Published : 25 Jul 2022 03:21 PM
Last Updated : 25 Jul 2022 03:21 PM

“இப்போது என்னால் மீசை இல்லாமல் இருக்க முடியாது” - அனுபவம் பகிரும் ஷைஜா

கேரளாவைச் சேர்ந்த ஷைஜா அம்மாநிலத்தில் மிகவும் பிரபலமானவர். அவரது பிரபலத்திற்கு சுவாரசியமான காரணமும் இருக்கிறது. ஷைஜா மீசை வைத்திருக்கும் பெண்.

ஆண் என்றால் மீசையும், தாடியும்தான் அழகு என்ற நமது பொது சமூகத்தில் பெண்ணின் முகத்தில் கூடுதலாக இருக்கும் சில முடிகள் கூட கேலிகளுக்கு உரியவையாக பார்க்கப்படுகின்றன.

இதனை அவ்வப்போது பல பெண்கள் உடைத்திருக்கிறார்கள். இதற்கு பிரிட்டன் செயற்பாட்டாளர் ஹர்மான் கவுரை உலகம் அறிந்த முகமாக கூறலாம். தனது நீண்ட தாடிக்காக கின்னஸ் சாதனையிலும் ஹர்மான் கவுர் இடம்பிடித்திருக்கிறார்.

அந்த வகையில் பெண்களின் தேர்வு என்பது முழுக்க அப்பெண்ணின் உரிமையும், விருப்பத்தையும் சார்ந்ததே ஒழிய, அதில் சமூகத்துக்கும், பிறருக்கும் கருத்து கூறவதில் எந்த உரிமையும் கிடையாது என நமக்கு உணர்ந்தும் ஷைஜா, தனது வாட்ஸ் அப் ஸ்டேடட்ஸில் ”நான் எனது மீசையை விரும்புகிறேன்” என தன்னை விமர்சிப்பவர்களுக்கு நிரந்தர பதிலாக வைத்திருக்கிறார்.

மீசைக்கான காரணம் குறித்து ஹைஷா அளித்த நேர்காணலில் “நான் ஃபேஸ்புக்கில் எனது புகைப்படத்தை பதிவிடும்போதெல்லாம் பலரும் என்னை விமர்சிப்பார்கள். ஒரு பெண் எப்படி மீசை வைத்துகொள்வாள்... இது தவறில்லையா என பலரும் விமர்சிப்பார்கள்.

நான் அவ்வப்போது புருவத்திலுள்ள முடிகளை அகற்றிக்கொள்வேன். ஆனால் ஒருபோதும் எனது மீசையை எடுக்க நினைத்தது இல்லை.

5 வருடங்களுக்கு முன்னால், எனது மீசையை நான் அடர்த்தியாக வளர்க்க முடிவு செய்தேன். இப்போது என்னால் மீசை இல்லாமல் இருக்க முடியாது. இதன் காரணமாக கரோனா காலத்தில் நான் முகக்கவசம் அணிவதையே வெறுத்தேன். நான் மீசை வைத்திருப்பதனால் அழகாக இல்லை என்று நான் நினைத்ததே இல்லை. இது என்னை விமர்சிப்பவர்களுக்கான பதிலாக நான் கூறவில்லை. உண்மையில் இந்த மீசைதான் நான்.

எனது உடல் பிரச்சினைக் காரணமாக எனக்கு இதுவரை 5 அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன. இந்த அறுவை சிகிச்சைகளுக்கு இடையே இந்த மீசை எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

எனது குடும்பமும், எனது நண்பர்களும் எனக்கு எப்போதும் துணையாக இருக்கிறார்கள். கேரளா முற்போக்கான மாநிலம் என்றாலும் பெண்கள் தனியாக வெளியே சென்றால் இன்னமும் விமர்சிக்கும் நிலை உள்ளது. ஆனால், நான் அதுகுறித்து எல்லாம் அச்சம் கொள்வதில்லை. நான் தனியாகப் பயணிக்கிறேன். எனக்கு வேண்டியவற்றை நானே செய்து கொள்கிறேன்” என பூரிப்புடன் பகிர்கிறார்.

பெண்களின் உடம்பில் இருக்கும் முடிகளை நீக்குவதற்கான வணிகப் பொருட்களுக்கென ஒரு மாபெரும் சந்தையே உலக நாடுகளில் நடந்து கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் சமீப ஆண்டுகளாக உடல் சார்ந்த பிற்போக்குத்தனங்களை பல பெண்கள் உடைத்து வருகிறார்கள். அந்த வகையில் ஷைஜா, ஹர்மான் கவுர் போன்றவர்கள் பெரும் பாராட்டுக்குரியவர்கள்..!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x