இளைஞர்களின் உயிரைக் குடிக்கும் சாலை விபத்துகள்: இந்திய நிலையும் ஐநாவின் இலக்கும் 

இளைஞர்களின் உயிரைக் குடிக்கும் சாலை விபத்துகள்: இந்திய நிலையும் ஐநாவின் இலக்கும் 
Updated on
2 min read

சாலைகளில் திடீரென்று மின்னல் வேகத்தில் செல்லும் வாகனங்கள், சிக்னலை மீறி இரு வாகனங்களுக்கு இடையில் நுழைந்து செல்லும் வாகனங்கள் என்று சாலை விதி மீறல் தொடர்பான காட்சிகள் எல்லாம் சென்னை மக்களுக்கு மிகவும் பழக்கப்பட்ட காட்சிகள் தான். ஏன் இந்தக் கட்டுரையை படித்து கொண்டு இருக்கும் சிலர் கூட சாலை விதிகளை மதிக்காமல் சென்று இருக்கலாம்.

ஆனால் இதன் விளைவுகள் பலருக்கு தெரிவது இல்லை என்றே கூறலாம். உலக அளவில் சாலை விபத்துகளால் பதிவாகும் மரணங்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதை உடனடியாக குறைக்க வேண்டும் என்று கூறி இருப்பது மத்திய அரசோ, மாநில அரசோ இல்லை. உலகின் பல பிரச்சனைகளுக்கு தீர்வுகளை கூறும் ஐநா அமைப்புதான் இந்த கருத்தை கூறியுள்ளது.

இந்த சாலை விபத்துகளால் ஏற்படும் பாதிப்பின் விளைவுகளை உணர்ந்து இதற்கான உயர் மட்ட குழு கூட்டம் நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் கடந்த 30 மற்றும் 1ம் தேதி நடைபெற்றது. இதில் ஐநா சபையில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டம் தொடர்பாக ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆண்டுக்கு 1.35 மில்லியன் பேர் சாலை விபத்துகளில் மரணம் அடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 50 மில்லியன் பேர் படுகாயம் அடைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையை எதிர்வரும் 2030-க்குள் பாதியாக குறைக்க அனைத்து நாடுகளும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒருமனதாக உயர் மட்ட குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறிப்பாக இளைஞர்கள் தான் அதிக அளவு சாலை விபத்துகளால் மரணம் அடைகின்றனர். 5 முதல் 29 வயதுள்ள உள்ளவர்கள் மரணங்களுக்கு முக்கிய காரணமாக சாலை விபத்து உள்ளதாக இந்த உயர் மட்ட குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக லான்செட் இதழில் வெளியாக உள்ள ஆய்வு அறிக்கையில் நான்கு காரணங்களால் தான் அதிக அளவு சாலை விபத்துகள் ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது.

அதன்படி மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்குதல், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல், அதிக வேகம், சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்வது உள்ளிட்ட காரணங்களால் அதிக விபத்துகள் நடைபெறுவதாக லான்செட் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இதை குறைத்தால் பெரும்பலான மரணங்களை குறைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மது அருந்திவிட்டு வாகனம் இயக்குவதை தடுத்தால் 16,304 மரணங்களையும், முறையான தலைக்கவசம் அணிவதால் 51,698 மரணங்களையும், அதிக வேகத்தில் செல்வதை தடுத்தால் 3,47,258 மரணங்களையும், சீட் பெல்ட் அணிந்து சென்றால் 1,21,083 மரணங்களையும் தடுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவை பொறுத்த வரையில் வேக கட்டுப்பாட்டை அமல்படுத்தினால் 20,554 மரணங்களையும், முறையாக தலைக்கவசம் அணிவதால் 5683 மரணங்களையும், சீட் பெல்ட் அணிந்தால் 3204 மரணங்களையும் குறைக்கலாம் என்று இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சாலை போக்குவரத்து நிறுவனத்தின் தகவலும் இதை உறுதி செய்கிறது. இந்த துறையின் சமீபத்திய அறிக்கையின் படி இந்தியாவில் 1,31,714 மரணங்கள் சாலை விபத்துகள் பதிவாகி உள்ளது. இதில் 91,239 மரணங்கள் அதிக வேகத்தாலும், 39,798 மரணங்கள் தலைக்கவசம் அணியாத காரணத்தாலும், 26,896 மரணங்கள் சீட் பெல்ட் அணியாத காரணத்தாலும் பதிவாகி உள்ளது.

லான்செட் ஆய்வு உலகத்தில் சாலை விபத்துகளால் ஏற்படும் மொத்த மரணங்களில் 10 சதவீத மரணங்கள் இந்தியாவில் தான் நடைபெறகிறது என்று கூறுகிறது. ஆனால் இதை குறைக்க உலக அமைப்புகள் தொடங்கி உள்ளாட்சி அமைப்புகள் வரை எத்தனை திட்டங்களை செயல்படுத்தினாலும் பொதுமக்கள் முறையாக சாலை விதிகளை பின்பற்றினால் மட்டுமே விபத்துகளை குறைப்பது சாத்தியம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in