

மாற்றுப் பாலினத்தவர், எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.எ. சமூகத்தினரின் சுயமரியாதைப் பேரணி நடக்கும் மாதத்தை ஒட்டி அண்மையில் ‘தோழி, ஓரினம்’ தன்னார்வ அமைப்பினர் `கமிங் அவுட்' எனப்படும் தங்களின் பாலின அடையாளத்தை, பாலியல் ஒருங்கிணைவை வெளிப்படுத்திக் கொள்வதில் இருக்கும் தயக்கங்கள், சிக்கல்களைப் பற்றிய உரையாடலை நடத்தினர்.
புனித தோமையர் மலையில் இருக்கும் புனித டொமினிக் பள்ளியில் மாற்றுப் பாலினத்தவர் தங்களைக் குடும்ப, சமூக அமைப்பில் வெளிப்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து தோழி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுவேதாஸ்ரீ பேசினார். தொடர்ந்து தன்னுடைய குடும்பத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் ஓரினம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான அலெக்ஸ் முருகபூபதி.
அலெக்ஸ், ஸ்வேதாஸ்ரீ இருவருமே தங்களின் `கமிங் அவுட்' குறித்து நிகழ்வுகளை உரையாடல் பாணியில் வெளிப்படுத்தியது, நிகழ்ச்சியில் பங்கெடுத்தவர்களிடையே இருந்த இறுக்கத்தைப் போக்கும் வகையில் இருந்தது. இதன் பலனாக வந்திருந்த பலரும் தங்களின் `கமிங் அவுட்' குறித்த நினைவுகளை மிகவும் நம்பிக்கையுடன் பகிர்ந்து கொண்டனர். அப்படிப் பேசியவர்களில் பள்ளி இறுதி முடித்த மாணவன் முதல் இரண்டு குழந்தைகளைப் பெற்ற தாய், தற்போது திருநம்பியாக வெளிப்படுத்திக் கொண்ட தந்தை வரை பலர் இருந்தனர்.
வெளிப்படுத்துதல் குறித்து அலெக்ஸ் ஆரோக்கியமான சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்:
"பொதுவாக நம்முடைய பாலின அடையாளத்தைப் பணி புரியும் இடத்தில் பகிர்ந்துகொள்வோம். ஆனால் நம்முடைய பாலியல் ஒருங்கிணைவை விருப்பத்தைப் பகிர்ந்து கொள்ளமாட்டோம். தன்பால் ஈர்ப்புள்ளவர்களின் பாலியல் விருப்பத் தேர்வை பணிபுரியும் இடத்திலும் தெரிவிக்கும் போக்கை ஆரோக்கியமாக ஆதரிக்கும் நிலை வளரவேண்டும்.
பன்னாட்டு நிறுவனங்கள் பலவற்றிலும் தன்பால் ஈர்ப்புள்ள பணியாளர்களுக்கான பணிக்கொடைகளை, காப்பீடுகளை அவர்கள் விரும்பும் அவர்களின் இணையர்களுக்குத் தருவதற்கான மாற்றங்களை எடுத்துவருகின்றன. இந்தியச் சட்டங்களைப் பொறுத்தவரை குடும்ப அமைப்பு என்பது ஆண், பெண், குழந்தை என்பதாகவே இருக்கிறது. அந்தக் குடும்ப அமைப்பில் எங்களைப் போன்ற தன்பால் ஈர்ப்புள்ளவர்களின் அன்பும் சேரவேண்டும் என்பது எங்களின் விருப்பம்.
மாற்றுப் பாலினத்தவருக்குப் பெரிதும் சவாலான பாலுறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை, லேசர் சிகிச்சை போன்றவற்றுக்கு மருத்துவக் காப்பீடுகளைப் பயன்படுத்திக் கொள்ளும் நிலையை அரசு உருவாக்க வேண்டும். இது மாற்றுப் பாலினத்தவருக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும்.
பொது இடங்களில் பாலின அடையாளமற்ற பொதுக் கழிப்பிட வசதியை ஏற்படுத்தித் தரவேண்டும் என்பது எங்களைப் போன்றவர்களின் நீண்ட நாள் நிறைவேறாத கோரிக்கை. அதையும் அரசு நிறைவேற்றித் தரவேண்டும்."