

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படங்கள் 'பேப்பர்' இதழில் வெளியானதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரப்பரப்பான விவாதங்கள் நடந்து வருகின்றன.
இந்திய நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வு, பணவீக்கம், வேலையின்மை தொடர்பான விவாதங்கள் எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு ரன்வீரின் புகைப்படங்கள் தேசிய அளவில் வைரலாக விவாதிக்கும் தலைப்பாகியது. தொலைக்காட்சிகளில் சிலவற்றில் ரன்வீரின் புகைப்படங்கள்தான் ப்ரைம் டைம் விவாதம். மீம்ஸ்கள், கடி ஜோக்குகள் என சமூக வலைதளங்களில் பலரும் ரன்வீர் புகைப்படங்கள் குறித்து தங்கள் கருத்துகளை பதிவிட்டனர்.
இன்னும் ஒருபடி மேலே சென்று ரன்வீர் சிங் புகைப்படங்கள் பெண்களையும், குழந்தைகளையும் பாதிக்கிறது என்று அவர் மீது எப்ஐஆரும் பதிவுச் செய்யப்பட்டுள்ளது. இந்தூரில் ஒரு குழுவினர் ரன்வீருக்கு ஆடைகளை அட்டை பெட்டியில் அனுப்பி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்த நிலையில், ரன்வீர் சிங்கை தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷாலும் தனது அரைநிர்வாண புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்தியாவுக்கோ, இந்திய திரையுலகத்துக்கோ நிர்வாண புகைப்படங்கள் புதிதல்ல. இதற்கு முன்னரும் இந்திய நடிகை, நடிகர்களின் நிர்வாண புகைப்படங்கள் சில இதழ்களில் வெளியாகியுள்ளது. ஆனால், முன் எப்போதும் இல்லாத எதிர்வினைதான் நம்மில் பலருக்கும் புதியதாக இருக்கிறது. இந்த எதிர்வினைகள் எல்லாம், கலை கண்ணோட்டத்திலிருந்து விலகி பிற்போக்குத்தனங்களையும், அடிப்படைவாதத்தை நோக்கி இந்தியா ஈர்க்கப்பட்டிருக்கிறதா என்ற கேள்வியையும், அச்சத்தையும் நமக்குள் ஏற்படுத்தி உள்ளது என்ற கருத்தையும் கவனிக்க முடிகிறது.
"எனக்கு தெரியும் இந்தப் புகைப்படங்கள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என... ஆனால், நான் நிச்சயம் இது தேசிய அளவில் செய்திகளில் விவாதிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கவில்லை. நான் கலைப் படைப்பாகத்தான் இதனை எடுத்தேன். பரப்பரப்பை ஏற்படுத்த எடுக்கவில்லை. நீங்கள் இதழில் வந்த ரன்வீரின் நேர்காணலையும், அந்த புகைப்படங்களையும் பார்க்கும்போது புரிந்துகொள்வீர்கள். நிர்வாணத்துடன் இயல்பாக இருப்பதைதான் அப்படங்கள் காட்டுக்கின்றன" என்கிறார் ரன்வீரின் புகைப்படங்களை இயக்கிய ஷிட்திஜ் கன்காரியா.
இத்தாலியின் பிரபல சிலை வடிவமைப்பாளரான மைக்கேலேஞ்சலவின் படைப்புகளிலிருந்த ஈர்ப்பின் பின்னணியில்தான் இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாகவும் ஷிட்திஜ் கன்காரியா பகிர்ந்திருக்கிறார்.
ரன்வீரின் புகைப்படங்கள் குறித்து எழுந்த விவாதங்களில் சில பதிவுகள் இங்கே...
Arun Bothra: ரன்வீரின் புகைப்படங்கள் குறித்து பெரும்பாலும் விமர்சிப்பது ஆண்கள்தான்.
ராம் கோபால் வர்மா: தனிப்பட்ட முறையில் இதனை நான் பாராட்டுகிறேன். பெண்கள் இவ்வாறான படைப்புகளை வெளியிடும்போது இதே மாதிரியான பாராட்டுகள் வரும் என்று நான் நம்புகிறேன்.
நிதி ராஸ்தன்: ரன்வீர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள எப்ஐஆர்களால் போலீஸாருக்கும், நீதிமன்றங்களுக்கும்தான் நேரம் விரயமாகும். இதை தவிர்த்து விவாதிப்பதற்கு நிறைய உள்ளன.
வித்யா கிருஷ்ணன்: டெல்லி மற்றும் ஹைதராபாத்தில் இரு பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இந்தியாவில் குரங்கு அம்மை தொற்று அதிகரித்து வருகிறது. மேகாலயாவில் பாலியல் தொழில் நடத்தி வந்த பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், இந்திய ஊடகங்கள் ரன்வீர் சிங் படங்கள் குறித்து விவாதம் நடத்தி வருகின்றன.
ராஞ்தீப்: ரூபாய் மதிப்பிழப்பு, நாடாளுமன்ற விவாதங்களைவிட ரன்வீர் சிங் படங்கள் சலசலப்பை உருவாக்கி உள்ளன.
இப்படி கருத்துகள் நீள்கின்றன. உண்மையில் கலை சார்ந்த படைப்புகள் எதிர்கொள்ளும் எதிர்வினைகள் சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. கலைப் படைப்புகளையும், இலக்கியங்களையும் ஒரு வட்டத்துக்குள் அடைக்க முயல்வது பெரும் பிழையை உருவாக்கும் என்பதுதான் நமக்கு நாகரிகக் கால வரலாறுகளும் உணர்த்துகின்றன.
அதன்படி, படைப்புகள் குறித்த நமது கருத்துகளை வைப்பதில் தவறில்லை. அவை நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ இருக்கட்டும். ஆனால், தீவிர எதிர்வினைகள் எதிர்மறையான சமூகத்துக்கே வழி வகை செய்யும் என்பதையும் புரிந்து கொள்ள முற்படுவோம்.