Published : 02 Jul 2022 06:06 PM
Last Updated : 02 Jul 2022 06:06 PM

TTF வாசன் நடத்திய சந்திப்பும் ‘2K கிட்ஸ்’ வாழ்வியலும் - ஒரு விரைவுப் பார்வை

ர.முகமது இல்யாஸ்

TTF வாசன் நடத்திய ‘மீட்டப்’பைத் தொடர்ந்து பலரும் அதுகுறித்து பேசி வருகின்றனர். அதன் சாதகங்களையோ, பாதகங்களையோ பேசுவது முக்கியம் அல்ல. ‘பாப்புலர் கல்ச்சர்’ என்பது நாம் விரும்பும், நமக்குத் தெரியாத வேறொரு உலகத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது.

உதவிப் பேராசிரியராக கடந்த ஓராண்டில் கல்லூரி மாணவர்களுடன் (2K Kids) பழகும் வாய்ப்பு கிடைத்தது. நாம் வாழும் வாழ்க்கை, நம் உரையாடல்களில் இருக்கும் பொருள்கள், நமது தேவைகள், ஆசைகள் முதலான அனைத்திற்கும் அப்பாற்பட்டது 2கே கிட்ஸ் வாழ்வு. இணையம் தோன்றிய பிறகு, பல்வேறு கருத்து மோதல்கள் நிகழ்ந்திருக்கின்றன; பல்வேறு கருத்துகளின் காரணமாக இணைப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால், இங்கு ஏற்பட்டிருப்பது ஒரு தலைமுறையின் இடைவெளி. தொண்ணூறுகளில் பிறந்து நைட்டீஸ் கிட்ஸ்களுக்கும், 2கே கிட்ஸ்களுக்கும் இடையிலான தொலைவுமே மிக அதிகம்.

உயர் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமே இங்கு குறிப்பிடவில்லை. எனது மாணவர்களில் பெரும்பாலானோர் ப்ளூ காலர் தொழிலாளர்களின் குழந்தைகள். அவர்களின் சிந்தனை ஓட்டம் கூட வித்தியாசமானதுதான். இந்த ஒரு ஆண்டில் நான் பார்த்த சுமார் நூற்றுக்கணக்கான மாணவர்களுள் ஃபேஸ்புக் பயன்படுத்துவோரைக் கணக்கிட்டால், அந்த எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணி விடலாம். ஃபேஸ்புக்கையே ‘பூமர் மீடியம்’ என்று கருதும் இளைஞர்கள்தான் நமது அடுத்த தலைமுறையினர். தலித், சிறுபான்மையினச் சமூகங்களைச் சேர்ந்த வெகுசிலரைத் தவிர்த்து பெரும்பாலும் அரசியலில் இருந்து விலகியே நிற்பவர்கள்.

காலையில் கல்லூரி வருவார்கள்; மாலையில் ஸ்விக்கியில் டெலிவரி செய்வார்கள்; ஆட்டோ ஓட்டுவார்கள். ஆனால், வாழ்வாதாரம் பற்றியோ, அதில் அரசியல் தலையீடு, சமூக சிக்கல்கள் பற்றியோ பெரிதான புரிதல் இருக்காது. இதேபோல இருந்த முந்தைய தலைமுறையிரைப் போல முழு அறியாமையிலும் இருக்க மாட்டார்கள். அவர்களின் உலகமே வேறு.

சமீபத்தில் ‘டான்’ திரைப்படம் வெளியானபோது, சிவகார்த்திகேயனும், ப்ரியங்கா மோகனும் ஒருவருக்கொருவர் காட்டிக் கொள்ளும் காதல் சின்னம், சிவகார்த்திகேயன் - சூரி கொரியன் காமெடி முதலானவற்றைப் பலரும் ‘இதெல்லாம் காமெடியா?’ என்று கேட்டிருந்தார்கள். காமெடி என்பது பிற ரசனைகளைப் போலவே மிகவும் சப்ஜெக்டிவான விவகாரம். அதில் இந்தக் காமெடிகள் 2கே கிட்ஸ்களிடம் சிறப்பாக ஒர்க் அவுட் ஆகியிருந்தன. காரணம், இவை கொரியன் BTS-ல் இருந்து எடுக்கப்பட்டவை. உறவுக் கதைகளையும், இசையையும் கொரியர்களிடம் இருந்து கற்றுக் கொள்கிறார்கள் இன்றைய இளம் தலைமுறையினர். அனிருத் இசையையே நைட்டீஸ் கிட்ஸ் பூமர்கள் பலர் வெறுப்பதும் தலைமுறை இடைவெளியின் அடையாளம் தான்.

TTF வாசனைப் பொறுத்தவரையில், அவரது கதை சற்றே rags to riches பாணியிலானதுதான். அவர் மீதான ஆதரவும், விமர்சனங்களும் இருந்தாலும், தற்போதைய இளம் தலைமுறையினர் விரும்பும் வாழ்க்கையை அவர் வாழ்வதால்தான் ஆதர்சமாகக் கொண்டாடப்படுகிறார் என்பது என் கருத்து. TTF வாசன் மீட்டப்பில் நிகழ்ந்திருப்பது ‘க்ரிஞ்ச்’ என்று சுருக்கி விட முடியாது. சமூகத்தின் பாப்புலர் கல்ச்சரில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தின் விளைவுகள் இவை.

2கே கிட்ஸ் மத்தியில் பிரபலமடைந்திருக்கும் ஒவ்வொருவரையும் இவ்வாறு மதிப்பிட முடியும். கழிவறைகளில் ஆபாசமாகக் கிறுக்கிக் கொண்டிருந்தவர்கள் ஜிபி முத்துவுக்குக் கடிதம் எழுதுகிறார்கள். நாம் வாழ விரும்பும் லைஃப்ஸ்டைலை இர்ஃபான் வாழ்வதால் அவர் கோடீஸ்வரராகி வருகிறார். காலத்தின் போக்கில் இவற்றை நாம் தடுக்க முடியாது.

தமிழ்ச் சமூகம் என்பது இன்றும் எம்ஜிஆர் உயிருடன் இருக்கிறார் என நம்பி இரட்டை இலைக்கு ஓட்டுப் போடும் ஒன்று. ‘ஆட்டுக்கார அலமேலு’ படத்தின் ஆட்டைப் பார்க்க மக்கள் திரளாக ஒவ்வொரு ஊரிலும் கூடினார்கள் என்பது 40 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த வரலாறு. இந்த விவகாரத்தில் 2கே கிட்ஸை ’ ‘க்ரிஞ்ச்’ என்று சுட்டிக்காட்டி, நாம் இளமையாக இருப்பதாக நம்மையே ஏமாற்றிக் கொள்ளலாம்.

காலம் ஓடிக் கொண்டே இருக்கும். காட்சிகள் மாறிக் கொண்டே இருக்கும். அவை யாருக்காகவும் காத்திருக்காது.

- ர.முகமது இல்யாஸ்

| யூடியூபில் பிரபல டிராவல் வ்லாக்கராக வலம் வரும் கோவையைச் சேர்ந்த டிடிஎஃப் வாசன் எனும் இளைஞருக்கு 27 லட்சத்துக்கும் மேற்பட்ட சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர். இவரது ஃபாலோயர்களில் பெரும்பாலானோர் இளம் தலைமுறையினர். இவர் தனது பிறந்தநாளை ஒட்டி, தன்னைப் பின்தொடர்வோருடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தார். இந்த மீட்டப்பில் ஆயிரக்கணக்கனோர் திரண்டதால் போலீஸ் எச்சரிக்கும் அளவுக்கு ஆகிவிட்டது. திரண்ட ஆயிரக்கணக்கானோரில் பலரும் 20 வயதுக்கு உட்பட்டவர்கள். இவரது இந்த ‘மாஸ்’ சந்திப்பு குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் வலுத்துள்ள நிலையில், இந்தப் போக்கு குறித்ததுதான் மேற்கண்ட சிறு கட்டுரை. |

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x