

நாட்டுப்புறக் கலைகள் எல்லாமே மண்ணோடும் மரபோடும் தொடர்புடையவை. ஆண்டு முழுவதும் உழைத்து உழைத்துக் களைத்துப்போகும் மக்கள், இதுபோன்ற கலைகள் மூலம் தங்களுக்குத் தாங்களே உற்சாகமும் புத்துணர்வுயும் அளித்துக்கொள்வதும் இந்தக் கலைகளின் அங்கம். நாட்டுப் பாடல்கள், கதைகள் வாயிலாக அந்தந்த மண்ணின் கதையும் மக்களின் வாழ்க்கை முறையும் பகிரப்படும்.
பொதுவாக வீரத்தைச் சொல்லும் கலைகள் இங்கே ஏராளம். நாட்டுப்புறக் கலைகள் வழிவழியாக வருகிறவை என்பதால் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையான கலை வடிவம் வெளிப்படுத்தப்படும். ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு நாட்டுப்புறக் கலைகள் வழக்கில் இருந்தாலும் வாலாஜாப்பேட்டை நகரின் அடையாளமாகத் திகழ்கிறது கொக்கலிக்கட்டை ஆட்டம். நீண்ட மரக் கட்டைகளைக் கால்களில் கட்டிக்கொண்டு ஆடும் ஆட்டம் இது.
கொக்கின் நீண்ட கால்களைப் போல நீளமான மரக்கட்டைகளைக் கட்டிக்கொண்டு ஆடியதால் இந்த ஆட்டத்தை ஆரம்பத்தில் ‘கொக்குக் கால் ஆட்டம்’ என்று அழைத்திருக்கலாம் என்றும் அதுவே காலப்போக்கில் ‘கொக்குக்கால் கட்டை ஆட்டம்’ என்று மாறி தற்போது ‘கொக்கலிக்கட்டை’ என்று வழங்கிவருவதாகச் சொல்லப்படுகிறது. இந்த ஆட்டத்தை வேலூரில் உள்ளவர்களும் ஆடினாலும் இதன் பூர்விகம் வாலாஜாப்பேட்டைதான் என்கிறார் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கொக்கலிக்கட்டை ஆட்டத்தில் ஈடுபட்டுவரும் கலைஞர் சேட்டு.
பெரும்பாலான நாட்டுப்புறக் கலைகள் ஆன்மிகத்துடனும் தெய்வ வழிபாட்டுடனும் தொடர்புடையவையாக இருக்கும். அந்த வகையில் கொக்கலிக்கட்டை ஆட்டமும் கங்கையம்மன் திருவிழாவுடன் தொடர்பு கொண்டது. “இந்த ஆட்டம் தொடங்கி அறுபது வருசத்துக்கு மேல இருக்கும்னு நினைக்கிறேன். வாலாஜாப்பேட்டை கச்சால நாயக்கர் ஏரியாவுல ஒவ்வொரு வருசமும் கங்கையம்மன் திருவிழா நடக்கும். அப்போ சாமி ஊர்வலம் வரும்போது கால்ல கட்டையைக் கட்டிக்கிட்டு ஆடுவாங்க. எங்க முன்னோருங்க ஆரம்பிச்சு வச்சதை தலைமுறை தலைமுறையா இன்னைக்கு வரைக்கும் ஆடிக்கிட்டு இருக்கோம்” என்கிறார் சேட்டு.
வலு தாங்கும் நுனா
இந்த ஆட்டத்தை குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே தொடர்ந்து ஆடிவருகின்றனர். நுனா மரம் வலு தாங்கும் என்பதால் அதன் கட்டைகளைத்தான் இதற்குப் பயன்படுத்துகிறார்கள். பத்து முதல் பதினைந்து வயதுவரையுள்ள நுனா மரத்தைத் தேர்ந்தெடுத்து, கட்டைகளாக அறுத்தெடுக்கிறார்கள். அவை உலுத்துப் போகாமல் இருப்பதற்காகச் சேற்றில் இருபத்தைந்து நாட்களுக்கு ஊறவைக்கிறார்கள். சேற்றில் ஊறி வலுப்பெற்ற கட்டைகளை அவரவர் விருப்பத்துக்கு ஏற்பச் செழுமைப்படுத்தி, வண்ணமடிக்கிறார்கள். மூன்று அடியில் ஆரம்பித்து ஏழு அடிவரை கட்டை தயாராகிறது. ஆரம்பத்தில் ஆண்கள் மட்டுமே ஆடிய இந்தக் கொக்கலிக்கட்டை ஆட்டத்தைத் தற்போது பெண்களும் ஆடிவருகின்றனர்.
“எங்க ஏரியாவுல இருந்து மட்டும் கிட்டத்தட்ட 200 பேருக்கு மேல இந்த ஆட்டத்தை ஆடுவோம். இப்போ பத்து, பதினைஞ்சு பொண்ணுங்களும் எங்க குழுவுல இருக்காங்க. வெளியூர் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் அவங்க வரமாட்டாங்க” என்று சொல்லும் சேட்டு, கண்ணா நாயக்கர் என்பவரிடம் இருந்து இந்தக் கலையைக் கற்றதாகச் சொல்கிறார்.
“அவர்தான் என் குரு. இப்போ அவரு உயிரோட இல்லைன்னாலும் அவர் சொல்லிக்கொடுத்துட்டு போன கலை உயிரோட இருக்கு. இது ஒரு வீர விளையாட்டு. ஆர்வமும் தைரியமும் இருந்தா யார் வேணும்னாலும் இந்த ஆட்டத்தைக் கத்துக்கலாம். பதினைஞ்சு நாள்ல ஆட்டம் பிடிபட்டுவிடும். துடியான ஆளா இருந்தா பத்து நாள்ல கால்ல கட்டை கட்டிக்கலாம்” என்று உற்சாகத்துடன் பேசுகிறார் சேட்டு.
தொடரும் வீர விளையாட்டு
அம்மன் திருவிழாவையொட்டி தோன்றிய கலை என்பதால் பெரும்பாலும் மஞ்சள் நிறத்தில் உடையணிந்து, காலில் சலங்கை அணிந்துகொள்கிறார்கள். கழுத்திலும் கைகளிலும் பூமாலையைச் சுற்றிக் கொண்டு, கைகளில் வண்ணத் துணிகளைப் பிடித்தபடி தாளத்துக்கு ஏற்ப ஆடுகிறார்கள். பாடலோ, கதையோ எதுவும் இல்லாமல் உயரமான கட்டைகள் மீது நின்றபடி தாளத்துக்கு ஏற்ப கைகளை அசைத்து அவர்கள் ஆடும் ஆடல் மக்களை வெகுவாகக் கவர்கிறது. லேசாக கவனம் பிசகினாலும் கீழே விழுந்துவிடுகிற ஆபத்து இருந்தாலும் இதுவரை அப்படி யாரும் சமநிலை தவறி விழுந்ததில்லையாம். 1985ஆம் ஆண்டு டில்லியில் நடந்த குடியரசு தினவிழா கொண்டாட்டத்தில் கொக்கலிக்கட்டை ஆட்டம் இடம்பெற்றதைப் பெருமிதத்துடன் நினைவுகூர்கிறார் சேட்டு.
ஆரம்பத்தில் திருவிழா காலத்தில் மட்டும் நடைபெற்ற இந்த ஆட்டம், காலமாற்றத்துக்கு ஏற்ப தன் எல்லைகளை விரிவுபடுத்தியிருக்கிறது. தற்போது அரசியல் கூட்டங்கள், திரைப்படங்கள் எனப் பொது நிகழ்வுகளிலும் இந்தக் கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். தெருக்கூத்து போன்ற பாரம்பரியக் கலைகளுக்கு இளைய தலைமுறையிடம் போதிய வரவேற்பு இல்லை. ஆனால், கொக்கலிக்கட்டை ஆட்டத்தில் நிறைந்திருக்கும் வீரமும் சவாலும் இளைஞர்கள் பலரை இழுத்துவந்திருக்கின்றன. முதியவர்களும் இளைஞர்களுமாக இரண்டு தலைமுறையின் பிரதிநிதிகள் ஒன்று சேர்ந்து ஆட, தலைமுறைகளைக் கடந்தும் உயிர்ப்புடன் இருக்கிறது கொக்கலிக்கட்டை ஆட்டம்!