நியூசிலாந்தில் நடைபெற்ற தமிழ் - மாவோரி மொழி பண்பாட்டுச் சங்கமம் நிகழ்ச்சி

நியூசிலாந்தில் நடைபெற்ற தமிழ் - மாவோரி மொழி பண்பாட்டுச் சங்கமம் நிகழ்ச்சி
Updated on
1 min read

நியூசிலாந்து: நியூசிலாந்து நாட்டின் ரோதோருவா நகரில் முதல் முறையாக தமிழ் - மாவோரி மொழி, பண்பாட்டுச் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.

அவொத்தியரோவா நியூசிலாந்து தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு (ANTS) நிறுவனம் மற்றும் பல்வேறு சமூக, அரசாங்க நிறுவணங்கள் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைந்து நடத்தினர்.

சென்ற வாரம் மாவோரி மக்கள் அனுசரிக்கும் 'மாட்டாரிகி' (புத்தாண்டு) கொண்டாடப்பட்டது. இது வரலாற்றில் முதன்முறையாக நிலத்துக்குரிய தொல்முதற்குடியான பண்டிகை ஆகும். மேலும் அன்றைய தினம் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது, வரலாற்று சாதனையாக பார்க்கப்பட்டது. இதனையொட்டி, தமிழ் - மாவோரி பண்பாட்டுக் கொண்டாட்ட நிகழ்வும் நடந்தது.

இந்நிகழ்வு மாவோரி மக்களின் பண்பாட்டுத் தளமான 'மாறாய்' ஒன்றில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், இந்நாட்டுப் பழங்குடியினரின் உரிமைகளை் குறித்தும், வரலாறு மற்றும் பண்பாடு குறித்தும் புலம்பெயர்ந்தோர் அறிந்துக்கொள்ளும் வகையில் பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில், மாவோரி மக்கள் தமிழ் மக்களை தங்களது பண்பாட்டு வரவேற்பு முறைப்படி, தங்களது மூதாதையர்களை நினைவுகூர்ந்து வரவேற்றனர்.

இந்த பாரம்பரிய வரவேற்பில் மாவோரி பாடல்களும், தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டன.பின்னர் நடந்த பாரம்பரிய தடி விளையாட்டு, நெசவு பயிற்சிகளில் சிறுவர்களும் கலந்து கொண்டனர்.

ஒருநாள் முழுவதும் இரு மொழிகள் சார்ந்தும், தமிழ் மொழியை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்வதற்கான வழிமுறைகள் குறித்தும், மாவோரி மொழியை தமிழர்கள் எவ்வாறு அணுகலாம் என்பது குறித்தும் பல்வேறு கருத்தரங்குகளும் நடைபெற்றன. இறுதியில் இரு பண்பாடுகளும் அடங்கிய கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்ச்சியில் நியூசிலாந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in