தமிழக அரசுக்கும் நீதித் துறைக்கும் நன்றி சொல்லிய பேரணி

தமிழக அரசுக்கும் நீதித் துறைக்கும் நன்றி சொல்லிய பேரணி
Updated on
2 min read

திரும்பிய பக்கமெல்லாம் வானவில் வண்ணங்களோடும் எண்ணங்களோடும் எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ. சமூகத்தினரின் பிரம்மாண்டமான சென்னை வானவில் சுயமரியாதை பேரணி (ஜூன் 26 ) எழும்பூர், லாங்ஸ் தோட்டச் சாலையை மூழ்கடித்தது.
`என் உடல் என் உரிமை’, `காதல் பொது மொழி’, `நாங்கள் எதிர்ப் பால் ஈர்ப்புள்ளவர்கள்; ஆனால் குறுகிய மனம் படைத்தவர்கள் அல்ல!’
இப்படிப்பட்ட வாசகங்களைத் தாங்கிய பதாகைகளை ஏந்தியபடி தங்களின் குடும்பத்தினரோடும் நண்பர்களுடனும் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மக்களின் திரளான கூட்டம், ஒரு திருவிழா வைபவத்தைக் கொண்டுவந்தது.

மனங்களை விசாலப்படுத்திய மக்களவை உறுப்பினர்

ஒவ்வொருவரின் உதடுகளும் ஹேப்பி பிரைடு... ஹேப்பி பிரைடு... என்றுதான் ஒலித்தன. மனத்தின் ஆழத்திலிருந்து வெளிப்பட்ட அந்த வார்த்தைகளில்தாம் எவ்வளவு அடர்த்தி, எவ்வளவு போராட்டம் அடங்கியிருக்கிறது என்பதை அவர்களை நெருக்கமாக வாசிக்கும் அத்தனை பேருக்கும் தெரியும்.

சென்னை வானவில் சுயமரியாதை பேரணியைத் தொடங்கிவைத்த மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், "மூன்றாம் பாலினத்தவருக்கு உரிய மரியாதையை நல வாரியத்தின் மூலம் செயல்படுத்திக் காட்டியது கலைஞர் அரசு. அவரின் வழியில் தமிழக முதல்வரும் பல நலத் திட்டங்களை மாற்றுப் பாலினத்தவர் சமூகத்துக்கு ஏற்படுத்தித் தருகிறார். மக்களவை உறுப்பினர் கனிமொழியும் திருச்சி சிவாவும் மாற்றுப் பாலினத்தவர் சமூகத்துக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதை நீங்கள் அறிவீர்கள். மாற்றுப் பாலினத்தவரின் நல வாழ்வுக்கும் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் தரும் அரசாகத் தமிழக அரசு இருக்கும்" என்றார்.

எல்லாரும் ஓரினம்!

பாலினப் பாலீர்ப்பு சிறுபான்மையின நபர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களை உள்ளடக்கிய முறையான மற்றும் முறைசாராக் குழுக்களின் பின்னலான தமிழ்நாடு வானவில் கூட்டமைப்பு நடத்திய சுயமரியாதை பேரணியின் நிறைவில், `சகோதரன்' தன்னார்வ அமைப்பின் பொது மேலாளர் ஜெயா, "நால்சா எதிராக இந்திய ஒன்றியம் (2014) என்ற வழக்கின் மைல்கல் தீர்ப்புக்காக மரியாதைக்குரிய இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். சட்டம் மற்றும் கொள்கையின் அனைத்து அம்சங்களிலும் இந்தத் தீர்ப்பின்படி, பாலினத்தைச் சுயமாக அடையாளம் காணும் உரிமையை அங்கீகரிக்கவும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் திருநர்களுக்கான (திருநங்கை மற்றும் திருநம்பி) இடஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து விதிகளையும் அமல்படுத்தவும் மாநில மற்றும் ஒன்றிய அரசுகளைக் கேட்டுக் கொள்கிறோம்.

பிரிவு 377 சட்டத்தை விளக்கி வயது வந்தோர் ஒருமித்த ஒப்புதலுடன் புரியும் தன்பால் உறவு குற்றமற்றது என்ற நவ்தேஜ் ஜோஹரின் (2018) முக்கியத் தீர்ப்புக்காக மரியாதைக்குரிய இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இத்தீர்ப்பினை அனைத்து அரசு துறைகளுக்கும் பரப்புதல் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு, தன்பால் மற்றும் இருபால் ஈர்ப்பு கொண்ட மக்களுக்கு எதிரான களங்கம் மற்றும் பாகுபாட்டினை முடிவுக்குக் கொண்டுவரவும் சம உரிமைகள் கிடைக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

எஸ்.சுஷ்மா எதிராக போலீஸ் கமிஷனர் (2021) என்ற வழக்கின் தீர்ப்புக்காக சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் அவர்களுக்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். பாலினப் பாலீர்ப்புச் சிறுபான்மையின சமூகம் மற்றும் அவர்களுக்கு உதவும் சமூகப் பணியாளர்களுக்கு எதிரான வன்முறையினை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து அதிகாரிகளும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். பெற்றோர்களும் தங்களது மாற்றுப் பாலின பாலீர்ப்பு கொண்ட குழந்தைகளை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதோடு, பாலீர்ப்பு மற்றும் பாலின அடையாளம் காரணமாக எழும் அனைத்து வகையான வன்முறைகளையும் நிறுத்துங்கள் என்றும் வேண்டுகிறோம்.

திருநர் நல வாரியத்தில் திருநம்பிகளை உறுப்பினர்களாகச் சேர்த்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதோடு, அனைத்து அரசுத் திட்டங்கள் மற்றும் செயல் திட்டங்களிலும் அவர்களுக்குத் திருநங்கைகளுக்கு இணையான அங்கீகாரம் வழங்கப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.

இத்தனை பெரிய பேரணியில் தமிழக அரசுக்கும் நீதித் துறைக்கும் திருநர் சமூகத்தினர் சார்பாக ஜெயா நன்றி கூறியது, நிகழ்ச்சியை நெகிழ்வான தருணமாக்கியது!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in