Published : 15 Jul 2022 07:44 PM
Last Updated : 15 Jul 2022 07:44 PM

குரங்கு அம்மை | அறிகுறிகள், நோய் பரவலை கண்டறிதல் & தடுப்பு உத்திகள்

புதுடெல்லி: இந்தியாவில் கேரள மாநிலத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டுள்ள நிலையில், குரங்கு அம்மை நோயின் அறிகுறிகள், நோய் பரவலைக் கண்டறியும் முறை, அதனைத் தடுக்கும் முறை குறித்து மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. அதன் விவரம்:

குரங்கு அம்மை (Monkeypox) நோய், ஒரு தீவிரமான வைரஸ் பாதிப்பு ஆகும். இது வழக்கமாக 2 முதல் 4 வாரங்களுக்கு நீடிக்கும் காலவரம்புக்கு உட்பட்ட நோய். குறிப்பிடத்தக்க சுகாதார சூழல் உடையவர்களுக்கோ, இல்லாதவர்களுக்கோ இந்நோயினால் தீவிர பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பொதுவான அறிகுறிகள்:

  • காய்ச்சல்
  • தோலில் சிறு கொப்பளங்கள் (முகத்தில் தொடங்கி கை, கால், உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் வரை பரவக்கூடும்)
  • நிணநீர் கணுக்கள் வீக்கம்
  • தலைவலி, தசைபிடிப்பு,
  • உடல் சோர்வு,
  • தொண்டை புண் மற்றும் இருமல்

பாதிப்புகள்:

  • கண் வலி அல்லது பார்வை மங்குதல்
  • மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, மூச்சு விடுவதில் சிரமம்,
  • உணர்வு மாற்றம், வலிப்பு
  • சிறுநீர் வெளியேறும் அளவு குறைதல்

அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளவர்கள்:

  • ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள்
  • இணை நோய் பாதிப்புடையவர்கள்
  • நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள்
  • பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள், ஓரின சேர்க்கை கொள்ளும் ஆண்

நோய் பரவுதல்:

நீண்டநாள் நெருங்கிய தொடர்புள்ளவர்களின் பெரிய சுவாச துளிகள் வாயிலாக, மனிதர்களில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும்.

உடல் ரீதியான நேரடி தொடர்பு உடையவர்கள் (பாலியல் தொடர்பு உட்பட), உடலில் இருந்து வெளியேறும் திரவங்களுடன் தொடர்பு அல்லது உடல் காயம் மற்றும் உடல் காயம் உடையவர்களுடன் மறைமுக தொடர்பு, அல்லது தொற்று பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய துணிகள், கறைபடிந்த உடைகள் மூலம் நேரடியாகவும், அறிய முடியாத பொருள்களிலிருந்து மறைமுகமாகவும் இது பரவக்கூடும்

தொற்று காலம்:

சொறி ஏற்படுவதற்கு 1 - 2 நாட்களுக்கு முன்பு வரை அனைத்து சிரங்குகளும் விழும் அல்லது குறையும் வரை

பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

  • நீங்களோ, உங்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கோ குரங்கு அம்மை அறிகுறி தென்பட்டால், உங்களுக்கு அருகாமையில் உள்ள சுகாதார மையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்
  • நோய் வாய்பட்டவர்கள் பயன்படுத்தும் படுக்கை உள்ளிட்ட எந்த பொருட்களைத் தொடுவதை தவிர்க்க வேண்டும்.
  • நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களை மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்த வேண்டும்.
  • தொற்று பாதிப்பு உடையவர்களுடன் தொடர்பு கொண்ட பிறகு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். உதாரணமாக சோப்பு மற்றும் தண்ணீரை பயன்படுத்தியோ அல்லது ஆல்கஹால் கலந்த கைசுத்திகரிப்பான்களை பயன்படுத்தியோ கழுவலாம்
  • நோயாளியை தனிமையில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும்
  • அருகில் உள்ளவர்களுக்கு நோய் பரவுவதை குறைப்பதற்கு, நோயாளியின் மூக்கு மற்றும் வாயை மறைக்கக்கூடிய மருத்துவ முககவசத்தை பயன்படுத்துதல், நோயாளியின் தோலில் இருந்து உதிரக்கூடிய சொரியை தூய்மையான துணி கொண்டு மறைப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x