Published : 02 Aug 2022 03:47 PM
Last Updated : 02 Aug 2022 03:47 PM

குரங்கு அம்மை: அச்சத்தை விட விழிப்புணர்வே மிகவும் அவசியம். ஏன்?

கேரளாவில் குரங்கு அம்மை தொற்றுக்கு ஒருவர் பலியான நிலையில், அத்தொற்று குறித்த அச்சம் பலருக்கு ஏற்பட்டிருக்கிறது. உண்மையில், குரங்கு அம்மையினால் உயிரிழப்புகள் குறைந்த அளவிலே நிகழ்ந்திருப்பதாக மருத்துவ தரவுகள் தெரிவிக்கின்றன.

கேரளாவில் குரங்கு அம்மையால் இறந்த இளைஞருக்கு அமீரகத்தில் இருக்கும்போதே தொற்று ஏற்பட்டுள்ளது. எனினும், அவர் நோய் பாதிப்பு அறியாத பட்சத்தில் இந்தியா வந்திருக்கிறார். இந்த நிலையில், நோய் முற்றிய நிலையிலேயே அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்து சிகிச்சை பலனின்றி இறந்திருப்பதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. எனினும், அவர் குரங்கு அம்மை நோயினால்தான் இறந்தாரா என்பது குறித்த ஆய்வும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், குரங்கு அம்மை உலகம் முழுவதும் எவ்விதமான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பதைப் பார்ப்போம். உலகில் 78 நாடுகளில் குரங்கு அம்மை இதுவரை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 20,000-க்கும் அதிகமானவர்கள் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதில் குரங்கு அம்மை தொற்று அதிகளவில் ஏற்பட்டுள்ள ஆப்பிரிக்காவில் 70 பேர் அத்தொற்றுக்கு பலியாகியுள்ளனர். ஆப்பிரிக்காவைத் தவிர்த்து பிற நாடுகளில் குரங்கு அம்மைக்கு நான்கு பேர் இதுவரை பலியாகியுள்ளனர் (பிரேசில் -1, இந்தியா -1, ஸ்பெயின் -2).

குரங்கு அம்மை பாதிப்பு குறித்து இந்தியாவின் தொற்று நோய் நிபுணரான கங்காகேத்கர் அளித்த பேட்டி ஒன்றில், “குரங்கு அம்மையால் இறக்கும் வாய்ப்பு 1%-க்கும் குறைவாகவே உள்ளது. ஆப்பிரிக்காவுக்கு வெளியே பெருமளவில் இறப்புகள் பதிவாகவில்லை. எங்களுக்கு கிடைத்த புள்ளி விவரம்படி, குரங்கு அம்மையினால் ஏற்படும் இறப்பு மிக மிகக் குறைவு” என்றார். குரங்கு அம்மை குறித்து அச்சப்படுவதைக் காட்டிலும் விழிப்புணர்வுடன் இருப்பதே அவசியம் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

குரங்கு அம்மை குறித்து சமீபத்தில் ‘இந்து தமிழ் திசை’யில் பொதுநல மருத்துவர் கு.கணேசன் எழுதிய கட்டுரையில் இருந்து...

குரங்கு அம்மை (Monkeypox) புதிய நோயல்ல. உலகில் இப்படி ஒரு நோய் இருப்பது முதன்முதலில் 1958-ல் டானிஸ் ஆய்வகத்தில் இருந்த குரங்குகளிடத்தில் அறியப்பட்டது. 1970-ல் ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ நாட்டில் முதல் நோயாளி கண்டறியப்பட்டார். 2003-ல் அமெரிக்காவில் இது பெரிதாகப் பரவியதை வரலாறு பதிவுசெய்துள்ளது. ஆப்பிரிக்காவைத் தவிர்த்து மற்ற நாடுகளில் இது பரவத் தொடங்கியது அப்போதுதான். என்றாலும்கூட 81 பேருக்கு மட்டுமே இந்த நோய் அப்போது அங்கே பரவியது; இறப்பு எதுவும் இல்லை. இதைத் தொடர்ந்து, 2017-ல் நைஜீரியாவில் 172 பேருக்குப் பரவியதுதான் உலகளாவிய பரவலில் இது உச்சம் தொட்டது. இப்போதோ ஒரே நேரத்தில் இது பரவியுள்ள நாடுகளும் அதிகம்; பாதிப்பாளர்களின் எண்ணிக்கையும் அதிகம். இதுதான் அநேகரையும் அச்சுறுத்துகிறது.

அரிய வகை அம்மை: ‘குரங்கு அம்மை’ என்பது மிக அரிய வகை வைரஸ் நோய். இது பெரியம்மையை (Smallpox) ஒத்துப்போகும் நோய். இதைத் தோற்றுவிக்கும் வைரஸுக்கு ‘குரங்கு அம்மை வைரஸ்’ (Monkeypox virus) என்று பெயர். இதில் மத்திய ஆப்பிரிக்கா இனம், மேற்கு ஆப்பிரிக்கா இனம் என இரண்டு விதம் உண்டு. இந்த வைரஸ், விலங்கினங்களில் காணப்படுவதுதான் வழக்கம். மாறாக, இப்போது இது மனிதர்களுக்கும் பரவுகிறது.

அறிகுறிகள் என்னென்ன? - குரங்கு அம்மையால் ஒருவர் பாதிக்கப்பட்டால், அவரது உடலுக்குள் தொற்று புகுந்த 5-லிருந்து 21 நாட்களுக்குள் அறிகுறிகள் தெரியத் தொடங்கும். குளிர்க் காய்ச்சல், தலைவலி, தசைவலி, உடல்வலி, முதுகுவலி போன்றவை தொல்லை தரும். உடற்சோர்வு கடுமையாகும். இந்த அறிகுறிகள் தொடங்கிய 5 நாட்களில் உடல் முழுவதிலும் சிவப்புப் புள்ளிகள் தோன்றும். அவற்றில் தாங்க முடியாத அளவுக்கு அரிப்பு உண்டாகும். பிறகு அவை கொப்புளங்களாக மாறும். அவற்றில் நீர்கோக்கும். அடுத்து நெறிகட்டிகள் தோன்றும். பொதுவாக, இந்தத் தொற்று 2-லிருந்து 4 வாரங்கள் வரை நீடிக்கும். அதன் பிறகு கொப்புளங்கள் காய்ந்து பொருக்குகள் உருவாகி உதிர்ந்துவிடும். தானாகவே நோய் குணமாகிவிடும். மிக அரிதாகவே ஆபத்து நெருங்கும்.

பரவுவது எப்படி? - குரங்கு அம்மைத் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு விலங்கிடமிருந்து மற்றொரு விலங்குக்குப் பரவுவதுதான் வழக்கம். முக்கியமாக, அணில்கள், எலிகள், முள்ளம்பன்றி போன்ற, கொறித்து உண்ணும் பழக்கமுள்ள விலங்கினங்களிலிருந்து மற்ற விலங்குகளுக்கு இந்த அம்மை நோய் பரவுகிறது. தொற்றுள்ள விலங்குகளோடு நெருங்கிய தொடர்புகொள்ளும் மனிதர்களுக்கும் இது பரவுகிறது. குறிப்பாக, விலங்குக் கடிகள் மூலம் மனிதருக்குப் பரவுகிறது. நோயாளி இருமும்போதும் தும்மும்போதும் காறித் துப்பும்போதும் எச்சில் மற்றும் சளி மூலம் மற்றவர்களுக்கு இந்தத் தொற்று பரவுகிறது. நோயாளி பயன்படுத்திய ஆடை, துண்டு, போர்வை போன்றவற்றின் வழியாகவும் இது பரவக்கூடும். அவரைத் தொடுவதன் மூலம் தோல் வழியாகவும் வியர்வை, கொப்புளநீர், கண்ணீர் போன்ற அவரது உடல் திரவங்கள் மூலமும் காய்ந்த பொருக்குகள் மூலமும் இது அடுத்தவர்களுக்குப் பரவலாம். பாலுறவு மூலமும் இது பரவுவதாகச் சமீபத்தில் பெல்ஜியம், ஸ்பெயின் நாடுகளில் அறியப்பட்டுள்ளது.

பயனாளியின் சளி, ரத்தம், கொப்புளநீர் போன்றவற்றின் மாதிரிகளை எடுத்து ‘ஆர்.டி.பி.சி.ஆர்’ பரிசோதனை செய்தால் இந்த நோயை உறுதிசெய்ய முடியும். அடுத்து, குரங்கு அம்மைத் தொற்று கரோனா வைரஸ் போன்று மரபணுப் பிறழ்வு (Mutation) காரணமாகப் பரவுகிறது என்றொரு தகவல் சென்ற வாரம் முழுவதும் சமூக ஊடகங்களில் வைரல் ஆனது. இது வதந்தி என்றும், இப்போது பரவிவரும் குரங்கு அம்மை வைரஸ் மரபணு பகுப்பாய்வுப் பரிசோதனையில் (Gene sequencing) அப்படியான மரபணு மாற்றங்கள் எதுவும் காணப்படவில்லை என்றும் உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இது அனைவருக்கும் ஆறுதல் தருகிறது.

சிகிச்சை, தடுப்பூசி உண்டா? - குரங்கு அம்மைக்கெனத் தனிப்பட்ட சிகிச்சை எதுவும் இல்லை என்பதே அநேக உலக நாடுகளின் நிலைப்பாடு. இந்த நோயாளிகளுக்கு அறிகுறி்களைக் குறைக்கும் மாத்திரைகள் மற்றும் ஊசிகள் வழங்கப்படுவதும், அம்மைக் கொப்புளங்களில் பாக்டீரியா தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்வதும், ஊட்ட உணவுகள் மற்றும் திரவ உணவுகள் தாராளமாக வழங்கப்படுவதும் இப்போதுள்ள முக்கிய சிகிச்சைகள்.

பாதிக்கப்பட்டவரையும் அவரோடு தொடர்பு கொண்டவர்களையும் 3 வாரங்களுக்குத் தனிமைப்படுத்தி உயர் சிகிச்சை அளிப்பது நோய் பரவுவதைத் தடுக்கும் வழிகளில் ஒன்று. அதோடு பெரியம்மைக்குச் செலுத்தப்படும் தடுப்பூசியை இந்த அம்மைக்கும் பயன்படுத்தினால் 85% பலன் கிடைக்கிறது. 1980-ல் பெரியம்மை நோய் ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகு, பெரியம்மைத் தடுப்பூசி செலுத்தப்படுவது உலக அளவில் நிறுத்தப்பட்டது. ஆகவே, 40 வயதுக்கும் குறைவாக உள்ளவர்களுக்கு இது பரவும் வாய்ப்பு அதிகம். அவர்களுக்கு இந்தத் தடுப்பூசியைச் செலுத்த முன்னுரிமை தரப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x