கவனத்தைப் பெரிதாக ஈர்க்க முடியவில்லை என்கிற தாழ்வுமனப்பான்மை குழந்தைகள் மத்தியில் உருவாக முக்கியக் காரணமாகிறது.

> இது, ஆதி வள்ளியப்பன் எழுதிய, இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x