

”ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ளுங்கள்... ஒரு பல்லை இழந்துவிடுங்கள்” என்று பழமொழி நைஜீரியாவில் மிகவும் பிரபலம்.
அறிவியலின்படி குழந்தைப் பேறு என்பது பெண்களின் ஆரோக்கியத்தில் நிரந்தர மாற்றத்தை ஏற்படுத்துகிறது. எனினும், இதில் விநோதமாக ஒரு பெண் குழந்தை பெறும் எண்ணிக்கை பொறுத்து அப்பெண்ணின் பல்லின் ஆரோக்கியம் அமையும் என்ற கருத்து நைஜீரியாவில் நம்பப்படுகிறது. ஆனால், இது உண்மையா என்ற கேள்விகள் இன்னறவும் எழுப்பப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வுகளும் நடத்தப்பட்டன. பெண்களின் குழந்தைப் பேறுக்கும், பற்களுக்கும் தொடர்பு உள்ளதா என்று பல்வேறு ஆய்வுகள் அமெரிக்கா, உகாண்டா, நைஜீரியா போன்ற நாடுகளில் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், நைஜீரியாவில் ஒபாஃபெமி அவோலோவோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எலிசபெத் ஓசிக்பே தலைமையில் இதுகுறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “நாங்களும் பல்வேறு ஆய்வுகளை நடத்தினோம். இதன் முடிவில் குழந்தைப் பேறுக்கும், பற்கள் இழப்புக்கும் தொடர்பு உள்ளதை நாங்கள் கண்டறிந்தோம். வடக்கு நைஜீரியாவில் கிராமப் பகுதியில் உள்ள 612 பெண்களிடம் இந்த ஆய்வை நடத்தினோம். அவர்கள் அனைவரும் 13 - 65 வயதுக்குட்டப்பட்டவர்கள். இதில் 14% பெண்கள் தங்கள் பற்களை இழந்திருந்தனர்.
இதில் 5 குழந்தைகளைப் பெற்று அதிக அளவில் பற்களை இழந்த பெண்ணை ஒப்பிடுகையில், அவரது அதே வயதில் குறைந்த குழந்தைகளைப் பெற்ற பெண்ணுக்கு அந்த அளவு பற்கள் இழப்பு ஏற்படவில்லை என்பது தெரியவந்தது.
இதன் மூலம் அதிக குழந்தைகளை பெறும் பெண்கள் அதிக பற்களை இழக்கி்றார்கள் என்பதை நாங்கள் கண்டறிந்தோம், குழந்தைப் பேறு மட்டுமல்ல, சமூக - பொருளாதார நிலைக்கும் பெண்களின் பற்கள் இழப்பில் பங்குண்டு. மேலும் வயது அதிகரிப்பும் பற்கள் இழப்புக்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
பல் இழப்பு என்பது வெறும் பற்கள் இழப்பு மட்டுமல்ல; பற்கள் முக அழகுக்கு முக்கியமானவை. பல் இழப்பு என்பது ஒரு நபரை சமூக ரீதியாகவும், செயல்பாட்டு ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பாதிக்கிறது. அவர்களின் வாழ்க்கைத் தரத்தை எதிர்மறையாக பாதிக்கிறது. பல் இழப்பு என்பது அழகு, சுயமரியாதை, சமூக தொடர்பு ஆகியவற்றை பாதிக்கிறது.
குழந்தைப் பேறு காலங்களில், குறிப்பாக பல குழந்தைகளைப் பெற்ற பெண்கள் வாய் தொடர்பான ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துக் காட்டுவதே இந்த ஆய்வின் நோக்கம்.
நைஜீரியாவைப் பொறுத்தவரை, அங்கு பல் தொடர்பான மருத்துவமனைகள் மிகவும் குறைவு. இதன் காரணமாக ஆரம்பத்தில் ஏற்படும் சிறிய பல் பிரச்சினைகளைக் கூட சரியாக கவனிக்க முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்படுகிறார்கள். இதன் காரணமாகவும் பலர் தங்கள் பற்களை இழக்கிறார்கள்.
மேலும், பற்கள் இழப்பு என்பது உங்கள் உயிர் இழப்போடு தொடர்புடையது அல்ல. இந்த எண்ணம் காரணமாக மக்கள் யாரும் இதற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை.
வாய்வழி ஆரோக்கியம் என்பதும் நைஜீரியாவில் பொது சுகாதாரத்தில் இணைக்கப்பட வேண்டும். பொதுமக்களுக்கும், குறிப்பாக கிராமப்புற சமூகங்களில் உள்ளவர்களுக்கும் பல் பராமரிப்பு கிடைக்கவும், சிகிச்சைகள் எளிதில் அணுகக் கூடியதாகவும் இருக்க வேண்டும். கர்ப்பக் காலத்தில் பெண்கள் தங்கள் வாய் தொடர்பான ஆரோக்கியத்தையும் கண்காணிக்க வேண்டும். வாய்வழி சுகாதார விழிப்புணர்வு நிச்சயம் தேவை” என்று தெரிவித்தார்.