

புதுச்சேரி: மலையாள இலக்கியத்தின் ஜாம்பவான்களில் ஒருவரான கவிஞர் பாலாமணியம்மாவுக்கு டூடுல் மூலம் பிறந்தநாள் வாழ்த்து சொல்லியிருக்கிறது கூகுள் நிறுவனம். இப்போது இது பரவலான மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
டெக்னாலஜி உலகின் சாம்ராட்களில் ஒன்று கூகுள். இந்நிறுவனத்தின் பல்வேறு சேவைகளை உலக மக்கள் பரவலாக பயன்படுத்தி வருகின்றனர். அதில் மிகவும் முக்கியமானது கூகுள் மற்றும் கூகுள் குரோம் வெப் பிரவுசர்கள். அவ்வப்போது பிரபல ஆளுமைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள், முக்கிய தினங்கள் போன்ற நாட்களில் சிறப்பு டூடுலை கூகுள் நிறுவனம் இந்த பிரவுசர்களில் வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் இன்று மலையாள கவிஞர் பாலாமணியம்மாவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது 113-வது பிறந்த நாள் இது. அதனை கொண்டாடும் வகையில் கேரளாவை சேர்ந்த கலைஞர் தேவிகா ராமச்சந்திரன் வரைந்த பாலாமணியம்மாவின் ஓவியத்தை டூடுல் வடிவில் கூகுள் வெளியிட்டுள்ளது.
யார் இவர்? - திருச்சூரில் உள்ள புண்ணயூர் குளம் என்ற கிராமத்தில் கடந்த 1909-இல் இதே நாளில் பிறந்தவர் பாலாமணியம்மா. அவரது எழுத்து பணிக்காக பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். முறைப்படி குருகுல கல்வி பயிலாத அவர் தனது தாய் மாமன் மூலம் அடிப்படை கல்வி பயின்றுள்ளார். பின்னர் 19 வயதில் வி.எம்.நாயரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அம்மா, முத்தஷி, மழுவிந்தே கதா போன்ற இவரது படைப்புகள் மிகவும் பிரபலம். 20-க்கும் மேற்பட்ட படைப்புகளை படைத்துள்ளார். கடந்த 2004 வாக்கில் அவர் உயிரிழந்தார். முழு அரசு மரியாதையுடன் அவரது இறுதி சடங்குகள் நடைபெற்றது. இப்போது அவருக்கு தான் டூடுல் போட்டு சிறப்பித்துள்ளது கூகுள்.