

ஓவியர் அச்சுதன் கூடலூர், தனது 77-வது வயதில் மறைந்த செய்தி மனதை வதைக்கிறது. இவர் இந்தியா முழுவதும் 23 தனிநபர் ஓவியக் கண்காட்சிகளை நடத்தியவர். நவீன அரூப ஓவியங்களைத் தீட்டுவதில் தனக்கென ஒரு சிறப்பான அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டவர். கேரளத்தில் பாரதப்புழா ஆற்றங்கரையில் வளர்ந்தவர். மலையாள எழுத்து, தமிழ் எழுத்து ஆகிய இரண்டோடும் நெருக்கம் கொண்ட ஓர் ஓவியர்.
காது மறைத்து வளர்ந்த சிகை, அடர்ந்த தாடி, மீசை, உள்ளுக்குள் ஏதோ ஒரு கேள்வியோடு பார்க்கும் பார்வை, மிருதுவாக வெளிவரும் வார்த்தைகள், தரைக்கு வலிக்காமல் ஒரு நடை என்று வாழ்ந்த அச்சுதன் கூடலூர் கண்ணுக்குள்ளேயே நிற்கிறார்.
பல ஆண்டுகளுக்கு முன் ஒரு பிரபல தொலைக்காட்சி விளம்பரத்தில் ஓவியராகவே தோன்றியதன் காரணமாக, ‘ஓவியர்’ என்றால் அவர் அச்சுதன் கூடலூர் போன்ற தோற்றத்தில்தான் இருப்பார் என்று மக்கள் மனத்தில் நினைக்கக்கூடிய அளவுக்குப் பிரபலமாக இருந்தார்.
அச்சுதன் என்ற கலைஞரைப் பற்றி, ஒரு கலை விமர்சகன் என்ற வகையில் சொல்வதென்றால், ‘ஓவியர் அச்சுதன் உள்ளுணர்வின் தீபத்தைக் கையிலேந்திப் பயணித்தவர்’ என்று சொல்வேன்.
பிரபஞ்சன் தங்கியிருந்த விடுதி அறையில் தோழராக இருந்தவர் அச்சுதன். ‘பிரபஞ்சன் சிறுகதைகள்’ நூலை அன்னம் பதிப்பகம் மூலம் கவிஞர் மீரா 1983இல் வெளியிட்டபோது, அதற்கான அட்டைப்படத்தை அச்சுதன் கூடலூரிடம் நான்தான் வாங்கினேன்.
முழுக்கமுழுக்க அரூப ஓவியராகத் திகழ்ந்த அச்சுதன், பிரபஞ்சன் நூலுக்கு அரை அரூப நிலையிலான காக்கைப் படம் ஒன்றை தீட்டி அட்டைப்படத்துக்குக் கொடுத்தார்.
சென்னையின் ஓவிய அடையாளமாகத் திகழ்ந்த அச்சுதன் கூடலூரின் மறைவு, சென்னை ஓவிய உலகத்துக்கு இழப்பு.
> இது, கவிஞர் இந்திரன் எழுதிய இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்