Published : 04 Aug 2022 05:06 PM
Last Updated : 04 Aug 2022 05:06 PM

பாலியல் துன்புறுத்தல் | ‘விழிப்புணர்வு இருப்பினும் புகார் அளிக்க தயக்கம்’ - சென்னை அரசுப் பள்ளி மாணவிகளும் ஆய்வு முடிவும்

பாலியல் மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தல் தொடர்பாக வளர் இளம் பருவத்தினருக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும், ஒரு சிலர்தான் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தைரியமாக வெளியே சொல்கின்றனர். பலரும் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை வெளியே செல்வது இல்லை.

இந்நிலையில், சென்னையில் உள்ள அரசு மேல்நிலையில் பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் உடல் மற்றும் பாலியல் ரீதியான துன்புறுத்தல் தொடர்பாக ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வை சென்னை மருத்துவக் கல்லூரி சமூக மருத்துவ துறை மருத்துவர்களான ஜெயஸ்ரீ, சித்ரா, சுதர்சனி ஆகியோர் மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வானது தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறையின் தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆய்வு இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி சென்னையில் ஓர் அரசு பள்ளியில் மொத்தம் 300 மாணவிகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 13 வயது முதல் 16 வயது வரை உள்ள மாணவிகளிடம் இந்த ஆய்வுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதில் 200 மாணவிகள் 13 மற்றும் 14 வயதைச் சேர்ந்தவர்கள். 100 மாணவிகள் 15 மற்றும் 16 வயதைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 94 சதவீத பேர் பெற்றோர்களுடன் வசித்து வருகின்றனர். 78 சதவீதம் குடும்பங்களில் அம்மா, அம்மா, குழந்தை மட்டுமே வசித்து வருகின்றனர்.

மாணவிகளில் 86 சதவீதம் பேர் உடல் ரீதியான துன்புறுத்தல் தொடர்பாகவும், 93 சதவீத பேர் பாலியல் ரீதியான துன்புறுத்தல் தொடர்பாகவும் விழிப்புணர்வுடன் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக, பெண்களுக்கான உதவி எண், குழந்தைகளுக்கான உதவி எண், துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டால் எங்கு புகார் அளிக்க வேண்டும் உள்ளிட்டவை தொடர்பான தகவல்களை பெரும்பாலான மாணவிகள் தெரிந்து வைத்துள்ளனர்.

ஆய்வில் கலந்து கொண்ட 300 மாணவிகள் 39 பேர் உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதில் 13 சதவீத பேர் இரண்டு வகையான துன்புறுத்தலுக்கு உள்ளாகி உள்ளனர். இதன்படி 9.66 சதவீத பேர் உடல் ரீதியான துன்புறுத்தலுக்கும், 5.66% பேர் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கும் உள்ளாகி உள்ளனர். 2.33 சதவீத மாணவிகள் இரண்டு வகையான துன்புறுத்தலுக்கும் உள்ளாகி உள்ளனர்.

பெரும்பாலான மாணவிகள் அறைவது, உதைப்பது, தள்ளிவிடுவது உள்ளிட்ட உடல் ரீதியான துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 சதவீதம் மாணவிகள் அறையில் பூட்டி வைப்பது போன்ற துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான மாணவிகள் தங்களின் சகோதரர்களால் உடல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர். அப்பா, உடன் பிறந்தவர்கள், உறவினர்கள் ஆகியோரால்தான் அதிக அளவு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக இந்த மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து இந்த ஆய்வை மேற்கொண்ட சென்னை மருத்துவக் கல்லூரி சமூக மருத்துவ துறை பேராசிரியர் சித்ராவிடம் கேட்டபோது, "குழந்தைகளிடம் பாலியல் மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தல் தொடர்பாக விழிப்புணர்வு அதிக அளவு உள்ளது. ஆனால், துன்புறுத்தலுக்கு உள்ளானவர்களில் குறைவான மாணவிகள் மட்டுமே அதை தைரியமாக வெளியே தெரிவித்துள்ளனர். குறிப்பாக பெண் மற்றும் குழந்தைகளுக்கான உதவி மையங்களுக்கு புகார் அளிக்கப்பது மிகவும் குறைவாக உள்ளது.

அதிகம் பேர் தங்களின் பெற்றோர்கள் மற்றும் நண்பர்களிடம்தான் இதைக் கூறியுள்ளனர். இதை வெளியே கூறினால் என்ன ஆகப்போகிறது, ஏதாவது பிரச்சினை வரும் என்ற எண்ணங்களால் பலர் புகார் அளிப்பது இல்லை. இதை சரிசெய்ய பெண் குழந்தைகளுக்கு தொடர்ந்து கவுன்சிலிங் வழங்க வேண்டும். மாவட்ட குழுந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் உரிய கவுன்சிலிங் அளிக்க வேண்டும்.

அதுவும் சீரான இடைவெளியில் இது போன்ற கவுன்சிலிங் அளிக்க வேண்டும். சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தொடர்ந்து கவுன்சிலிங் வழங்க வேண்டும். இதில் பெற்றோர்களையும் கலந்து கொள்ள செய்ய வேண்டும். இப்படி செய்தால் மட்டும் அவர் தைரியமாக புகார் கூற வருவார்கள்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x